திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (21:38 IST)

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சவால் - காரணம் என்ன?

சுஹாஸ் பால்ஸிகார்
 
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், எந்தக் கட்சியும் அல்லது கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை இருப்பதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ளது. புதிய அரசு அமைவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா அல்லது சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த உத்தரவிடுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
எதிர்பாராத திடீர் திருப்பங்களைத் தொடர்ந்து சுனாமியைப் போல தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. சில உரிமைகள், வாசகங்கள், கோட்பாடுகள் தெளிவில்லாத அளவில் மற்றும் பரந்த அளவில் முன்வைக்கப்படுகின்றன. விவாதங்களுக்கு மத்தியில் மக்கள் தீர்ப்பு, நெறிகள், கொள்கையில்லாத கூட்டணி, ஸ்திரமின்மை என்பவை போன்ற வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
 
தீவிர கண்ணோட்டம் உள்ள சிலர், மீண்டும் தேர்தல் நடத்துவது மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும் என்று கூறுகின்றனர். கொள்கை சார்ந்த ஆனால், ஓரளவு நடுநிலையாளர்களாக இருக்கும் பலரும், பாஜக மற்றும் சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
 
மக்கள் தீர்ப்பு என்ன சொல்கிறது?
 
மக்களின் தீர்ப்பு என்ன சொல்கிறது என்பது பற்றி நாம் முதலில் பார்ப்போம். ஒரு தலைவர் அல்லது ஒரு கட்சி முக்கிய விஷயங்களில் ஒரு நிலைப்பாட்டை முன்வைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில், மற்றொரு கட்சி அல்லது தலைவர் அதற்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைக்கும் போது, மக்கள் தேர்வு செய்யும் தரப்புக்கு தான் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்பதாக அர்த்தம். மிக சில தேர்தல்களில் தான் இதுபோன்ற முடிவு கிடைத்திருக்கிறது.
 
சிலநேரங்களில், மக்கள் தீர்ப்பை, முக்கியத்துவம் குறையும் வகையில் கணக்கு அளவில் சிலர் பார்க்கிறார்கள். சில நேர்வுகளில் ஒரு தலைவர் தன்னையே முன்னிறுத்தி தனக்கு வாக்களிக்குமாறு (வேட்பாளர்கள் அடிப்படையில் பார்க்காமல்) கோருவது உண்டு. நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லப் போவதாக அவர் கூறுவது உண்டு. அதுபோன்ற சூழ்நிலையில், அந்தத் தலைவரும் அவருடைய கட்சியும் தேர்தலில் வெற்றி பெற்றால், மக்களின் தீர்ப்பு அவர்களுக்கு ஆதரவாக மறைமுகமாகக் கிடைத்துள்ளதாகக் கருதப்படும்.
 
ஆனால் அனைத்துத் தேர்தல்களிலும் இந்த இரு சூழ்நிலைகளும் ஏற்படுவது இல்லை. மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவது இல்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலரை மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள். மக்களின் விருப்பத்தைப் பெற்றவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு ஆட்சி நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஆட்சியை யார் நடத்துவது என்பதை, தேர்தல்கள் முடிவு செய்கின்றன.
 
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் இது போன்றது தான். நான்கு முக்கிய கட்சிகளில், யாருக்குமே தனிப் பெரும்பான்மை பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாததால், இரண்டு தனித்தனி கூட்டணிகள் அமைத்து தேர்தலைச் சந்தித்தன. எனவே, குறிப்பிட்ட ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பளித்தார்கள் என்றோ, அந்தத் தீர்ப்பை கட்சிகள் மதிக்கவில்லை என்றோ கூறுவது சரியானதாக இருக்காது.
 
தேர்தலுக்கு முன்பு உருவான கூட்டணிகளில் ஒன்று உடைந்து, புதிய அரசியல் அணி சேர்க்கைகள் குறித்த சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்படுகின்றன. மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று வற்புறுத்துவது நடைமுறைக்கு உகந்தது அல்ல, தேவையற்ற மற்றும் பொறுப்பற்ற செயலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 
இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு என்ன விளக்கம் தருவது?
 
