செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (12:27 IST)

இந்தியாவுடன் மோதலை விரும்பவில்லை: தாலிபன் அமைச்சர் பிபிசிக்கு பேட்டி!

ஆப்கானிஸ்தானில் தாலிபன் இடைக்கால அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி, பாகிஸ்தானுக்கும் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) இடையேயான உடன்படிக்கையில் தாலிபன் அரசு மத்தியஸ்தராக செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
 
தங்களுடைய அரசு "இரு தரப்புகளின் விருப்பத்திற்கு இணங்க" இந்த உடன்படிக்கையில் மூன்றாம் தரப்பாகவும், மத்தியஸ்தராகவும் செயல்படுவதாக, பிபிசிக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார்.
 
"இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஒப்பந்தத்தின் முதல் பகுதியில் ஒரு மாத போர்நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளைத் தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்," என்று அவர் கூறினார்.

இது நல்லதொரு நடவடிக்கை எனவும், இது தொடர்பாக மேலும் சிரமங்கள் ஏற்படாது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானுக்கும் டிடிபிக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
 
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இடைக்கால வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி தனது பிரதிநிதிக்குழுவுடன் மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தார்.
 
பெண் பத்திரிகையாளருக்கு அளித்த முதல் நேர்காணல்
இந்த பயணத்தின் போது, ​​பிரதமர் இம்ரான் கான், வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி உள்ளிட்ட பல்வேறு அரசு பிரமுகர்களை சந்தித்த அவர், பத்திரிகையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடனும் சந்திப்புகளை நடத்தினார்.
இந்தப்பயணத்தின் போது ​​அவர் பிபிசிக்கு பேட்டியளித்தார். ஒரு பெண் பத்திரிகையாளருக்கு அவர் அளித்த முதல் நேர்காணல் இது.
 
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமீர் கான் முத்தக்கி, ஐஎஸ் ஒரு அச்சுறுத்தல்தான், ஆனால் தனது அரசு நாட்டின் பெரும்பகுதியிலிருந்து அதை அகற்றிவிட்டது என்று கூறினார்.
 
"உலகில் எங்குவேண்டுமானும் சிற்சில சம்பவங்கள் நடக்கலாம். முன்பு ஆப்கானிஸ்தானின் 70 சதவிகிதம் பகுதி இஸ்லாமிய அமீரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தாலிபன்கள் இந்தப் பகுதிகளில் இருந்து ஐஎஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துள்ளனர். முன்னாள் காபூல் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் மட்டுமே அந்த அமைப்பு செயல்பட்டு வந்தது," என்று அவர் தெரிவித்தார்.
 
"நாங்கள் காபூலைக் கைப்பற்றியதும், ஐஎஸ் அமைப்பு இந்தப் பகுதிகளில் தலை தூக்கத் தொடங்கியது. ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்த எங்கள் அரசு சிறந்த நடவடிக்கைகளை எடுத்தது. நாங்கள் இப்போது பெரும்பாலான பகுதிகளில் ஐஎஸ் அமைப்பை ஒடுக்கிவிட்டோம். மசூதிகள் போன்ற சில இடங்களில் சில சம்பவங்கள் நடக்கின்றன. இது உலகில் எங்கும் நடக்கலாம்,"என்று அவர் குறிப்பிட்டார்.
 
"இந்தியாவுடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை"
 
இந்தியாவுடனான உறவு குறித்த கேள்விக்கு பதில்கூறிய அவர், இந்தியா உட்பட எந்த நாட்டுடனும் ஆப்கானிஸ்தான் மோதலை விரும்பவில்லை என்றார்.
 
உலகின் எந்த நாட்டுடனும் மோதல் இருக்கக்கூடாது என்பதே ஆப்கானிஸ்தானின் தற்போதைய அரசின் கொள்கை என்று அவர் கூறினார்.
"ஆப்கானிஸ்தான் வேறு எந்த நாட்டுடனும் மோதல்களையோ அல்லது நாட்டை பாதிக்கும் சவால்களை எதிர்கொள்வதையோ விரும்பவில்லை. எனவே நாங்கள் தொடர்ந்து இந்த வழியில் செயல்படுவோம்."என்றார் அவர்.
 
இந்தியாவுடனான நெருங்கிய உறவுகள் குறித்து பாகிஸ்தான் அல்லது சீனாவிடம் இருந்து ஏதாவது கருத்துக்கள் வெளியானதா என்று கேட்டபோது அவர் மாஸ்கோவில் நடந்த கூட்டங்களை பற்றிக்குறிப்பிட்டார்.
 
