செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 18 மே 2023 (11:00 IST)

திருடப்பட்ட கைபேசிகள் இப்படி செய்தால் கிடைத்துவிடும் - மீட்க உதவும் அரசின் புதிய செயலி!

நீங்கள் எப்போதாவது உங்கள் கைபேசியை தொலைத்துள்ளீர்களா? உங்கள் ஃபோனை யாராவது திருடியிருக்கிறார்களா? அப்படியானால் அந்த ஃபோன் பெரும்பாலும் திரும்பக் கிடைத்திருக்காது.
 
தொலைந்த ஃபோனை கண்டுபிடிக்க காவல்துறையிடம் நாம் புகார் அளிப்போம். அதன்பின்னர் சிம் கார்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அந்த நம்பரை பிளாக் செய்துவிட்டு, புது ஃபோன், சிம் கார்டு வாங்குவோம்.
 
அதற்குப் பிறகு தொலைந்த கைபேசி பற்றிய நமது நினைப்பு மறந்து போகக்கூடும்.
 
ஆனால் இப்போது தொலைந்துபோன, திருடப்பட்ட உங்கள் கைபேசிகளை மீட்க முடியும். இதற்காக இந்திய அரசு ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கடந்த செவ்வாய்கிழமை (மே 16) அன்று www.ceir.gov.in என்ற புதிய இணையதளத்தைத் தொடக்கி வைத்தார்.
 
இது மூன்று புதிய அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
மையப்படுத்தப்பட்ட தொலைபேசி அடையாளப் பதிவு (CEIR) - இது தொலைந்து போன மற்றும் பழைய ஃபோன்கள் அனைத்திற்குமான ஓர் ஒருங்கிணைந்த தளம். உங்கள் கைபேசி தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, நீங்கள் இங்கே சென்று உங்கள் கைபேசியின் IMEI எண், எங்கே, எப்படி தொலைந்தது போன்ற முழு விவரங்களையும் பூர்த்தி செய்யலாம். இந்தத் தகவல் அனைத்தும் இந்தத் தளத்தில் இருந்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடனும், காவல்துறை கண்காணிப்பு அமைப்புகளுடனும் பகிரப்படுகிறது. திருடப்பட்ட போனின் IMEI எண்ணை மாற்ற திருடியவர்கள் முயல்வது வழக்கம். அதேபோல அந்த கைபேசியை வேறு நாட்டில் விற்க முயல்வதும் அடிக்கடி நடக்கும். இந்தத் தளத்தில் நாம் பதிவிடும் தகவல் மூலமாக இந்த நடவடிக்கைகளில் திருடியவர்கள் ஈடுபடும்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
KYM என்பதன் சுருக்கம் Know your Mobile, அதாவது 'உங்கள் மொபைலை தெரிந்து கொள்ளுங்கள்' என்று அர்த்தம் – நீங்கள் பழைய ஃபோனை வாங்கும்போது அந்த போனின் IMEI எண் மாற்றப்பட்டுள்ளதா, அந்த ஃபோன் எப்போதாவது திருடப்பட்டதா அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றிய தகவல்களை இந்தத் தளம் மூலமாக நீங்கள் பெறமுடியும். நீங்கள் முன்பு வேறொருவர் பயன்படுத்திய மொபைலை வாங்கும்போது, ​​இந்தத் தளம் உங்களுக்கு முக்கியமான தேவையாக இருக்கும்.
ASTR என்பது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவை. இதில் ஒரு நபரின் பெயரில் பெறப்பட்டுள்ள சிம் இணைப்புகளின் எண்ணிக்கை பற்றிய தகவலைப் பெறலாம். ஒரே நபர் அடையாள அட்டைகளை மாற்றி பல்வேறு ஆதார் அட்டைகளுடன் பல இணைப்புகளை வாங்கினால், அவற்றைக் கண்டறியும் பணியை '' செய்கிறது என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
அவர் அளித்த தகவலின்படி, சமீபத்தில் 35 ஆயிரம் இணைப்புகளை சோதனை செய்ததில், 35 போலி இணைப்புகள் இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுமட்டுமின்றி உங்கள் பெயரில் வேறு யாராவது இணைப்பு எடுத்துள்ளார்களா அல்லது ஃபோன் வாங்கியிருக்கிறார்களா என்ற தகவலையும் இங்கு பெறலாம் என்றார் வைஷ்ணவ்.
 
ஆனால் இந்த போர்டல் எந்தளவுக்குப் பயன் தரும்?
 
செல்ஃபோன் திருட்டைத் தடுக்க முடியுமா?
 
பெரும்பாலும் நமது செல்ஃபோன் தொலைந்துவிட்டால் முதல்கட்டமாக, 'Find My Device அல்லது Find my iPhone' என்ற வசதியைப் பயன்படுத்தி ஃபோனை கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்.
 
