வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (00:58 IST)

ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த 78 பேரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த 78 பேரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி திரும்பியுள்ள 78 பேரில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் விதிகளின்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை வந்திறங்கியவர்களில் வைரஸ் கண்டறியப்பட்ட 16 பேரும் அதற்கான அறிகுறியற்றவர்களாக இருந்தனர். எனினும் பரிசோதனை முடிவில் பாசிட்டிவ் என தெரிய வந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் மூன்று சீக்கிய மத குருக்களும் அடங்குவர். சீக்கியர்கள் புனிதமாக கருதப்படும் மத நூல்கள் அடங்கிய கட்டுகளை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்க வந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அந்த நூல்கள் கட்டில் ஒன்றை தமது தலையில் சுமந்தபடி விமான நிலைய வளாகத்தில் கொண்டு வந்தார்.

அதை சுமந்து வரும் காணொளியை ஹர்தீப் சிங் பூரி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், அவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் இதுநாள்வரை 228 இந்திய குடிமக்கள் உள்பட 626 பேர் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதில் 77 ஆப்கன் சீக்கியர்களும் அடங்குவர். மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அந்த நாட்டில் பணியாற்றி வந்த இந்திய தூதரக ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. அவர்களின் மீட்பு பணிகளை பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேரடியாக மேற்கொண்டு வருகிறது.