வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (13:24 IST)

ஸ்ரீராம் கிருஷ்ணன்: ட்விட்டரில் ஈலோன் மஸ்க்கின் வலது கரமாகும் சென்னை இளைஞர் யார்?

BBC
• ட்விட்டரை ஈலோன் மஸ்க் தன்வசமாக்கும் நடைமுறையை நிறைவேற்றினார்.

• ட்விட்டரில் இருந்து தலைமை நிர்வாக அதிகாரி உட்பட பல மூத்த நிர்வாகிகளை மஸ்க் நீக்கினார்.

• ட்விட்டரை $4.4 பில்லியனுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் 2022, ஏப்ரலில் ஈலோன் மஸ்க் கையெழுத்திட்டார்.

• பின்னர் ஜூலையில் அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு, கொள்முதல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற விரும்புவதாகக் கூறினார்.

• பின்னர் அக்டோபரில், மஸ்க் மீண்டும் கையகப்படுத்தும் செயல்முறையைத் தொடங்கி சில தினங்களுக்கு முன்பு அந்த பணியை முடித்தார்.

ட்விட்டரை வாங்கிய ஈலோன் மஸ்க், அந்த நிறுவனத்தில் தீவிர சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புக்கதவைத் திறந்து விட்டுள்ளார். இதுநாள்வரை ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை, அந்தப் பொறுப்பில் இருந்து ஈலோன் மஸ்க் நீக்கினார்.

இப்போது அதே ஈலோன் மஸ்க் மற்றொரு இந்தியரின் உதவியை நாடியிருக்கிறார்.

அந்த இந்தியரின் பெயர் ஸ்ரீராம் கிருஷ்ணன். சென்னையில் பிறந்த இந்த இந்திய - அமெரிக்க பொறியாளர் இப்போது ஈலோன் மஸ்க்கின் முக்கிய குழுவில் உறுப்பினராக உள்ளார்.

மஸ்க் உடன் இணைந்து பணியாற்றும் ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது ட்விட்டர் கணக்கில் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், இந்த ஏற்பாடு தற்காலிகமானது என்று அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் கருத்து

தொழில்முறை பொறியியலாளரான ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டர் நிறுவனத்திற்காக ஈலோன் மஸ்க்குடன் ஒத்துழைப்பதாக தனது சமீபத்திய ட்வீட்டில் கூறியுள்ளார்.

"நான் ஈலோன் மஸ்க்கிற்கு தற்காலிக அடிப்படையில், வேறு சில பெரியவர்களுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இது ஒரு மிக முக்கியமான நிறுவனம் என்று நான் நம்புகிறேன். ட்விட்டர் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது ஈலோன் மஸ்க் தலைமையில்தான் நடக்கும்" என்று ஸ்ரீராம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராம், ஆண்ட்ரீசென் ஹாரோவிட்ஸ் எனப்படும் A16z என்ற முதலீட்டு நிறுவனத்தில் கூட்டாளியாக இருக்கிறார். இந்த நிறுவனம் பல கிரிப்டோ நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

மற்றொரு ட்வீட்டில், தாம் இன்னும் தற்போதைய நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகக் கூறியுள்ளார் ஸ்ரீராம்.

அதில் அவர் "நீங்கள் ஒரு கிரிப்டோ நிறுவனராக இருந்தால், என்னை எப்படி கண்டுபிடிப்பது என்பது உங்களுக்குத் தெரியும்!" என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் யார்?

a16z இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, ஸ்ரீராம் கிருஷ்ணன் பணிபுரியும் நிறுவனத்தில், அவர் a16z என்று அழைக்கப்படும் 'Andreesen Horowitz' இல் பங்குதாரர்.

ஸ்ரீராம் 'ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ்' மூலம் பல்வேறு நுகர்வோர் ஸ்டார்ட்அப்களில் அவர் முதலீடு செய்துள்ளார்.

பிட்ஸ்கி, ஹாபின், பாலிவொர்க் போன்ற நிறுவனங்களின் வாரியங்களில் ஸ்ரீராம் உறுப்பினராகவும் உள்ளார். இருப்பினும், a16zஇல் சேருவதற்கு முன்பு ஸ்ரீராம் ட்விட்டர் உட்பட பல பெரிய நிறுவனங்களில் பணியாற்றினார்.

ட்விட்டரில் நுகர்வோர் குழுக்களை வழிநடத்திய ஸ்ரீராம், அந்த நிறுவனத்தில் பயனர் அனுபவம், தேடல், கண்டுபிடிப்பு மற்றும் பார்வையாளர்களின் வளர்ச்சி ஆகிய பிரிவுகளைக் கையாண்டார்.
BBC

ஃபேஸ்புக் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான மொபைல் விளம்பர தயாரிப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

உண்மையில் ஸ்ரீராமின் தொழில் வாழ்க்கை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தொடங்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் விண்டோஸ் அஸூர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஸ்ரீராம் கவனித்து வந்தார்.

சென்னையில்படிப்பு

ஸ்ரீராம் கிருஷ்ணன் 2001-2005 வரை சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி.டெக் படித்தார். பிறகு 2017 முதல் 2019 வரை ட்விட்டரில் பணியாற்றினார்.

ட்விட்டரின் முக்கிய நுகர்வோர் குழுவின் தலைவராக ஸ்ரீராம் இருந்த காலத்தில் அந்நிறுவனம் 20 சதவீதம் வளர்ச்சி கண்டது.

ஸ்ரீராம் 2013-2016க்கு இடையில் மெட்டாவில் (பேஸ்புக்) பணிபுரிந்ததாக அவரது லிங்க்டின் சுயகுறிப்பு கூறுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 2005 முதல் 2011 வரை அவர் பணியாற்றினார்.

நுகர்வோர் தொழில்நுட்பங்கள், கிரிப்டோகரன்சிகள் முதலீட்டுத்துறையில் ஸ்ரீராம் ஆர்வமாக உள்ளார்.

குடும்பத்தில் யார், யார்?

ஸ்ரீராம் சென்னையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அம்மா ஒரு இல்லத்தரசி.

ஸ்ரீராமின் மனைவி பெயர் ஆர்த்தி. 2002இல், இந்த ஜோடி யாஹூ மெசஞ்சர் மூலம் சந்தித்தனர். பின்னர் திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் நடந்து 20 ஆண்டுகள் ஆகின்றன.

2005ஆம் ஆண்டில், தனது 21 வயதில், ஸ்ரீராம் அமெரிக்காவின் சியாட்டிலுக்கு குடிபெயர்ந்தார். அங்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.

ஸ்ரீராமும் அவரது மனைவி ஆர்த்தியும் சேர்ந்து தி குட் டைம் ஷோ என்ற யூடியூப் சேனலை தொடங்கினார்கள். 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த தம்பதி ஈலோன் மஸ்கை ஒரு நள்ளிரவு கேளிக்கை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர்.

ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதன் மூலம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஈலோன் மஸ்க் ஒப்புக் கொண்டதாக ஸ்ரீராம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழிடம் கூறியிருந்தார். சில வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதி ஈலோன் மஸ்கை அவரது ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்தில் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் உள்ளது.

இப்போது ட்விட்டரின் CEO யார்?

பராக் அகர்வால் சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி யார் என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது. இருப்பினும், ஈலோன் மஸ்க் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநராக இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

மஸ்க் அனைத்து இயக்குநர்களையும் குழுவிலிருந்து நீக்கியதால், அவர் இப்போது தனது சொந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

ட்விட்டரில் உள்ள அம்சங்களை அவர் மாற்றப்போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.