"நாங்கள் மாஸ்கோ மாநாட்டில் கலந்துகொண்டபோது, ​​​​இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். அங்கு பேச்சுக்கள் ஆக்கபூர்வமாக இருந்தன. நாங்கள் எந்த நாட்டையும் எதிர்க்க கூடாது என்று நினைக்கிறோம்,"என்று அவர் சொன்னார்.
 
பெண்களுக்கான உரிமைகளை வழங்குவதான உறுதிமொழி
தாலிபன் அரசு பதவிக்கு வந்த பிறகு பெண்களின் உரிமைகள் மீறப்படும் விஷயம் குறித்தும் பிபிசி, தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியிடம் பேசியது.
 
முன்பை விட இப்போது தாலிபன்கள் மாறிவிட்டதாக உலகுக்குச் சொல்லப்பட்டது. இது உண்மை என்றால், நாட்டில் பெண்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் ஏன் வழங்கப்படவில்லை என்றும் அவரிடம் வினவப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த அமீர்கான் முத்தக்கி, இந்த செய்திகளை மறுத்ததோடு, "பெண்கள் எந்தத் துறையிலும் காணப்படுவதில்லைஎன்பது உண்மையல்ல" என்றார்.
 
"சுகாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பு 100 சதவிகிதம் உள்ளது. கல்வித்துறையில் அவர்கள் கற்பிக்கும் பணியை செய்கின்றனர். அவர்களின் சேவைகள் தேவைப்படும் எல்லா துறைகளிலும் அவர்கள் பணியாற்றுகின்றனர். குறிப்பிட்ட துறையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்கக் கூடாது என்ற எந்த சட்டமும் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்..
தாலிபன்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும்பாலான மாகாணங்களில் பெண்களின் கல்வி அமைப்புகள் மூடப்பட்டுள்ளதாகவும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.
 
"ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுகின்றன"
இது தவிர மனித உரிமைகளுக்காகப் பணியாற்றும் பெண்கள் கொல்லப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த தாலிபன் வெளியுறவு அமைச்சர், ஊடகங்கள் இந்த விஷயத்தில் தவறாக செய்தி வெளியிடுகின்றன என்று கூறினார்.
 
ஆப்கானிஸ்தானின் சில மாகாணங்களில் பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான மாகாணங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் எல்லா வயது பெண்களுக்குமான பள்ளிகள் எப்போது திறக்கப்படும், வேலைகளில் பெண்கள் தங்கள் பங்கைப் பெற எப்போது அனுமதிக்கப்படுவார்கள் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது "எல்லாம் நன்றாகவே இருக்கிறது" என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
 
இருப்பினும் சில பகுதிகளில் கல்வி அமைப்புகள் இன்னும் மூடப்பட்டுள்ளதை, அமீர் கான் முத்தக்கி ஒப்புக்கொண்டார். இதற்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய்தான் காரணம் என்றும் அவர் கூறினார்.
 
"எந்த மாகாணத்திலும் கல்வி நிலையங்கள் மூடப்படவில்லை. நாடு முழுவதும் எல்லா கல்வி அமைப்புகளும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளோம். நாடு முழுவதும் ஆண்களுக்கான பள்ளிக்கூடங்கள் திறந்துள்ளன. எல்லா மாகாணங்களிலும், ஆறாம் வகுப்பு வரை பெண்களுக்கான பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன.சில மாகாணங்களில் உயர்நிலைப் பள்ளிகள் திறந்திருந்தாலும், எல்லா இடங்களிலும் இது இல்லை. சில பகுதிகளில் பிரச்சனை என்னவென்றால், கொரோனா காரணமாக பல பள்ளிகள் சில மாதங்கள் மூடப்பட்டன. நாங்கள் மீண்டும் பள்ளிகளைத் திறக்கத் தொடங்கினோம். இப்போது நாங்கள் 75 சதவிகித பள்ளிகளைத் திறந்துவிட்டோம், நாங்கள் இத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து உழைத்து, நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறோம்," என்று அவர் சொன்னார்.
 
ஆப்கானிஸ்தானில் அரசு மற்றும் இதர அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களை வேலைக்குத் திரும்ப அனுமதிக்காதது குறித்து அவரிடம் வினவப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, முந்தைய அரசில் பணிபுரிந்த பெண்கள் எவரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
"இந்தப் பெண்களின் ஊதியம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எந்தக் குறைவும் செய்யப்படவில்லை,"என்றார் முத்தக்கி.
 
