யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்: திருமாவளவன் பகீர்!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 21 நவம்பர் 2019 (18:00 IST)
இந்தியா வருமாறு புதிய அதிபருக்கு விடுக்கப்படும் அழைப்பு அதிர்ச்சியை தரவில்லை. அது எதிர்பார்த்த ஒன்றுதான் என திருமாவளவன் கூறியுள்ளார். 
 
சமீபத்தில் பேட்டில் ஒன்றில் திருமாவளவனிடம், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள், இலங்கை விவகாரம் பற்றி பேசிய இதே நேரத்தில், கொழும்பு சென்று இலங்கை அதிபருக்கு நேரில் வாழ்த்து கூறிய இந்திய வெளியுறவு அமைச்சரின் செயலையும், இந்தியாவுக்கு வருமாறு புதிய அதிபருக்கு விடுத்த அழைப்பையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்கப்பட்டது. 
 
இதற்கு அவர், இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒரு இணக்கமான உறவு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் சரி, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்காலத்திலும் சரி, தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காங்கிரஸ் மட்டுமே தமிழ் இனத்தின் பகை போன்ற தோற்றமும், பாரதிய ஜனதா கட்சி நமக்கு ஏதோ சாதகமாக நடக்கும், தமிழ் ஈழம் மலரும் என்பது போன்ற தோற்றமும் இளம் தலைமுறை இடையே உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், எனது பார்வையில் தொடக்கம் முதல் வலியுறுத்தும் கருத்தை கூறுகிறேன்.
 
இதில் காங்கிரஸ் அரசா, பாரதிய ஜனதா அரசா என்பது அல்ல கேள்வி. இந்திய அரசா, இலங்கை அரசா என்பதுதான் கேள்வி. ஆகவே, இந்திய அரசை பொருத்தவரை, இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் சிங்கள அரசுக்கு ஆதரவான நிலையைத்தான் எடுப்பார்கள். அதுதான் இன்றைக்கும் நடக்கிறது. 
 
பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை புதிய அதிபருக்கு வாழ்த்து கூறியது மட்டுமின்றி நமது உறவை பாதுகாப்புடன் வைத்திருப்போம் என்ற உறுதிமொழியையும் தந்திருக்கிறார். எனவே இவர்கள், இந்தியா வருமாறு புதிய அதிபருக்கு விடுக்கப்படும் அழைப்பு, அவர்களுக்கு உரிய மரியாதையை செய்ய விரும்புவது போன்றவை எல்லாம் அதிர்ச்சியை தரவில்லை. அது எதிர்பார்த்த ஒன்றுதான் என பதிலளித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :