ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (13:52 IST)

தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? ராஜராஜ சோழன் இந்து மன்னனா என பொன்னியின் செல்வன் உண்டாக்கிய விவாதம்

Ponniyin selvan review
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு எழுந்த பல விவாதங்களின் தொடர்ச்சியாக, தமிழர்கள் இந்துக்களா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. ஒரு மொழி பேசும் மக்கள்தொகையினர் முழுவதும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க முடியுமா? மத அடையாளத்திற்கு எதிராக மொழி அடையாளம் முன்னிறுத்தப்படுவது ஏன்?

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு அந்தப் படம் தொடர்பாகவும் அந்தப் படம் எடுக்கப்பட்ட காலகட்டம் தொடர்பாகவும் அந்த காலகட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

ராஜராஜ சோழன் இந்து மன்னனா என்ற விவாதம் எழுந்து, அது நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அதன் தொடர்ச்சியாக "தமிழர்கள் இந்துக்களா?" என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே, ட்விட்டரில் #TamilsarenotHindus என்ற ஹாஷ்டாக் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த ஹாஷ்டாகின் கீழ் தொகுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான பதிவுகள் ராஜராஜ சோழனின் மதம் என்னவாக இருந்தது என்பது குறித்தே இருக்கிறது. மேலும் இதுபோல ட்ரெண்ட் செய்வது சில அரசியல் கட்சிகளின் சதி என்ற குற்றச்சாட்டுகளையும் சொல்லி வருகின்றனர்.

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.21 கோடி. இந்தக் கணக்கெடுப்பில் பதிலளித்த பெரும்பாலானவர்கள் தங்களை இந்துக்கள் என்றே வகைப்படுத்திக்கொண்டுள்ளனர். அதாவது 87.58 சதவீதத்தினர் தங்களை இந்துக்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 6.12 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் என்றும் 5.86 சதவீதத்தினர் தங்களை இஸ்லாமியர்கள் என்றும் 0.12 சதவீதத்தினர் தங்களை ஜைனர்கள் என்றும் 0.02 சதவீதத்தினர் பௌத்தர்கள் என்று சொல்லியிருக்கின்றனர்.

ஆனால், தற்போது சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி அரங்குகளிலும் நடக்கும் விவாதமானது, தற்போதுள்ள தமிழர்கள் சட்டரீதியாக எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றி அல்ல. மாறாக, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது பற்றியே இருக்கிறது. மேலும், பண்பாட்டு ரீதியாக தமிழர்கள் எந்த மரபைச் சேர்ந்தவர்கள் என்றும் விவாதிக்கப்படுகிறது.

இந்தியாவில் எந்த மொழியைப் பேசுபவர்களாக இருந்தாலும் அவர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களாக இல்லாவிட்டால் அவர்கள் இந்துக்கள்தான் என்றவாதத்தை இந்துத்துவவாதிகள் முன்வைக்கிறார்கள்.

குறிப்பாக, "ராஜராஜ சோழனின் தமிழ் அடையாளத்தைப் பறித்து அவனை இந்துவாக்க முயற்சி நடக்கிறது" என இயக்குநர் வெற்றிமாறன் கூறியபோது, அப்படியானால், "ராஜராஜ சோழன் எந்த மசூதியையும் தேவாலயத்தையும் கட்டினார்?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது. ஆகவே, ஒருவர் கோவிலைக் கட்டினார், வழிபட்டார் என்றால், அவர் இந்து என்ற பொருளிலேயே இந்துத்துவவாதிகள் இந்த விவகாரத்தை எதிர்கொண்டார்கள்.

இதற்கு எதிரான கருத்துகளை வைப்பவர்கள், இரண்டு விதமாக இதனை எதிர்கொண்டனர். முதலாவதாக, "தமிழர்கள் ஆரம்பத்தில் சைவம், வைணவம் ஆகிய மதங்களையே பின்பற்றிவந்தனர்.

இந்த மதங்களை இந்து மதம் உள்வாங்கிவிட்டது. ஆகவே சைவர்கள் என்றோ வைணவர்கள் என்றோதான் தங்களைக் குறிப்பிட வேண்டும்" என்றார்கள். மற்றொரு பக்கம் தமிழுக்கென்று, ஒரு மதசார்பற்ற மரபு இருக்கிறது, அது ஒரு மதங்களைக் கடந்த மரபு என்ற வாதத்தை முன்வைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்த இரண்டாவது வாதம் தற்போதய சூழலில் மிக மெதுவாகவே ஒலிக்கிறது.
Thanjavur

வரலாற்று காலத்தின் துவக்கத்தில் இயற்கையை வழிபடுவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களைப் பின்பற்ற ஆரம்பித்தது தமிழ்நாடு. வேத மரபின் அடிப்படையில் பல மன்னர்கள் பெரும் யாகங்களைச் செய்திருக்கிறார்கள். முற்காலப் பாண்டியர்களில் ஒருவனான பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பெயரில் உள்ள 'பல்யாக சாலை' என்பது அவன் பல யாகங்களைச் செய்தவன் என்பதைக் குறிப்பிடுகிறது என்கிறார் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.

