1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 20 டிசம்பர் 2023 (10:29 IST)

இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல்!... காசா போர் குறித்து பேசியதாக X தளத்தில் பதிவு..!!

PM Modi Nethanyahu
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இஸ்ரேல் - காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.


 
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்தும் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.  அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதில் இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.