தாலிபன் அரசு அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதா?
தங்கள் இடைக்கால அரசு, ஒரு 'உள்ளடக்கிய' அரசுக்கான சர்வதேச நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறது என்றும் அனைத்து தரப்பினரும் இதில் உள்ளனர் என்றும் தாலிபன் அரசு கூறி வருகிறது.
 
ஆனால் 'உள்ளடக்க அரசு' என்பது அனைத்துத் தரப்பினரும், பெண்களும் சமமாக பங்கேற்கும் அரசு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் கவுன்சில் தெளிவாகக் கூறியுள்ளது.
 
எனினும், தாலிபன்களின் இடைக்கால அமைச்சரவையில் மகளிர் யாரும் இல்லை. இதே கேள்வியை அமீர்கான் முத்தக்கியிடம் கேட்டபோது, ​​'அரசில் பெண்களுக்கு எந்தப் பங்கும் கிடைக்கவில்லை' என்று தான் நினைக்கவில்லை என்றார்.
 
"ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் அரசு செலவுகள் சர்வதேச உதவியை பெரிதும் நம்பியுள்ளன. அது தற்போது நின்றுபோயுள்ளது. கூடவே வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. தற்போது, ​​சர்வதேச உதவி நிறுவனங்கள் மற்றும் பிற நாடுகளின் மனிதாபிமான உதவிகளும் கிடைப்பதற்கு இல்லை. இதன் காரணமாக நாடு தீவிரமான மனிதாபிமான நெருக்கடியை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது," என்று அவர் கூறினார்.
 
ஆப்கானிஸ்தானுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் மற்றும் உதவிக்கான வழிகள் மீண்டும் திறக்கப்படாவிட்டால், தாலிபன் அரசு என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்று கேட்டதற்கு, உலகத்துடனான தங்கள் உறவு முன்னேறி வருவதாக முத்தக்கி கூறினார். உலக நாடுகளுடனான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
" எங்கள் அரசு, எல்லா பிராந்தியங்கள் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியது. ஆகவே உலகம் இந்த அரசை அங்கீகரிக்க வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 
"ஆப்கானிஸ்தானின் நடப்பு அரசில், முந்தைய அரசின் எல்லா ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். சுமார் 50 லட்சம் ஊழியர்கள் இதில் அடங்குவார்கள். முந்தைய அரசை 'உள்ளடக்க அரசாக' உலகம் அங்கீகரித்திருந்த நிலையில், இந்த அங்கீகாரம் எங்கள் அரசுக்கு ஏன் கொடுக்கவில்லை?"என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
"எல்லா பழங்குடியினரையும் உள்ளடக்கிய அரசு என்று முந்தைய அரசை உலகம் கருதும்பட்சத்தில், எங்கள் அரசிலும் அனைத்து சாதி மற்றும் பழங்குடியினருக்கும் பிரதிநிதித்துவம் உள்ளது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
 
"அமைச்சகங்களில் அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதித்துவம் என்று அவர்கள் பார்த்தாலும்கூட, எங்களிடம் பஞ்சஷீர் பிராந்தி9யத்தை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். பத்ரூக்ஷன், ஃபார்யாப், கந்தஹார், நங்கர்ஹார் மற்றும் காபூல் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். ஒவ்வொரு நாடும் பிராந்தியமும், 'உள்ளடக்கிய அரசு' குறித்து தன் சொந்த விளக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே எங்கள் அரசை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கும் அனைவருக்கும் அவர்களின் உரிமையை வழங்குவதற்கும் நாங்கள் எங்கள் முயற்சிகளைத் தொடர்வோம்,"என்று அவர் வலியுறுத்திக்கூறினார்.
 
பெண் பத்திரிக்கையாளர் என்பதால் முதலில் நேர்காணல் மறுப்பு
கடந்த காலங்களில் பலமுறை தொலைபேசி அழைப்புகளுக்கு நான் பதிலளிக்கும்போது ஒரு பெண் பேசுவதைக் கேட்டவுடன் , 'ஃபர்ஹத் ஐயா' வுடன்' பேச வேண்டும் என்று பலர் கூறுவார்கள். நான் 'ஃபர்ஹத்' தான் பேசுகிறேன் என்று பதில் சொன்னதும், ஒரு கணம் மௌனம் நிலவும்.
 