ஆரம்பத்தில் இருந்தே பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிந்தது, மக்கள் வாக்களித்த போக்கும் அதையே காட்டின. எனவே, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்தால் என்ன செய்ய முடியும்? இதுபோல கூட்டணி முறிவு ஏற்படுவது நெறிகள் மதிக்கப்படாத செயல் என்று கூறுவதில் அர்த்தம் எதுவும் இல்லை. அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி, பெரும்பான்மை பலம் பெறுவதற்காக மேலும் சில கட்சிகளை சேர்த்துக் கொண்டால், ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும்.
 
இப்போது தனிப் பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.க.வால் அதைச் செய்ய முடியவில்லை. எனவே மற்ற கட்சிகள் சில சமரசங்களை செய்து கொண்டு, ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பேசத் தொடங்கியுள்ளன.
 
தேர்தல் முடிவுகளை வைத்து, பாஜக `தோற்றுவிட்டது' என்று சொல்லிவிட முடியாது. ஆனால், முடிவுகள் வெளியான பிறகு ஏற்பட்ட நெருக்கடியால், நிச்சயமாக பாஜக ஆட்சியை இழந்துவிட்டது என்று கூறலாம். அதேசமயத்தில், இந்த முடிவு சிவசேனாவுக்கும் பெரிய அளவில் உதவிகரமாக இல்லை. சில புதிய வியூகங்களுடன் சிவசேனா கோரிக்கைகள் வைத்ததால், மாநிலத்தில் பழைய அதிகாரப் பகிர்வு திட்டத்தில் இருந்து விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நீண்டகால நோக்கில், இது சிவசேனாவுக்கு உதவிகரமாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
 
கடந்த ஐந்து ஆண்டுகளாக வேறு வழியில்லாமல் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வந்த சிவசேனா இப்போது அந்த அணுகுமுறையைக் கைவிட்டுள்ளது.
 
தேர்தலுக்கு முன்பு ஏப்ரலில் மனக்கசப்பு கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முக்கியத்துவம் பெற்றுள்ளன. பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் எடுக்காவிட்டாலும் மாநில அரசியலில் காங்கிரஸ் நீடித்து இருக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது செயல்படாமல் இருந்தால் அந்த நம்பிக்கையும் குறைந்து போகக் கூடும்.
 
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருகிறது
 
உண்மையில், இதுபோன்ற தீவிர இழுபறி உள்ள சூழ்நிலைகளில், புதிய மற்றும் சிறிய கட்சிகள் முக்கியத்துவம் பெறும். ஆனால் தமிழகத்தைப் போல, மகாராஷ்டிராவிலும் எம்.என்.எஸ். மற்றும் வன்ச்சிட் பகுஜன் அகாடி போன்ற கட்சிகளால் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. எனவே மகாராஷ்டிர அரசியல் நான்கு முக்கிய கட்சிகளை மையமாகக் கொண்டதாக மட்டுமே உள்ளது. ஆட்சி அமைத்து, மாநிலத்தில் அரசியல் செயல்பாடுகளுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அந்தக் கட்சிகளுக்கு தான் உள்ளது.
 
எனவே, பெரிய தேசிய வியூகங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் உள்ள அரசியல் நெருக்கடிகள் பற்றி பரிசீலிக்க வேண்டியுள்ளது. நான்கு கட்சிகளில், கால்களை இணைத்து கட்டிக் கொண்டு ஓடுவதைப் போன்ற சூழ்நிலையில் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு ஏற்படாவிட்டால், மீண்டும் தேர்தல்கள் நடத்தப்படும். ஆனால், தேர்தலுக்கு முன்னதாக எந்தக் கட்சிகள் கூட்டணி சேரும், ஆட்சி அமைக்க புதிய கூட்டணிகளில் எவை சேரும் என்பது தான் உண்மையான கேள்விகளாக இருக்கும்.
 
கூட்டணி மாற்றங்களின் வரலாறு
 
உண்மையில், மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து, குறிப்பிட்ட நோக்கங்களின் அடிப்படையில் ஆட்சி அமைப்பதற்கு, நாட்டில் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. மேற்குவங்கம் முதல் கேரளா மாநிலம் வரை இதுபோல நடந்துள்ளது. அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த போது, சிவசேனா தவிர, கூட்டணியில் இடம் பெற்ற மற்ற கட்சிகள் எதுவும் பாஜகவின் அடிப்படைவாதக் கொள்கைகளை ஆதரிக்கவில்லை. இருந்தபோதிலும் கூட்டணி உருவாக்கப்பட்டு, ஆட்சி நிர்வாகம் நடைபெற்றது. சுருக்கமாகக் கூறுவதானால், குறிப்பிட்ட சில அம்சங்களில் பொதுவான அணுகுமுறை என்ற அடிப்படையில் இதுபோன்ற கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசியல் வசதிக்காக எப்படி ஓரணியில் சேருவது என்பதையும், அரசியல் முதிர்ச்சையும் காட்டுவதாக இந்தக் கூட்டணிகள் அமைந்திருந்தன.
 
