1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj

இலங்கை கப்பல் தீ: மீண்டும் பரவிய நெருப்பை கட்டுக்குள் கொண்டு வர போராடும் இரு நாட்டுப் படைகள்

MT New Diamond கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கப்பலில் மீண்டும் தீ பரவியுள்ளது.
 
இந்த விடயத்தை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
 
கப்பல் தற்போதுள்ள பகுதியில் அதிக காற்றுடனான வானிலை நிலவி வருவதால் தீ பரவில் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும், கப்பலுக்குள் தொடர்ந்து தீயினால் ஏற்பட்ட உஷ்ணம் மற்றும் தீ பிழம்புகள் காணப்படுகின்றன. அவை தீ பரவல் மீண்டும் ஏற்படுவதற்கான காரணம் என அவர் கூறினார்.
 
தீ பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், ரசாயன தெளிப்பான்கள் மற்றும் நீர் பயன்படுத்தப்பட்டு வந்ததாக இலங்கை கடற்படை இன்று பிற்பகல் அறிவித்திருந்தது.
 
கப்பலில் தீ
 
உஷ்ணத்தை குறைத்தல் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தை தடை செய்யும் வகையிலான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
 
விபத்துக்குள்ளான கப்பல் குறித்து ஆராய்வதற்காக விபத்துக்குள்ளான கப்பல் நிறுவனத்தின் 6 சிறப்பு நிபுணர்கள் மற்றும் 11 அனர்த்த முகாமைத்துவ விசேட நிபுணர்கள் அடங்கிய குழு கப்பல் உள்ள பகுதிக்கு இன்று சென்றது.
 
இலங்கையில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் அந்த கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறுகிறது.
 
இலங்கை கடற்படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர பாதுகாப்புப்படை, இலங்கை விமானப்படை உள்ளிட்டோர் அந்த கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை கூட்டாக மேற்கொண்டு வருகின்றனர்.
 
MT New Diamond எரிபொருள் கொண்டு செல்லும் கப்பலில், கடந்த 3ஆம் தேதி தீ பரவல் ஏற்பட்டது.
 
கப்பலில் தீ
 
இலங்கையில் கிழக்கு பகுதியிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் இந்த கப்பலில் தீ பரவியிருந்தது.
 
MT New Diamond என்ற எரிப்பொருள் தாங்கிய கப்பல் குவைட் நாட்டின் மினா அல் அஹமத் துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஒடிசா துறைமுகத்தை நோக்கி பயணித்திருந்த வேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 
அந்த கப்பலில் 2 லட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் டொன் மசகு எண்ணெய் மற்றும் கப்பலின் பயன்பாட்டிற்காக சுமார் 1700 மெற்றிக் டொன் டீசல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், 22 பேர் கப்பலிலிருந்து மீட்கப்பட்டிருந்தனர்.
 
இலங்கை கடலில் வந்த கப்பலில் தீ: இந்தியா உதவியுடன் 19 பேர் மீட்பு, ஒருவர் மாயம்
இந்த நிலையில், கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக இலங்கை கடற்படை நேற்றைய தினம் (06) அறிவித்திருந்தது.
 
அத்துடன், இந்திய கடலோர காவல் படையும் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருந்தது.
 
இவ்வாறான பின்னணியிலேயே கப்பலில் மீண்டும் தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா குறிப்பிட்டார்.
 
இதேவேளை, இந்த கப்பலிலுள்ள எரிபொருள் கசியும் பட்சத்தில் அது தெற்காசிய வலயத்திற்கு மாத்திரமன்றி முழு உலக கடல் சுற்றஉச்சூழலுக்கு ஆபத்தாக மாறும் என இலங்கை சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹன்தபுர ஏற்கனவே அச்சம் வெளியிட்டிருந்தார்.