சோகத்தில் மூழ்கியுள்ள சுஜித்தின் வீடு; அஞ்சலி செலுத்த குவியும் பொதுமக்கள்
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுஜித்தின் வீட்டில், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, இன்று (செவ்வாய்கிழமை) சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து குழந்தை விழுந்த கிணறு, குழந்தையை மீட்பதற்காக தோண்டப்பட்ட குழி இரண்டுமே காங்கிரீட் போட்டு மூடப்பட்டுள்ளது. அங்கு தடுப்புகள் போடப்பட்டுள்ள நிலையில், பலரும் அங்கு வந்து அந்த இடத்தை பார்வையிட்டு வருகிறார்கள்.
தற்போது சுஜித்தின் வீடு, ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.
வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள சுஜித்தின் புகைப்படத்திற்கு, பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவதாக பிபிசி தமிழுக்காக களத்தில் இருக்கும் செய்தியாளர் ஹரிஹரன் தெரிவிக்கிறார்.
தன் குழந்தை சுஜித் இறந்த கவலையில் இருக்கும் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அவருக்கு தற்போது குளுக்கோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. அவருடன் ஒரு செவிலியர் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சுஜித்தின் வீடு அவரது உறவினர்களாலும், பொது மக்களாலும் சூழ்ந்திருக்கிறது.
இன்று காலை சுமார் 7 மணியளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சுஜித்தின் உடல், அவனது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவில்லை. நேரடியாக மருத்துவமனையில் இருந்து 8.15 மணி அளவில் நடுக்காட்டுப்பட்டி அருகில் உள்ள பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்ட சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடும் முயற்சிகளுக்கு பின்னரும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போய்விட்டதே என்று சுஜித்தின் குடும்பத்தினரும், உறவினர்களும், கிராம மக்களும் பெருங்கவலை அடைந்துள்ளனர்.