மகாராஷ்டிராவில் இப்போதுள்ள சூழ்நிலையில், மாநிலத்தைத் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம் உள்ளது. இதுவரை இந்துத்வா கொள்கைகளை முன்னிறுத்தி வந்த சிவசேனாவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமா என்பது தான் உண்மையான கேள்வியாக உள்ளது.
 
இந்த திருப்பங்கள் மேலும் ஒரு முக்கியமான கேள்வியை முன்னிறுத்தி உள்ளது: கடந்த காலங்களில் நாடு முழுக்க காங்கிரஸ் வெற்றி பெற்ற சூழ்நிலைகளில், காங்கிரஸ் எதிர்ப்பு அலைகள் உருவாயின. இப்போது பாஜகவுக்கு எதிராக பாஜக எதிர்ப்பு அலை உருவாகிவிட்டதா என்பது தான் அந்தக் கேள்வி.
 
பாஜகவுக்கு எதிர்ப்பா?
 
பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியால் மட்டும் போட்டியிட முடியாது என்பதை கடந்த இரு மக்களவைத் தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன. எனவே காங்கிரஸ் கட்சி கூட்டணிகளை உருவாக்க வேண்டும் என்பது இயல்பாகத் தெரிய வருகிறது. ஆனால் பாஜகவை எதிர்க்கும் யாருடனும் இதுபோன்ற கூட்டணி சேரலாமா அல்லது காங்கிரஸ் கொள்கைகளுடன் ஒப்புதல் உள்ள கட்சிகளுடன் மட்டும் கூட்டணி சேருவதா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
 
பாஜகவை எதிர்க்கும் கட்சிகளிடையே ஒரே மாதிரி கொள்கைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை. எனவே, காங்கிரஸ் கட்சி சவாலை எதிர்நோக்கியுள்ளது. சில மாநிலங்களைத் தவிர, பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் மட்டும் தனியாக பாஜகவை எதிர்த்துப் போட்டியிட முடியாது.
 
ஆனால், பாஜகவை எதிர்த்து போராட முடியாவிட்டால் அது அரசியலில் நீடித்திருக்க முடியாது. எனவே காங்கிரஸ் கட்சி தற்காலிக வியூகங்களை வகுத்து, பிராந்தியக் கட்சிகளுடன் கை கோர்க்க சில துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
 
இதற்கு, உண்மையில் பாஜகவை ஒரு முன்மாதிரியாக காங்கிரஸ் கருதிக் கொள்ளலாம்! 1990களில் கூட்டணி அரசியலில் பாஜக அடியெடுத்து வைத்தபோது, பாஜகவின் கொள்கைகளை பல கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜகவும் கூட பிராந்திய உணர்வுள்ள கட்சிகளை, அவற்றின் பொருளாதார - சமூகக் கொள்கைகளை ஆதரிக்கவில்லை.
 
இருந்தபோதிலும் பரந்த வியூகத்தின் ஒரு பகுதியாக பல சமரசங்களை அந்தக் கட்சி செய்து கொண்டது. அதற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. பாஜகவுக்கு அதிக பலம் இல்லாத பகுதிகளில், போட்டி கட்சிகளை வெல்லும் வகையில் அந்த மாநிலத்தில் உள்ள கட்சிகளுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வது முதலாவது விஷயம். அந்த மாநிலங்களில் தங்களின் கொள்கைகள் மற்றும் சிந்தனைகளை பிரபலமாக்குவதற்கான செயல் திட்டங்கள் மற்றும் மக்களின் ஆதரவு வாக்குகளைப் பெறுவது இரண்டாவது விஷயம்.
 
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள சவால்
 
இப்போதைய சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி சேருவதற்கு, காங்கிரஸ் கட்சி ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிப்பது இயல்பானது தான். ஆனால், வெறுமனே பாஜக எதிர்ப்பு என்பதற்காக காங்கிரஸ் முடிவு எடுக்க விரும்பினால், மூன்று விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும்.
 
கூட்டணிகள், பா.ஜ.க. மற்றும் கட்சியின் தொலைநோக்கு கொள்கைகள் என்பவையாக அவை இருக்கும். நரசிங் ராவ் உருவாக்கிய பச்மதி ஒப்பந்த காலத்தில் இருந்தே கூட்டணிகள் குறித்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நிலையற்ற முடிவுகளை எடுத்து வருகிறது. கடந்த இரு தேர்தல்களில் மோசமான முடிவுகள் வந்ததை அடுத்து இப்போது தங்கள் நிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.
 
பாஜக தான் உடனடி, முதலாவது எதிரி என்று காங்கிரஸ் கட்சி கருதினால், டெல்லியில் அமர்ந்து கொண்டு கருத்து கூறும் அறிவுஜீவிகளைத் தாண்டி செயல்பட்டாக வேண்டும். என்ன மாதிரியான அரசியல் வியூகங்கள் உடனடி தேவையாக உள்ளன என்று முடிவு எடுக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி யோசிக்க வேண்டும்.
 
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் நீண்ட நோக்கிலான போராட்டத்திற்கு ஆரம்பமாகவே சிவசேனாவுடன் கைகோர்க்கும் வியூகம் இருக்கும். மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றுவது அல்லது பாஜகவை தாழ்த்துவது என்பதற்காக மட்டும் இந்தக் கூட்டணியை காங்கிரஸ் ஏற்படுத்திக் கொண்டால், அந்தக் கட்சிக்கு குறைந்த அளவிலான பயன்கள் மட்டுமே கிடைக்கும். கொள்கை அடிப்படையில் முடிவு எடுப்பதாகக் கூறி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு முடிவு எடுத்தால், மறக்கப்படும் நிலையை நோக்கிய பயணம் வேகமானதாக இருக்கலாம்.
 
சிவசேனாவுக்கான வாய்ப்புகள்
பாஜகவை எதிர்க்கும் கட்சிகளைப் பொருத்த வரையில், காங்கிரஸ் கட்சிக்கு பொருந்தும் அவ்வளவு விஷயங்களும் பொருந்தும். இன்றைய சூழ்நிலையில் சுயமரியாதை மற்றும் முதல்வர் பதவி என்பதில் சிவசேனா திருப்தி அடையலாம்.
 
ஆனால் மம்தா பானர்ஜியும், சந்திரபாபு நாயுடுவும் பாஜகவில் இருந்து ஏன் விலகி இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால், அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளுக்கான வாய்ப்புகள் பற்றி சிவசேனா சிந்திக்க வேண்டியிருக்கும். பாஜகவில் இருந்து தனித்திருப்பதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.
 
இந்து தேசியவாதம் என்ற செயல் திட்டத்தை மோடி - அமித்ஷா ஆகியோர் முன்வைத்து வருகின்றன.் எனவே அதையே மாநில அளவில் பலமாக எழுப்பி, பாஜகவின் மராட்டிய பதிப்பு போல சிவசேனா செயல்படப் போகிறதா, தனது பெருமைகளை கைவிட்டு Hinduhridaysamrat ன் முதலாவது வாரிசாக மட்டும் கூறப் போகிறதா அல்லது தனது முழக்கங்களை மாற்றிக் கொண்டு போட்டியில் நீடித்திருக்கப் போகிறதா?
 
அரசியல் தேர்வுகள் எப்படியிருக்கும் என்பதை பொருத்த கேள்வியாக இது இருக்கும்.
 
தேவையான அரசியல் தேர்வுகளை மேற்கொண்டு, கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது வெற்றிகரமான அரசியல் பயணத்தின் அடையாளங்களாகக் கருதப்படுகிறது.
 
இது நடப்பதற்கு, அரசியல் ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதுபோன்ற அரசியல் முடிவுகளை எடுக்கும் தைரியம் காங்கிரஸ், சிவசேனா கட்சிகளுக்கு உள்ளதா, அந்தக் கட்சிகள் எடுக்கும் முடிவு குறுகிய எதிர்காலத்தில் மகாராஷ்டிராவின் தலைவிதியை நிர்ணயிப்பதாக இருக்குமா? நாட்டின் அரசியலுக்கு முக்கியமான திருப்பத்தைத் தருவதாகவும் அது இருக்கலாம்.