ஆனால் இதைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க, தொலைந்து போன, திருடப்பட்ட ஃபோன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருக்க வேண்டும். மேலும் நமது ஃபோனில் இணைய வசதியும் ஜிபிஎஸ் வசதியும் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 
அதனால் தொலைந்த செல்ஃபோனை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
 
ஆனால் இந்தத் தளம் மூலமாக உங்கள் செல்ஃபோன் ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பு மூலமாகக் கண்காணிக்கப்படும் என்று இந்திய அரசு கூறுகிறது. சான்றாக சென்னையில் திருடப்பட்ட செல்ஃபோன் டெல்லியில் விற்கப்பட்டாலும் இந்தத் தளத்தின் உதவியுடன் நம்மால் அதைக் கண்காணிக்க முடியும்.
 
இந்தத் தளத்தின் அறிமுகம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டார்.
 
திருடியவுடன் சிம் கார்டை திருடர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் அந்த சிம் செயலிழக்காது. உங்கள் தனிநபர் தகவலை ரகசியமாக வைத்திருக்க அந்த ஃபோனை பிளாக் செய்வது அவசியம். அதையும் இந்தத் தளத்திலேயே செய்யலாம். எதிர்காலத்தில் உங்கள் ஃபோன் கண்டுபிடிக்கப்பட்டால், பிறகு இதே தளத்தில் அன்பிளாக் செய்து கொள்ளலாம்.
இதன்மூலம் செல்ஃபோன் திருட்டைத் தடுக்க முடியும் என்றும், திருடப்பட்ட பொருட்களின் விற்பனைக்கான கள்ளச் சந்தையையும் குறைக்க முடியும் என அரசு நம்புகிறது. மேலும் அதே தளத்தின் ASTR தொழில்நுட்பம் காரணமாக யாரேனும் உங்கள் பெயரில் போலி செல்ஃபோன் இணைப்புகளை எடுத்திருந்தால் அவற்றையும் சரிபார்க்கலாம்.
 
நம்மைக் கண்காணிக்குமா?
 
இங்கே ஒரு பெரிய கேள்வி எழுகிறது. KYCக்காக நாம் கொடுக்கும் தகவலை ஆஸ்டர்(ASTR) தொழில்நுட்பம் ஸ்கேன் செய்ய பயன்படுத்துகிறது. அப்படிச் செய்வது நமது தனியுரிமை கொள்கைக்கு அச்சுறுத்தலாக இருக்குமா?
 
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சட்டக் கட்டமைப்பிற்கு உட்பட்டே இந்தச் செயல்பாடு இருக்கும் என உறுதி அளித்துள்ளார். தொலைத்தொடர்பு மசோதாவின் அனைத்து விதிகளையும் சரிபார்த்த பிறகு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
மற்றொரு பிரச்னை என்னவெனில், இதில் பதிவு செய்யப்பட்ட எந்தக் கைபேசியாக இருந்தாலும், சிம் கார்டாக இருந்தாலும் அதை மத்திய அரசால் கண்காணிக்க முடியும். அப்படியெனில், அதைப் பயன்படுத்தி அரசு நம்மை உளவு பார்க்க முடியுமா?
 
இதுகுறித்து பதிலளித்த சைபர் நிபுணர் பிரசாந்த் மாலி, ​​“உங்கள் ஃபோன் எங்குள்ளது என்பதை மட்டுமே அரசால் கண்காணிக்க முடியும். இப்போதுகூட உங்கள் ஃபோனை கண்காணிக்கும் வசதி உள்ளது. அவர்கள் ஒருவரின் தொலைபேசியைக் கண்காணிக்க விரும்பினால், சட்டப்பூர்வ அனுமதியுடன் அவ்வாறு செய்யலாம்.
 
"இந்தத் தொழில்நுட்பம் உண்மையில் பயனளிக்கும். மும்பையில் தினமும் சுமார் ஆயிரம் போன்கள் திருடப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பம் திருடப்பட்ட கைபேசிகளின் புழக்கத்தைத் தடுக்க உதவும். எனவே இந்தத் தொழில்நுட்பம் நிச்சயம் பலன் தரும், இதன்மூலமாக திருடப்பட்ட ஃபோன்களை மீட்கும் வாய்ப்பு அதிகமாகிறது,” என்றார்.
 
இந்தத் தொழில்நுட்பம் புதியது என்றாலும், இதுவரை அதன் சோதனை காலத்தில் மட்டும் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு இந்தியாவில், 4 லட்சத்து 81 ஆயிரம் மொபைல் ஃபோன்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளன. அதில் சுமார் இரண்டரை லட்சம் மொபைல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது.
 
எனவே இதை நாடு முழுவதும் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதைப் பார்க்க வேண்டும்.