செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (21:16 IST)

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்: இஸ்ரோ என்ன செய்யப் போகிறது?

ISRO
ககன்யான் திட்டத்திற்கான முன்னோட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரும் சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகின்றனர்.
 
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் மனிதர்களை அனுப்புவதற்கான குப்பியின் பாதுகாப்பு செயல்பாட்டை பரிசோதனை செய்கின்றனர்.
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. ககன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று பொருள். வானத்தை நோக்கிச் செல்லும் வாகனம் என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், மூன்று இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள்.
 
ராக்கெட் ஏவும் வாகனம் மார்க் -3 (LVM-3) மூலம் செலுத்தப்படும் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
 
இந்தத் திட்டம் விண்வெளி ஆய்வில் உள்நாட்டு நிபுணத்துவம், இந்திய தொழில்துறையின் அனுபவம், இந்திய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவுசார் திறன்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பில் இருந்து கிடைக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்களைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்ட உத்தியின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
 
 
வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் அழைத்து வருவது மிகவும் சவாலான பணி. அதற்கான பல கட்ட தயாரிப்புகள் தேவைப்படுகின்றன.
 
மனிதர்களை அனுப்புவதற்கான குப்பியை எதிர்பாராத சவால்களில் இருந்து பாதுகாப்பதுதான் இப்போதைய ஆய்வின் நோக்கம். இந்தக் குப்பியில் 3 வீரர்கள் அமரலாம்.
 
ஏவுகணையை விண்ணுக்கு அனுப்பும்போது எதிர்பாராத விபத்துகள் நேரலாம். அவ்வாறான சூழலில் குப்பியை மட்டும் தனியாகப் பிரித்து பாதுகாப்பான விதத்தில் கடற்பரப்பில் விழச் செய்வதுதான் இப்போது நடக்கும் ஆய்வின் இலக்கு.
 
அதற்காக ஜி.எஸ்.எல்.வி எம்.கே III ஏவுகணையில் குப்பியை இணைத்து சுமார் 17 கி.மீ உயரம் வரை பறக்கச் செய்து பின்னர் அதைத் தனியாகப் பிரித்து கடலில் வீழச் செய்து சோதிக்கவுள்ளனர். அந்தக் குப்பியை மீட்டு வந்த பின்னர் அதன் பாதுகாப்புத் தன்மையைப் பரிசோதித்து அதற்கு ஏற்ற விதத்தில் மேம்படுத்தவுள்ளார்கள்.
 
 
அக்டோபர் 21 அன்று நடக்கும் சோதனைக்கு திரவ தள்ளுவிசையால் இயங்கும் ஒற்றை நிலை ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தப் பரிசோதனை பணிக்காக சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டது.
 
அந்த ராக்கெட்டின் மேலே ஒரு சிறப்புக் குப்பி இணைக்கப்பட்டிருக்கும். அதில்தான் மனிதர்கள் பாதுகாப்பாக இருத்தப்படுவார்கள். அதில் வீரர்களுக்கான இருக்கைகள் அமைந்திருக்கும்.
 
அவசரக் காலத்தில் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் அதில் இருக்கும். அது பெரிய காற்றுப்பை போல அமைந்திருக்கும். ஏவுகணை புறப்படுவதில் ஏதாவது பிரச்னை இருந்தால் குப்பியை விரைவாக வெளியே இழுத்துத் தள்ள முடியும்.
 
இப்போது நடக்கும் சோதனையில் ஏவுகணையின் சோதனைப் பறப்பு நடக்கிறதா என்று சரி பார்க்கப்படும். அதன் பின்னர் குப்பியில் உள்ள பாராசூட் மற்றும் பிற மீட்பு அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பரிசோதிக்கப்படும்.
 
பின்னர் கடற்பரப்பில் அது விழுந்து மீட்டு எடுத்து வருவதற்கான செயல்முறை பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு அவசியமான ஏராளமான படிப்பினைகளை வழங்கும்.
 
 
திட்டத்தைச் செயல்படுத்த இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மேலும் பல்வேறு நிலைகளை ககன்யான் கடக்க வேண்டும். இப்போது நடக்கவிருப்பது முதல் முன்னோட்ட சோதனை.
 
அடுத்து இதேபோல வாகனத்தைப் பரிசோதிப்பதற்கான D2, D3, D4 என்ற மூன்று சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பரிசோதனைகளின்போது அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விண்வெளியின் கடுமையான சூழல் மற்றும் கதிர்வீச்சு சாத்தியங்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளிட்டவை பரிசோதிக்கப்படும்.
 
பலகட்ட பரிசோதனைகளை முடித்து திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற சாதனையை இந்தியா எட்டிப்பிடிக்கும்.
 
ஏற்கெனவே நிலவில் தரையிறங்கி சாதித்த இந்தியாவிற்கு இது மற்றுமொரு முக்கிய சாதனையாக அமையும். மேலும் விண்வெளி ஆய்வில் அதன் வளர்ந்து வரும் திறன்களையும் நிரூப்பதாகவும் இது அமைந்திடும்.
 
 
ககன்யான் திட்டத்தின் முன்னேற்றத்தைp பரிசீலிப்பதற்கான கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார். அப்போது இஸ்ரோவின் அடுத்தடுத்த இலக்குகளையும் அதில் பேசியுள்ளனர்.
 
வரும் 2035ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது, 2040க்குள் சந்திரனுக்கு முதல் இந்தியரை அனுப்புவது உள்ளிட்டவற்றை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.
 
இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் நம்முடைய ஏவுகணை தொழில்நுட்பங்கள் முன்னேற வேண்டும். மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற விண்வெளி ஆய்வகங்களை நிலைநிறுத்துவதில் ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
 
அதற்கேற்ற எண்ணிக்கையில் ஏவுதளங்களையும் அமைக்க வேண்டும். இவற்றோடு வெள்ளி, செவ்வாய் ஆகிய கோள்களில் தரை இறங்குவதற்கான திட்டமும் இஸ்ரோவின் பட்டியலில் உள்ளது.