ஆனால் என் பெயர் தாலிபன்களையும் குழப்பும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆப்கானிஸ்தான், துருக்கி, இரான் உள்ளிட்ட பல நாடுகளில் ஆண்களுக்கும் 'ஃபர்ஹத்' என்ற பெயர் வைக்கப்படுகிறது.
 
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். பல பத்திரிக்கையாளர்கள் அவரை பேட்டி எடுக்க முயன்றனர். நானும் முயற்சித்தேன்.தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தக்கியிடம் என்னுடைய நேர்காணல் உறுதியானது.
 
நேர்காணலின் நேரம் இரவு 8.30 மணி முதல் 9:30 மணி வரை என்று கூறப்பட்டது. நான் எனது குழுவுடன் சரியான நேரத்தில் ஹோட்டலை அடைந்தேன். அங்கு பல பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இருந்தனர்.
 
பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் முத்தக்கி சந்திப்பு நடத்துவார் என்று கூறப்பட்டது. என்னைத் தவிரஅங்கு, அமெரிக்க செய்தி முகமை சிஎன்என் உடன் தொடர்புடைய மற்றொரு பெண் பத்திரிகையாளர் சோஃபியா சைஃபியும் இருந்தார்.
 
பத்திரிகையாளர்கள் அமீர் கானிடம் சில கேள்விகளைக் கேட்டனர், அதற்கு அவர் பதிலளித்தார். அவருடன் அவரது செய்தித் தொடர்பாளர் அப்துல் கஹார் பல்கி, ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.
 
ஆனால் தாலிபன் வெளியுறவு அமைச்சரின் பெரும்பாலான பேச்சு, உருது மற்றும் பஷ்டோ மொழியில்தான் இருந்தது. ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்பு பற்றிய எனது கேள்விக்கு உருது மொழியில் பதிலளித்தார்.
 
இதற்கிடையில், அவரது இரவு விருந்தின் போது பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த வெளியுறவு அலுவலகம் திட்டமிட்டிருந்தது என்று சில வட்டாரங்கள் தெரிவித்தன.
 
எந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விருந்தில் கலந்து கொள்வார்கள் என்பது ஆப்கானிஸ்தான் பிரதிநிதிக்குழுவுக்குத் தெரியாது என்பது பின்னர் தெரியவந்தது.
 
இதற்கிடையில், அங்கிருந்த ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து 'வெளியுறவு அமைச்சர் முத்தக்கி, உங்களுக்கு பேட்டி கொடுக்க விரும்பவில்லை, அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் 'என்று கூறினார்.
 
இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் இது குறித்து கேள்வி எழுப்பினேன். இதற்கு காரணம் பிபிசி என்று முதலில் என்னிடம் கூறப்பட்டது. ஆனால் ' முத்தக்கியின் நேர்காணல் ஒரு ஆண் பத்திரிகையாளருடன் இருப்பதாக அவரது ஊழியர்கள் நினைத்தனர். அவர் பெண்களுக்கு நேர்காணல் கொடுப்பதில்லை," என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
இருப்பினும் நாங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டோம். பின்னர் தாலிபனின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி எங்களுக்கு சில நிமிடங்கள் ஒதுக்க ஒப்புக்கொண்டார், ஆனால் அவரது ஊழியர்கள் சிலர் , 'பிபிசி பெண் பத்திரிகையாளர்' அவரை பேட்டி எடுப்பதை எதிர்த்தனர்.
 
ஆனால் பேட்டி கொடுக்க விரும்பவில்லை என்று அமீர் கான் முத்தக்கி நடந்துகொண்ட விதத்திலிருந்து தெரியவில்லை.
 
தாலிபன்கள் முன்பு இருந்ததை விட மாறிவிட்டதாகவும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதாகவும், ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் மற்றும் பல பாகிஸ்தான் அமைச்சர்களும் கூறியுள்ளனர்.
 
தாலிபன் வெளியுறவு அமைச்சரை பேட்டி காணும் எனது முயற்சியின் போது, ஒரு விஷயம் தெளிவாகத்தெரிந்தது. ​​தாலிபன்களில் சிலர் மாற நினைத்தாலும் கூட, அவர்களைச்சுற்றி இருக்கும் அடிப்படைவாதிகளின் பெரிய குழு, தாலிபன் அரசு மற்றும் செயல்பாட்டாளர்களிடையே பெண்கள் குறித்த மனப்பான்மையில் மாற்றம் ஏற்படுவதற்கு பெரும் தடையாக உள்ளது.