'காஷ்மீரில் இந்திய ராணுவத்திடம் சரணடையும் தீவிரவாதி'

Kashmir
Sasikala| Last Modified சனி, 17 அக்டோபர் 2020 (16:02 IST)
ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதி என்று இந்திய ராணுவத்தினரால் கூறப்படும் ஒருவர் சரணடையும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி  வருகிறது.

இருபது வயதை கடந்துள்ள அந்த நபர் சில நாட்களுக்கு முன்புதான் தீவிரவாதக் குழு ஒன்றில் சேர்ந்தார் என்றும், அவரிடமிருந்து ஏகே - 47 ரக துப்பாக்கி ஒன்று  கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
 
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அந்தக் காணொளியில் துப்பாக்கி ஏந்தி, பாதுகாப்பு கவசம் அணிந்த ராணுவ வீரர் ஒருவர், தீவிரவாதி என்று ராணுவத்தால்  அடையாளப்படுத்தப்படும் நபரிடம் சரணடையுமாறு கூறுவது தெரிகிறது.
 
பின்னர் அவர் கைகளை உயர்த்திக்கொண்டு அந்த ராணுவ வீரரை நோக்கி வருவதும், நான் உன்னைத் சுட மாட்டேன் என அந்த ராணுவ வீரர் அவரிடம் கூறுவதும்  பதிவாகியுள்ளது.
 
அந்த ராணுவ வீரர் தனது சக ராணுவத்தினர் இடமும் அவரை துப்பாக்கியால் சுட வேண்டாம் என்று கூறுகிறார். பின்னர் சரணடைந்த நபருக்கு இந்திய ராணுவத்தினரால் தண்ணீர் வழங்கப்படுகிறது.
 
ஜஹாங்கிர் பட் என இந்திய ராணுவத்தால் பெயர் வெளியிடப்பட்டுள்ள, அந்த நபர் மேலங்கி எதுவும் அணியாமல் கால் சட்டை மட்டுமே அணிந்திருந்தார்.
 
இந்த சம்பவம் நடந்தபோது அவரது தந்தையும் ராணுவத்தினரால் அந்த இடத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
 
இந்திய ராணுவம் கூறுவது என்ன?
 
அக்டோபர் 13ஆம் தேதி சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் இரண்டு ஏ.கே - 47 ரக துப்பாக்கியுடன் காணாமல்போனார். அதே நாளில் ஜஹாங்கீர் பட் சாடூரா எனும் ஊரில் இருந்து காணாமல் போனது தெரியவந்தது. அவரை கண்டுபிடிக்க அவரது குடும்பத்தினர் முயற்சித்து வந்தார்கள்.
 
வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அந்த நபர் சுற்றிவளைக்கப்பட்டு இந்திய ராணுவத்தின் விதிமுறைகளின்படி அவர் சரணடையுமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் சரண் அடைந்தார் என ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ராணுவம் வெளியிட்டுள்ள இன்னொரு காணொளியில் தனது மகனின் உயிரை காப்பாற்றியதற்காக சரணடைந்தவரின் தந்தை ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிப்பது  மற்றும் அவரது மகனை மீண்டும் தீவிரவாதி ஆக விடாதீர்கள் என்று ராணுவ வீரர் ஒருவர் கூறுவது ஆகியவை பதிவாகியுள்ளன.
 
தவறாக வழிநடத்தப்பட்டு தீவிரவாதத்தை தேர்ந்தெடுப்பவர்களை இந்திய ராணுவம் பாதுகாப்பாக மீட்கும் பணி தொடரும் என்றும் இந்திய ராணுவத்தின் ட்வீட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் காணொளியை பகிரும் பலரும் இந்திய ராணுவத்தை பாராட்டி வருகிறார்கள்.

இதில் மேலும் படிக்கவும் :