கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொற்றை ஒத்து அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் வேல்ஸ்-இல் இருவருக்கும், இங்கிலாந்தில் 36 பேருக்கும் இந்த வகை தொற்று உண்டாகி உள்ளதாக எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டென்மார்க், நைஜீரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் சில பேருக்கு டிசம்பர் மாதத்திலேயே இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் காரணமாக எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படலாம் என்று தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிய வகை கொரோனா - என்ன அச்சுறுத்தல்?
இந்த வகை வைரஸ் தொற்றின் காரணமாக அதிக அளவில் ஆபத்து ஏற்படும் என்று இப்போதே கூற முடியாது என்றும் அறிவியலாளார்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொற்றிலிருக்கும் மரபணுத் திரிபுகளால் நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்றோ பரவலின் வேகம் அதிகமாகும் என்றோ இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து அமைப்பின் பேராசிரியர் யுவோன் டாயில் தெரிவிக்கிறார்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்கனவே 'குறிப்பிடத்தகுந்த மரபணுத் திரிபுகளை' கொண்டுள்ளது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா தெரிவிக்கிறார்.
பிரிட்டன் அரசுக்கு புதிய மற்றும் மேம்பட்டு வரும் வைரஸ் நெருக்கடிகள் குறித்து ஆலோசனை அளித்து வருகிறார் இவர்.
இந்த வைரஸ் தொற்றில் உள்ள திரிபுகள் குறித்து ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவற்றின் மூலம் உண்டாகக்கூடிய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
நோய் எதிர்ப்பு அமைப்பிடம் இருந்து தப்ப வாய்ப்புள்ள திரிபு
இந்த புதிய வகை வைரஸ் தொற்று உண்டாகியுள்ள மரபணுத் திரிபுகளில் ஒன்று E484K என்று அழைக்கப்படுகிறது.
இது பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ்களிலும் இருந்தது.
இந்த மரபணுத் திரிபு மனித உடலில் ஏற்கனவே இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பின் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்கு வைரஸ் கிருமிக்கு உதவக்கூடும்.
தற்போது கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் வகைகளில் ஏற்படும் மரபணுத் திரிபுகள் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற திரிபுகள் தடுப்பூசி வழங்கலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு ஏற்ற வகையிலான தடுப்பூசிகளை தயாரிப்பதிலும் உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் மும்முரமாக உள்ளனர்.