செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (22:56 IST)

டி20: பாகிஸ்தான் வெற்றிக்கு பாபர் ஆஸம் சொன்ன 6 ஓவர் ரகசியம்

India Pakistan
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வென்ற மகிழ்ச்சி பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான வெற்றி ரகசியத்தை அணியின் கேப்டன் பாபர் ஆஸம் கூறியிருக்கிறார்.
 
“கடினமான பிட்ச்சில் அடித்து ஆட வேண்டும் என்று நானும் பாபரும் முடிவெடுத்தோம்” என்று தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரிஸ்வான் போட்டியின் முடிவில் கூறினார்.
 
6 ஓவர்கள் பவர் பிளே முடிந்த பிறகு ஒருவர் மட்டும் பந்தைத் தூக்கி அடிப்படி மற்றொருவர் நிதானமாக ஆடுவது என்று திட்டமிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

 
பாகிஸ்தான் - நியூஸிலாந்து போட்டி நடந்த சிட்னி மைதானம் இரண்டாவதாக ஆடும் அணிக்குக் கை கொடுக்காது என்பதுதான் இதுவரையிலான போட்டிகளின் நிலைமை.

 
இதற்கு இந்தத் தொடரில் மொத்தம் ஆடப்பட்ட ஆறில் 5 போட்டிகளில் முதலில் ஆடிய அணியே வென்றிருக்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டும் இங்கிலாந்து அணி இரண்டாவது பேட் செய்து வென்றது.

 
அதிலும் வெறும் இரண்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில்தான் இங்கிலாந்தால் 142 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடிந்தது.

 
இப்படியொரு கடினமான பின்னணி கொண்ட மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 153 ரன்கள் என்ற இலக்கை மிக எளிமையாக வென்றிருப்பது வியக்க வைத்திருக்கிறது.

 
'நியூஸிலாந்துடன் இதுவரை தோற்றதில்லை, கோப்பை எங்களுக்குத்தான்' - பாகிஸ்தான் நம்புவது ஏன்?

 
ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வானின் கருத்தையே பாபர் ஆஸமும் தனது பேட்டியின் போது கூறினார், “களத்துக்குள் நுழைவதற்கு முன்பே முதல் ஆறு ஓவர்களை எவ்வளவு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அதன் பிறகு மற்றவர்கள் வந்து பார்த்துக் கொள்ளட்டும் என்று முடிவெடுத்தோம்,” என்று பாபர் கூறினார்

 
போட்டியைப் பார்த்தால் பாபர் ஆஸம், ரிஸ்வான் ஆகியோர் திட்டமிட்டபடியே செயல்பட்டிருப்பதைக் காண முடியும். முதல் 6 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 55 ரன்களைக் குவித்து வலுவான அடித்தளத்தை அமைத்துத. பாபர் 25 ரன்களையும் ரிஸ்வான் 25 ரன்களையும் குவித்திருந்தனர்.

 
பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் பவர்பிளே ஓவர்களைச் சிறப்பாக கையாண்டது இந்தப் போட்டியில்தான். இதற்கு முன் முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்களை எடுத்ததுதான் சிறப்பான துவக்கமாக இருந்தது. 

 
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பவர் பிளையில் விக்கெட் எதுவும் விழாததால் பாபரும் ரிஸ்வானும் ரன் குவிப்பைத் தொடர்ந்து 76 பந்துகளில் 105 ரன்கள் என்ற நம்பிக்கையளிக்கும் ஸ்கோரை எட்டினர். 
 
 
தொடக்க ஓவர்களில் ரிஸ்வான் அதிரடியாக ஆடத் தொடங்கியதைக் காண முடிந்தது. ஆனால் அது திட்டமிடப்பட்ட ஒன்றுதான் என்று ரிஸ்வான் கூறியிருக்கிறார்.

 
153 ரன்கள் என்பது எளிய இலக்கு இல்லை என்று நியூஸிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகிறார். அதை பாகிஸ்தானின் ரிஸ்வானும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 
இந்த இலக்கை சிரமம் இல்லாமல் அடைந்ததற்கு பாகிஸ்தானின் ஆறு ஓவர் ரகசியமும் காரணமாக இருக்கலாம்.
 
 
‘அரிதினும் அரிதான’ ஃபீல்டிங் 
 
பாகிஸ்தானின் பந்துவீச்சும் ஃபீல்டிங்கும் இன்றைய போட்டியில் சிறப்பாக இருந்ததைக் காண முடிந்தது. பாகிஸ்தான் அணியின் பீல்டிங் பெரும்பாலும் மெச்சத் தக்க வகையில் இருக்காது என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அதை இன்றையப் போட்டி பொய்யாக்கியது.

 
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே இதைக் குறிப்பிட்டுள்ளார். “பாகிஸ்தான் நியூஸிலாந்தை விட சிறப்பாக பேட் செய்தது, சிறப்பாக பந்து வீசியது. அரிதினும் அரிதாக சிறப்பாக ஃபீல்டிங் செய்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
இதற்கு சரியான எடுத்துக்காட்டு கான்வேயின் ரன் அவுட். ஆறாவது ஓவரில் பந்தைத் தட்டிவிட்டு கான்வே ரன் எடுக்க ஓடியபோது, மிட் ஆன் திசையில் நின்று கொண்டிருந்த ஷதாப் கான் பந்தைப் பிடித்து நேரடியாக ஸ்டம்பில் எறிந்தார். ஒரு சில அங்குல இடைவெளியில் ஒரு முக்கிய விக்கெட்டை நியூஸிலாந்து இழந்தது. அந்த அணி சரிந்ததற்கு இந்த ரன் அவுட்டும் ஒரு முக்கியக் காரணம்.
 
 
 
நியூஸிலாந்து அணியினர் இப்படியும் கேட்சுகளை தவற விடுவார்களா என்பது போல இருந்தது இன்று அவர்களது பீல்டிங். கடந்த 5 போட்டிகளும் சேர்த்து மூன்று கேட்சுகளைத் தவறவிட்ட நியூஸிலாந்து அணி இன்று மட்டுமே 3 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டது. அதிலும் பாகிஸ்தானின் முதல் ஓவரில் ஒரேயொரு ரன் எடுத்திருந்த பாபர் ஆஸமின் பேட்டில் பட்டுச் சென்ற பந்தை விக்கெட் கீப்பர் பிடிக்காமல் போனது அந்த அணியின் வெற்றி வாய்ப்பைப் பறித்துவிட்டது.
 
பாகிஸ்தானை போல பவர்பிளே ஓவர்களை நியூஸிலாந்து அணி சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  ஆறு ஓவர்கள் முடிந்திருந்தபோது நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரன ஆலன், சாஹின் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர் பிளே ஓவரின் கடைசிப் பந்தில் கான்வே 21 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். பவர் பிளேயில் ரன்ரேட் குறைவாக இருந்ததுடன் விக்கெட்டுகளும் விழுந்ததால் நியூஸிலாந்து அணி அதன் பிறகு பதற்றமாகிவிட்டது.
 
முதல் ஆறு ஓவர்களில் நியூஸிலாந்தை திணறடித்ததும், அதே முதல் ஆறு ஓவரில் விக்கெட் இழப்பின்றி ரன் குவித்ததும் பாகிஸ்தானின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துவிட்டன.