நேற்று நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவில் திருச்சி சிவா இந்தி தெரியாமல் தடுமாறியதை நிர்மலா சீதாராமன் நடிப்பு என்று கூறியுள்ளார்.
வக்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்களவையில் அதற்கான விவாதம் நடந்தது. அதில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அந்த மசோதாவை எதிர்த்துப் பேசினார். அப்போது அவர் பாஜகவின் ஸ்லோகமான “சப்கா சாத் சப்கா விகாஸ்” என்ற வார்த்தையை சொல்ல முயன்றபோது சரியாக சொல்ல தெரியாமல் குளறி, பின்னர் அருகே இருந்தவரிடம் கேட்டு அதை சரியாக சொன்னார்.
அதை குறிப்பிட்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “திருச்சி சிவா இந்தி பாடல்களையெல்லாம் நன்றாக பாடுவார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் சப்கா சாத் சப்கா என வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறார். இந்தி தெரியாததை போல காட்டிக் கொள்ள முயல்கிறார்” என விளையாட்டாக வம்பிழுத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய திருச்சி சிவா “நான் இந்தி பாடலையே ஆங்கிலத்தில் எழுதி வைத்துதான் பாடுவேன். அதற்கான அர்த்தம் எல்லாம் எனக்கு தெரியாது. யாராவது சொன்னால்தான் புரியும்” என பதில் அளித்துள்ளார். மாநிலங்களவையில் நடந்த இந்த விவாதம் அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
Edit by Prasanth.K