1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (08:51 IST)

70 ஆயிரம் கி.மீ நடந்த பனி யானைகளின் ராட்சத தந்தங்களின் ஆச்சர்ய வரலாறு

வூலி மமூத் (Woolly Mammoth) என்கிற இன்றைய யானைகளுடன் தொடர்புடைய விலங்கினம், அதன் வாழ்நாளில் எவ்வளவு தூரம் பயணித்தது என்பதை அறிய, அவுயிரினத்தின் மிகப் பெரிய தந்தத்திற்குள் இருக்கும் வேதியியலை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்துள்ளனர்.
 
பனி யுகத்தில் வாழ்ந்த வூலி மம்மூத் விலங்கு பூமியை சுமார் இரு முறை சுற்றி வருவதற்கு சமமான தொலைவு பயணித்ததாக ஆராய்ச்சி காட்டுகிறது.
 
ப்ளீஸ்டோசீன் (Pleistocene) எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய குளிர் காலத்தில் வடக்கு அட்ச ரேகைகளில், இந்த வூலி மமூத்கள் வாழ்ந்து வந்தன.
 
இந்த பழங்கால உயிரினங்கள் எவ்வளவு நடமாடின என்பதை இந்த ஆராய்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 
"இது பருவகாலத்துக்கு இடம்பெயர்ந்தவைகளா என தெளிவாகத் தெரியவில்லை" என்கிறார் அலாஸ்கா ஃபேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வின் இணை முன்னணி எழுத்தாளர் முனைவர் மேத்திவ் வூலர்.
 
"அலாஸ்காவின் பல பகுதிகளை அதன் வாழ்நாளில் சில சமயங்களில் பார்வையிட்டுள்ளது அந்த மிகப் பெரிய உயிரினம். அலாஸ்கா என்கிற பகுதி எத்தனை பெரியது என நீங்கள் நினைக்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கிறது." என்கிறார் அவர்.
 
வூலி மமூத்தின் தந்தங்கள் மர வளையங்களைப் போல இருந்தன, அவை அவ்விலங்குகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களைப் பதிவுசெய்தன.
 
வூலி மமூத்கள் உயிருடன் இருந்தபோது சில ரசாயனக் கூறுகள் அதன் தந்தத்தில் சுரந்தன. அது அவ்விலங்குகள் எங்கு சென்றன என்பதை வரைபடத்தில் சுட்டிக் காட்டுகிறது.
 
இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றோடொன்று இணைப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அலாஸ்கா பகுதியில் வாழ்ந்த ஒரு ஆண் வூலி மம்மூத்தின் பயண வரலாற்றை ஆய்வு செய்தனர். அதன் எச்சங்கள் வட மாநிலத்தின் ப்ரூக்ஸ் மலைகளின் அருகே காணப்பட்டன.
 
"பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, அந்த உயிரினங்களிடம் ஒரு நாட்குறிப்பு உள்ளது, அது அதன் தந்தங்களில் எழுதப்பட்டுள்ளது" என அலாஸ்கா பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் இயக்குனர் மற்றும் இவ்வாய்வின் இணை ஆசிரியர் முனைவர் பேட் ட்ரூக்கன் மில்லர் கூறினார்.
 
"பொதுவாக இயற்கை அன்னை எந்த ஒரு உயிரினத்துக்கும் வாழ்க்கையின் இத்தகைய வசதியான மற்றும் வாழ்நாள் முழுவதும் பதிவு செய்யும் வசதியை வழங்குவதில்லை."
 
வூலி மமூத் உயிரினங்கள் தங்கள் தந்தங்களில் வாழ்நாள் முழுவதும் புதிய அடுக்குகளை சீராகச் சேர்த்தன. தந்தங்கள் நீள வாரியாகப் பிரிக்கப்பட்டபோது, ​​இந்த வளர்ச்சிப் பட்டைகள் அடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் கூம்புகள் போல இருந்தன. அது அந்த உயிரினத்தின் இருப்புக்கான காலவரிசைப் பதிவை வழங்குகிறது.
 
1.7 மீட்டர் நீளமான தந்தத்தில் உள்ள ஸ்ட்ரோன்டியம் மற்றும் ஆக்ஸிஜனின் வேதியியல் கூறுகளின் வெவ்வேறு வகைகள் அல்லது ஐசோடோப்புகளை ஆய்வு செய்வதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் பயணத்தை ஒன்றாக இணைத்தனர்.
 
அலாஸ்கா முழுவதும் ஐசோடோப்பு மாறுபாடுகளை முன்னறிவிக்கும் வரைபடங்களுடன் இவை பொருத்தப்பட்டன.
 
மமூத் விலங்குகள் தன் 28 ஆண்டு கால வாழ்நாளில் அலாஸ்கா நிலப்பரப்பில் 70 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்திருப்பதாக கண்டறிந்தனர். பூமியின் சுற்றளவு 40 ஆயிரம் கிலோ மீட்டர் தான் என்பது கவனிக்கத்தக்கது.
 
இந்த அற்புத உயிரினங்களின் அழிவுக்கான தடயங்களை இந்த ஆய்வு வழங்குகிறது.
 
மிகவும் பரந்து விரிந்த விலங்குகளுக்கு, கடந்த பனி யுகத்தின் முடிவில் மம்மூத்களின் விருப்பமான புல்வெளி காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டது அந்த யானைக் கூட்டங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.
 
உணவுக்காக அந்த உயிரினங்கள் உலாவும் தூரத்தை அது மட்டுப்படுத்தியது. மேலும் அவை வேட்டையாடப்படும் அபாயத்தில் வைத்தது.
 
ஒரு சர்வதேச குழுவின் இப்பணிகள் மற்றும் ஆராய்ச்சிகள், ஓர் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது.