வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (16:26 IST)

இலங்கை கப்பல் தீயை அணைக்க தீவிர முயற்சி: எரிபொருள் கசிவு ஏற்பட்டால் பேராபத்து

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் நேற்றைய தினம் தீ விபத்துக்குள்ளான கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பல்கள், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள், இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான கப்பல்கள், தீ பரவியுள்ள கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு கப்பல் ஆகியவற்றைக் கொண்டு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர் ஒன்றும் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. MT New Diamond என்ற மசகு எண்ணெய் கப்பலில் நேற்று (3.9.2020) காலை 8.30 அளவில் தீ பரவியது. கப்பலில் இயந்திரப் பகுதியிலுள்ள இயந்திரமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமே இந்த தீக்கான காரணம் என முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

கப்பலில் நிர்க்கதிக்குள்ளான கப்பலின் பணியாளர்கள், அந்த வழியாக சென்ற சுற்றுலா கப்பல் ஒன்றின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காப்பாற்றப்பட்ட 19 பேர் உள்ளடங்களான 22 பணியாளர்களை இலங்கை கடற்படை முழுமையான சுகாதார வழிமுறைகளின் கீழ் தமது பொறுப்பிற்கு எடுத்து, அவர்களை நாட்டிற்குள் அழைத்து வந்திருந்தனர்.

குறித்த கப்பலில் மொத்தமாக 23 பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எஞ்சிய ஒருவர் வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாக, மீட்கப்பட்டவர்களினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் ஊடாக தெரியவருகின்றது என இலங்கை கடற்படை கூறுகின்றது.

குறித்த கப்பலில் 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் மசகு எண்ணெய் மற்றும் கப்பலின் பயன்பாட்டிற்காக சுமார் 1700 மெட்ரிக் டன் டீசல் ஆகியன இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் இயந்திர பகுதியிலேயே தொடர்ந்தும் தீ பரவி வருவதாகவும், எரிப்பொருள் களஞ்சியப்படுத்தப்பட்ட பகுதியில் தீ பரவவில்லை எனவும் இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

கப்பலிலிருந்து இதுவரை எரிப்பொருள் கசிவு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இயலுமான விரைவில் கப்பலில் பரவிவரும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

’எரிபொருள் கசிவு ஏற்படவில்லை’

இந்நிலையில் MT New Diamond கப்பலிலிருந்து இதுவரை எரிப்பொருள் கசிவு ஏற்படவில்லை என இலங்கை சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் தீ விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் இலங்கையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் நிலைக்கொண்டிருந்ததுடன், தற்போது அந்த கப்பல் காற்றின் வேகம் காரணமாக சுமார் 12 கடல் மைல் தொலைவிற்கு இலங்கை திசையை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

காலநிலைக்கு ஏற்ப குறித்த கப்பல் இலங்கை கரையை நோக்கி நகரும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

கப்பலில் உள்ளக பகுதியில் சில வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அத்துடன், கப்பலில் மேற்பரப்பில் சில வெடிப்புக்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது என அவர் கூறுகின்றார்.

இதேவேளை, ஏதேனும் சந்தர்ப்பத்தில் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையை பெரிதும் பாதிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக இலங்கை சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவிக்கின்றார்.

குறிப்பாக இலங்கையின் கிழக்கு கடற்பரப்பின் கல்குடா, பாசிகுடா, அருகம்பை, ஆகிய பகுதிகளுக்கும், அதேபோன்று வாகரை, திருகோணமலை, கிரிந்த உள்ளிட்ட பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அவர் அச்சம் வெளியிடுகின்றார்.

இந்த சந்தர்ப்பம் வரை அவ்வாறான கசிவுகள் எதுவும் பதிவாகவில்லை என கூறிய அவர், அவ்வாறான கசிவுகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பனாமா நாட்டிற்கு சொந்தமான இந்த கப்பல் குவைட் ஹி மினா அல்மதி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பெரடிப் துறைமுகத்திற்கு பயணித்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இலங்கை, இந்தியா ஆகிய நாட்டு கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவு ஆகியோரின் உதவியுடன் இந்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலதிகமாக இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பல் மற்றும் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஆகியனவும் தீயணைப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது.