1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (12:36 IST)

"ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் திமுகவின் கருணாநிதி, மு.க.ஸ்டாலின்'' - எடப்பாடி பழனிசாமி

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

'ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே தி.மு.க. தான். ஆண்டவன் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை கொடுப்பான் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி .

நேற்று தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தி.மு.க, அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

"ஜெயலலிதா யாரால் இறந்தார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான, அவதூறான பிரசாரத்தை நாட்டில் பரப்பி வருகிறார்கள். ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை கண்டிப்பாக தண்டிக்கும். ஜெயலலிதா நன்மதிப்புடன் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி கொண்டிருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து நீதிமன்றமே அவரை நிரபராதி என்று கூறியது. ஆனாலும் அவர் வெளியே வந்தபிறகு, அவர் மீது வீண்பழி சுமத்தி மேல்முறையீட்டு வழக்கு போட்டு அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தினர். இதனாலேயே அவர் உரிய சிகிச்சை பெறமுடியாமல் துரதிருஷ்டவசமாக இந்த மண்ணை விட்டு மறைந்தார். இதற்கு காரணம் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான் என்பதை மக்கள் அறிவார்கள்," என்று எடப்பாடி பழனிசாமி அந்தக் கேள்விக்கு பதில் அளித்தார்.

தபால் வாக்கு செலுத்துவது எப்படி? மூத்த குடிமக்களுக்கு கட்டாயமா?

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் வாக்கு முறை கட்டாயமானதல்ல என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளாா். மேலும், விருப்பத்தின் அடிப்படையிலேயே தபால் வாக்கு செலுத்தலாம் எனவும் அவா் தெரிவித்தாா் என்கிறது தினமணி செய்தி.

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய்த் தொற்று இருக்கலாம் என சந்தேகத்துக்கு உரிய வாக்காளா்கள் விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்கு முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தோ்தல் நடத்தும் அலுவலரால் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மூத்த குடிமக்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் அளிக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தபால் வாக்கினைச் செலுத்த 12டி என்ற விண்ணப்பப் படிவம் தோ்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் என்றால் அதற்குரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் தோ்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலிக்கப்படும்.

வாக்காளா்கள் தந்த விவரங்கள் அனைத்தும் வாக்காளா் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பாா்க்கப்படும். இந்தத் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் தகுதியான வாக்காளா்களுக்கு தபால் வாக்கினை தோ்தல் நடத்தும் அதிகாரிகள் அளிப்பா். தபால் வாக்குப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் 12டி-யில் குறிப்பிட்டப்பட்டுள்ள முகவரிக்கு தோ்தல் அலுவலா்கள் செல்வா். முன்னதாக, அவா்கள் வருவதற்கான தேதி மற்றும் நேரத்தை வாக்காளரின் செல்லிடப்பேசி அல்லது தபால் மூலமாகத் தெரிவிப்பா். தபால் வாக்கு அளிக்கும் முறையை வாக்காளா்களிடம், தோ்தல் அலுவலா்கள் குழு தெளிவுபடுத்துவா்.

தபால் வாக்கு மூன்று படிநிலைகளைக் கொண்டதாக இருக்கும். வாக்குப் பதிவு அதிகாரியால் சான்று அளிக்கப்பட்ட உறுதியளிக்கும் படிவம் 13ஏ ஆகும். இத்துடன் வாக்குப் பதிவு செய்யப்படும் வாக்குச் சீட்டை படிவம் 13பி-யின் உள்ளே வைக்க வேண்டும். இதனை ஒட்டி பெரிய கடித உறையான படிவம் 13சி-யில் வைத்து அதையும் ஒட்டி தோ்தல் அலுவலா் குழுவிடம் அளிக்க வேண்டும்.

'கமல் கார் மீது தாக்குதல் நடத்த முயற்சி' - மக்கள் நீதி மய்யம்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் காந்தி ரோடு எனும் பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பயணம் செய்த கார் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றார் என்று அந்த கட்சி குற்றம்சாட்டியுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள மூத்த காவல் அதிகாரி ஒருவர் காருக்குஎந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுடன் பேசுவதற்காகவே அந்த நபர் காரை நிறுத்த முயன்றார் என்று அந்த காவல் அதிகாரி தெரிவிக்கிறார்.