சமீபத்தில் நடந்த மகா கும்பமேளாவில் அதிகளவில் பக்தர்கள் வந்த நிலையில் படகோட்டி ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13 தொடங்கி பிப்ரவரி 26 வரை நடந்த மகா கும்பமேளாவில் நீராட நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் ப்ரயாக்ராஜில் குவிந்தனர். மொத்தமாக 40 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 நாட்களில் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேச சட்டசபையில் கும்பமேளா குறித்து பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு படகோட்டி குடும்பத்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், படகோட்டி குடும்பத்திற்கு 130 படகுகள் இருந்தன. கும்பமேளாவில் பக்தர்களை அழைத்து செல்ல அந்த படகுகளை பயன்படுத்தியதன் மூலம் அந்த குடும்பம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை வருமானம் ஈட்டியுள்ளனர் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த படகோட்டியை பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை.
Edit by Prasanth.K