ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 24 ஜூலை 2022 (14:07 IST)

உலகில் மிகப்பெரிய படிக குகை - எங்கு உள்ளது? எப்படி உருவானது?

ஸ்பெயினில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒரு பிரகாசமான பொக்கிஷத்தை மறைத்து வைத்துள்ளது.


அது தான் உலகின் மிகப்பெரிய ஜியோட் (ஜியோட் - பாறையில் படிக அல்லது கனிமப் பொருட்களைக் கொண்ட உட்குடைவுப் பள்ளம்). இது இயற்கையான நிகழும் படிக நிகழ்வாகும். இது விஞ்ஞானிகளை திகைக்க வைத்துள்ளது.

ஸ்பெயினின் தென்கிழக்கு அல்மேரியா மாகாணத்தில் புல்பி என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில், விலைமதிப்பற்ற உலோகத்தால் உருவாக்கப்படாத புதையலாக இது உள்ளது.
புவியியலாளரும் 'புல்பி ஜியோட்' டின் ஒருங்கிணைப்பாளருமான மிலா கர்ரெடெரோ, ஜியோட் என்பது பாறையில் படிக அல்லது கனிமப் பொருட்களைக் கொண்ட உட்குடைவுப் பள்ளமாகும் என்று விளக்குகிறார்.

அவர் ஒரு பெரிய பளப்பளப்பான படிக கற்கள் மீது அமர்ந்துக்கொண்டு இதனை விளக்குகிறார். இதற்கு ஒரு ஒப்பீடு செய்ய உள்ளே சிறிய படிக கற்கள் கொண்ட ஒரு சிறிய பாறையை உடைக்கிறார். "என் பின்னால் இருப்பதை போல்தான், இது மட்டும் சூப்பர் சைஸ் பதிப்பு," என்று அவர் சிரிக்கிறார்.

'புல்பி ஜியோட்' எட்டு மீட்டர் அகலம், இரண்டு மீட்டர் உயரம் மற்றும் இரண்டு மீட்டர் ஆழம் கொண்டது. "ஜியோட் என்று வரும்போது, ​​அதன் வரையறையின்படி, இது மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்," என்று அவர் குறிப்பிட்டார்.

புல்பி மற்றொரு படிக அதிசயமான மெக்ஸிகோவில் உள்ள நைக்கா மைனுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது என்று அவர் கூறுகிறார். நைக்கா மைன் பெரிய பளப்பளப்பான படிக கற்கள் கொண்டுள்ளது (15 மீ நீளம் கொண்டது. புல்பி இரண்டு மீட்டர்)./ ஆனால் அது படிகங்களால் வரிசையாக இருக்கும் குகை. ஜியோட் அல்ல.

ஸ்பெயினில் உள்ள இந்த ஜியோட் முதலில் 1873 முதல் 1969 வரை செயல்பட்ட வெள்ளி சுரங்கமான மினா ரிகாவில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1999ம் ஆண்டு, புவியியலாளர்கள் அதை மீண்டும் கண்டுபிடித்து, உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

"[சுரங்கத் தொழிலாளர்கள்] இந்த பாறையை வெடிக்கச் செய்து ஒரு ஜியோடைக் கண்டுபிடித்தபோது, ​​​​அவர்கள் இந்த படிகங்களைக் கண்டுபிடிப்பதை விரும்பாததால் அவர்கள் ஒருவேளை வருத்தமடைந்திருக்கலாம். அவற்றை அகற்ற கூடுதல் வேலை இருந்தது. அவை நிறைய எடை கொண்டவை. அவை லாபம் அளிக்கும் ஒன்றல்ல," என்று கர்ரெடெரோ தெரிவித்தார்.

"விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், இதன் முழு பகுதியும் ஒரு காலத்தில் நீருக்கடியில் இருந்ததாக அவர்கள் நம்புகிறார்கள். ஒரு கட்டத்தில், எரிமலை செயல்பாடு காரணமாக வண்டல் பாறைகளை உடைத்து, சூடான திரவங்களால் நிரப்பப்பட்டது. திரவங்கள் குளிர்ந்தவுடன், படிகங்கள் உருவாகத் தொடங்கின.

புல்பியில் உள்ள அன்ஹைட்ரைட் (பாறைகளை உருவாக்கிய தாது) சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் காலத்தில் இருந்ததாக புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் 'ஜிப்சம்' படிகங்களின் ( gypsum crystals) வயது குறித்து அவர்கள் குறிப்பாக கூறமுடியவில்லை. அவை மிகக் குறைந்த அசுத்தங்களைக் கொண்டிருக்கின்றன என்பதால், அதன் காலம் குறிப்பிட்டு சொல்லும் அளவில் இல்லை. 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வளர ஆரம்பித்தன என்பது அவர்களின் கணிப்பு. "படிகம் எவ்வளவு மெதுவாக வளருமோ, அதன் அளவு பெரியதாகும். மேலும், படிகம் துல்லியமாகவும் இருக்கும்," என்று கர்ரெடெரோ கூறினார்.

2019ம் ஆண்டு, இந்த சுரங்கம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. சில இடிபாடுகள் அகற்றப்பட்டு, 42 மீ அவசரகால படிக்கட்டு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறுவப்பட்ட பின்னர், இங்கு, சுரங்கத் தொழிலாளர்கள் விட்டுச் சென்ற பொருட்களைக் கண்டறிந்தனர். இதில் சிகரெட், ஜாக்கெட்டுகள், ரப்பர் செருப்புகள், பீர் பாட்டில்கள் மற்றும் சுவரில் கீறல்கள் ஆகியவை இருந்தன.

இதுவரை 100,000க்கும் மேற்பட்ட மக்கள் ஜியோடை பார்வையிட்டுள்ளனர். மேலும் படிகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கரேட்டெரோவின் குழு வெப்பநிலை, கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஈரப்பதத்தை கவனமாக கண்காணித்து வருகிறது. "[மனித தொடர்புகளிலிருந்து வரும்] கார்பன் டை ஆக்சைடை விட, ஈரப்பதம் உண்மையில் படிகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்," என்று அவர் கூறினார். "ஏனென்றால் ஓர் அடுக்கு [ஈரப்பதம்] படிகங்களில் படிந்தால், அவை அவற்றின் தெள்ளத் தெளிந்த தன்மையை இழக்கின்றன."

ஆனால், புல்பியின் படிகங்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்ணாடிப்போன்ற தன்மையில் இருக்கின்றன. மேலும் பார்வையாளர்களும் விஞ்ஞானிகளும் ஒரே மாதிரியான இயற்கை நிகழ்வால் தொடர்ந்து பிரமிப்பு அடைந்துள்ளனர். "நான் அதைப் பார்த்தபோது என்ன உணர்ந்தேன் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை," என்று கர்ரெடெரோ கூறினார். "இது விவரிக்க முடியாதது. ஏனென்றால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இயற்கை நமக்கு என்ன கொடுத்திருக்கிறது என்பதைப் பாருங்கள்," என்றார்.