புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (00:16 IST)

"தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை" - இந்திய அமைச்சர் வி.கே.சிங்

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், அத்தொகுதி பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமைச்சர் வி.கே.சிங், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
 
இதைத்தொடர்ந்து, வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், "குடும்ப ஆட்சி போல் இல்லாமல் பிரதமர் மோதி மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிக்கு வனத்துறை, நீர்வளத்துறை ஒப்புதல் பெறுவதுடன் பல்வேறு காரணங்களால் பணி நடைபெறாமல் உள்ளது. இதேபோல், சில இடங்களில் நெடுஞ்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அந்த பணிகளை விரைந்து முடிக்க மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. இருந்தாலும் ஆட்சி அமைப்பது மக்கள் கையில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டதுதான். ஆகையால், இனி தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை.
 
அதிமுகவில் நிலவுவது உட்கட்சி பிரச்னையாகும். இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" என தெரிவித்ததாக, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
முஸ்லிம்கள் பற்றிய நாடகத்தை பாதியில் நிறுத்திய பஜ்ரங் தள உறுப்பினர்கள்
காளி குறித்து சர்ச்சை கருத்து: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு
 
மஹுவா மொய்த்ரா
 
காளி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதன் மூலம் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இயக்குநர் லீனா மணிமேகலை உருவாக்கிய 'காளி' ஆவணப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. அந்த போஸ்டரில் 'காளி' போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (LGBT) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "உங்கள் தெய்வத்தை கற்பனை செய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை காளி, இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்" என்று கூறியது சர்ச்சையானது. இதுகுறித்து அவர் விளக்கமும் அளித்தார்.
 
இந்நிலையில், காளி தொடர்பான சர்ச்சை கருத்து தொடர்பாக மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
"மொய்த்ராவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 295-ஏ பிரிவின் கீழ் போபால் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
22ஆவது திருத்தம் மக்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை - லஷ்மன் கிரியெல்ல
 
 
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
 
22ஆம் திருத்தம் மக்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை என, இலங்கை எதிர்க்கட்சி கொறடா லஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
 
நாடாளுமன்றத்தில் நேற்று (ஜூலை 06) உரையாற்றிய அவர், "22ஆம் திருத்தம் மக்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. இதன்மூலம் ஜனாதிபதியின் அதிகாரம் மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
 
19ஆம் திருத்தத்தை மீண்டும் கொண்டுவராமல் துறைசார் மேற்பார்வை குழுக்களை அமைப்பதில் எந்தப் பயனும் இல்லை.
 
பிரதமர் அமைக்கும் குழு முறைமை அரசியலமைப்பில் இல்லை. இந்த குழுக்கள் நாங்கள் நட்பு ரீதியாக அமைப்பதாகும். அதற்கு அதிகாரமும் இல்லை. நாங்கள் கலந்துரையாடி தீர்மானம் ஒன்று எடுத்தாலும் அதனை ஜனாதிபதிக்கு செயல்படுத்தாமல் இருக்க முடியும். அதனால், ஆரம்பமாக நீங்கள் கொண்டுவந்த 190-ஐ கொண்டு வாருங்கள்" என தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
'மிஸ்டர் பீன்' போன்று செயற்பட வேண்டாம்: விஜித
 
 
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
 
நாட்டின் பிரச்னைகளை தீர்க்க அதிகாரத்திற்கு வந்ததாக கூறும் ரணில், பொறுப்புள்ள பிரதமராக மக்களின் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாறாக 'மிஸ்டர் பீன்' போன்று செயற்பட வேண்டாம் என, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித ஹேரத் பிரதமரை நோக்கி சபையில் தெரிவித்ததாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
நாடாளுமன்றத்தில் நேற்று (ஜூலை 6) பிரதமரிடமான கேள்வி நேரத்தின் போது எம்.பி. விஜித ஹேரத் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் எதிர்வரும் 23ஆம் தேதி எரிபொருள் கப்பல் வருவதாக அமைச்சர்கள் சபையில் தெரிவித்திருந்தனர்.
 
ஆனால், "தற்போது அந்த கப்பல் வருவது தொடர்பில் எந்த நம்பிக்கையும் இல்லை. அதனால் நாடாளுமன்றத்தை பிழையாக வழிநடத்திய அமைச்சர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?" என கேட்டார்.
 
இதற்கு பதிலளித்த பிரதமர், "அரசாங்கத்தை பொறுப்பேற்கின்றீர்களா இல்லையா என்பதற்கு மாத்திரம் பதில்கூறுங்கள். உங்களின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்பதில்லை என தெரிவித்தார். நீங்கள் பொறுப்பேற்பதாக கூறினீர்கள். இந்த இரண்டில் ஒன்றை கூறுங்கள்" என்றார்.
 
இதன்போது கருத்து தெரிவித்த எம்.பி விஜித ஹேரத், "மிஸ்டர் பீன் போன்று செயற்படாது பொறுப்புள்ள பிரதமராக மக்களின் பிரச்னையை தீர்ப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கையை கூறுங்கள். 'மிஸ்டர் பீன் போன்று செயற்படுவதாக இருந்தால் எதிர்க்கட்சிக்கு வந்து அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் தற்போது நாட்டின் பொறுப்புமிக்க பிரதமர். அதனால் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தொடர்பில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்" என தெரிவித்ததாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.