ஆனால், அதே நேரம் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சமண, பௌத்தக் காப்பியங்களும் மதச்சார்பற்றதாகக் கருதத்தக்க திருக்குறள் போன்ற நூல்களும் இந்த காலத்திலேயே எழுந்தன.

இதில் மணிமேகலையில் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. மணிமேகலை, வஞ்சி மாநகரில் ஒன்பது சமயக் கணக்கர்களைக் கண்டு, அவர்கள் மதம் குறித்து கேட்டறிகிறாள்.

வைதீகவாதம், ஆசீவகவாதம், பிரமவாதம், சாங்கியவாதம், நிகண்டவாதம், பூதவாதம், வேதவாதம், வைசேடிக வாதம், சைவ வாதம் என ஒன்பது மார்க்கங்கள் மணிமேகலையில் பட்டியலிடப்படுகின்றன.

மணிமேகலையின் மார்க்கமான பௌத்தத்தைச் சேர்ந்தால், 10 மார்க்கங்கள் அந்தக் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியும். இதில், இந்து, கிறிஸ்தவம் என்ற மார்க்கங்கள் இடம்பெறவில்லை.

ஆகவே, 1,500 ஆண்டுகளிலிலிருந்து 2,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சேர நாட்டையும் உள்ளடக்கிய தமிழகப் பகுதியில், பல்வேறு மதங்கள் இருந்ததை மணிமேகலைச் சுட்டிக்காட்டுகிறது.

ஆனால், ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் பக்தி இலக்கியம் எழுச்சிபெற ஆரம்பித்தபோது, சமண, பௌத்த மதங்கள் வீழ்ச்சியடைய ஆரம்பித்து, சைவம், வைணவம் ஆகிய இரண்டு மதங்களுக்குள் தமிழ் வழிபாடுகள் நிலைகொண்டன. எட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இஸ்லாமும் அறிமுகமாகிவிட்டது. இதற்குப் பிறகு, சோழர்கள் காலத்தில் சைவமும் வைதீக மதமும் தங்கள் தடங்களை ஆழமாகப் பதிக்க ஆரம்பித்தன. விஜயநகர மன்னர்கள் காலத்தில் யாகங்கள், வடமொழி மந்திரங்கள் என வைதீக மரபின் பல அம்சங்கள் சைவ, வைணவ மதங்களில் நீக்கமற நிலைபெற்றன.

இந்த காலவரிசையைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் எந்த காலகட்டத்திலும், ஒரே மதம், ஒரே வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டதில்லை.

மத அடையாளத்திற்கு எதிராக மொழி அடையாளம் ஏன்?

இந்து VS தமிழர்கள் என்ற இந்த விவாதத்தில் ஒரு முரண்பாடான விஷயத்தை எல்லோரும் கவனிக்க முடியும். அதாவது, இந்து என்ற மத அடையாளத்திற்கு எதிராக, மற்றொரு மத அடையாளம் முன்வைக்கப்படாமல் 'தமிழ்' என்ற மொழி அடையாளம் முன்வைக்கப்படுகிறது. இந்த மொழி அடையாளம் ஒரு மதச்சார்பற்ற அடையாளமாகவும் முன்வைக்கப்படுகிறது.
Kalvettu

இதற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். "19, 20ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே தமிழை உயர்த்திப் பிடித்து, அதற்கு ஒரு மதச்சார்பற்ற அடையாளத்தை அளிக்கும் போக்கு தீவிரமாக தமிழ்நாட்டில் இருந்தது. அப்போதுதான் உருவாகிவந்த அச்சுப் பண்பாடு, புத்தக பரவலாக்கம், பிரமணரல்லாதோர் இயக்கம், திராவிட இயக்கம், ஒடுக்கப்பட்டோர் இயக்கம் என பலருக்கும் இதில் பங்குண்டு.

திராவிட இயக்கம் நேரடியாக தமிழை ஒரு மதசார்பற்ற அடையாளமாக முன்னிறுத்தியது. இதனால், சொந்த வாழ்க்கையில் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்காதவர்கள்கூட, பொதுவெளியில் மதச்சார்பற்றவர்களாக, அறிவியல் சார்ந்து செயல்படக்கூடியவர்களாக காட்டிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது" என இதனை விளக்குகிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ் அடையாளம் என்பது ஒரு மதச்சார்பற்ற அடையாளமாக உருவெடுத்துவிட்டாலும் அந்த மதச்சார்பற்ற அடையாளத்தைத் தக்கவைக்க தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது என்கிறார் ஸ்டாலின்.

"எப்போதெல்லாம் வடக்கிலிருந்து தாக்குதல் வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் மொழி அடையாளத்தைத்தான் கையில் எடுக்கிறோம். வெறும் இனம் சார்ந்த, மொழி சார்ந்த பற்று மட்டும் அதற்குக் காரணமல்ல. மாறாக, வடக்கிலிருந்து வரும் ஆதிக்க நிலைக்கு எதிரான மதச்சார்பற்ற அடையாளமும் கூட. இந்த மதச்சார்பற்ற அடையாளத்தை மேலும் ஜனநாயகபூர்வமாக்க வேண்டும் என்ற எண்ணம், 1950களில் தோன்றியது. ஆனால், அதற்கு, வைதீக மரபையும் போற்றிய ராஜராஜ சோழன் போன்ற மன்னர்களின் அடையாளம் உறுத்தலாக இருந்தது.

ஆகவே, ராஜராஜ சோழன் காலத்தை விமர்சனபூர்வமாக அணுக வேண்டும் என்பதை நா. வானமாமலை, ஆ. சிவசுப்பிரமணியன், கோ. கேசவன், இன்குலாப் போன்றவர்கள் முன்வைத்தார்கள். இன்குலாப் தமிழ் தேசியவாதி. இருந்தபோதும் ராஜராஜனுடைய அடையாளம் குறித்து கேள்வி எழுப்பினார். இப்படித்தான் தமிழின் மதச்சார்பற்ற அடையாளம் செழுமைப்பட்டது. ஆகவேதான், மத அடையாளத்திற்கு எதிராக மதசார்பற்ற அடையாளமாக தமிழ் முன்வைக்கப்படுகிறது" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

சங்க இலக்கியங்களிலோ, ஐம்பெரும் காப்பியங்களிலோ இந்து என்ற சொல் கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியம். பரிபாடலில் திருமாலைப் பற்றியும் முருகனைப் பற்றியும் பாடல்கள் உண்டு. ஆனால், அவை தற்போதைய இந்துக் கடவுகளைச் சொல்வதாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார் அவர்.

"பிரிட்டிஷ் காலத்திற்குப் பிறகுதான் பல்வேறு மதநம்பிக்கைகளை ஒன்றாகக் குறிக்க இந்து என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அந்த பல்வேறு மத நம்பிக்கைகளுக்குப் பதிலாக ஒற்றை வழிபாட்டு முறையை இந்து என்ற அடையாளமாகத் திணிக்கப் பார்க்கிறார்கள். மனு தர்மம், பகவத் கீதை போன்ற நூல்களில் பிராமணர்களுக்கு உயர்ந்த இடம் உண்டு. ஆகவே அந்த நூல்களை இந்து நூல்கள் என்றும் அதை இந்துக்கள் அனைவரும் ஏற்க வேண்டுமென்றும் சொல்கிறார்கள்" என்கிறார் சிவசுப்பிரமணியம்.

ஆனால், இந்த ஒட்டுமொத்த விவாதத்திலும் இந்து சொல்பவர்களும் தமிழ் ஒன்று சொல்பவர்களும் அதனை ஒரு பெருமித அடையாளமாக முன்வைக்கிறார்கள். அது கடந்த 40 - 50 ஆண்டுகளாக தமிழில் உருவாகி வந்த விமர்சன மரபுக்கு எதிரானது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். "தமிழ் அடையாளம் என்பது எல்லா மக்களுக்குமான அரசியலாக இருக்க வேண்டுமென்றால், கடந்த 40 வருடங்களாக முற்போக்கு மரபு சொல்லிக்கொடுத்ததை திரும்பப் பேசவேண்டும். அதை ஒரு நாளில் கைவிட்டுவிடக் கூடாது" என்கிறார் ஸ்டாலின்.

தமிழர்களை இந்து என்ற அடையாளத்திற்கு வைக்க விரும்பும்போது, தற்போது நிலவும் பல்வேறு வழிபாட்டு நெறிகளை நீக்கிவிட்டு, அதனை ஒற்றை அடையாளத்திற்குள் சுருக்க விரும்புகிறார்கள் என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியம். "சுடலை மாடன், அண்ணன்மார் வழிபாட்டையும் பெருந்தெய்வக் கோவில்களில் இருக்கும் வழிபாடும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?" என்கிறார் அவர்.

அதேபோல, இந்து என்ற அடையாளத்திற்கு மாற்றாக சைவம் - வைணவம் என்ற அடையாளங்களை முன்னிறுத்தும்போதும் கவனம் தேவை என்கிறார். "தமிழ்நாட்டில் இருந்த பல்வேறு வழிபாட்டு மரபுகளை இந்து மதம் உள்வாங்கியது. அதனால், அதுவே இந்து மரபாகி விடாது என்கிறோம். அதுபோலவே இங்கிருந்த பல்வேறு வழிபாட்டு மரபுகளை சைவ - வைணவ நெறிகளும் உள்வாங்கியிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்டாலின்.

இந்துவா - தமிழனா என்ற விவாதம் இப்போது தோன்றியதில்லை. அதேபோல, இந்தத் தருணத்தோடு முடியப்போவதும் இல்லை.

Edited By: Prasanth.K