செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (14:39 IST)

சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்த சோலோ விண்கலன்!

சோலோ என்ற சூரிய சுற்றுவட்டக் கலன் தனது தற்போதைய சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்தது.
 
சூரியனில் இருந்து 77மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்தப் புள்ளி. கடந்த பிப்ரவரி மாதம் ஏவப்பட்ட இந்த சூரிய ஆராய்ச்சிக் கலன் நமது நட்சத்திரமான சூரியனின் இயக்க ஆற்றல் பண்புக்கான காரணம் என்ன என்று ஆராயும்.
 
வெள்ளி, புதன் ஆகிய இரு கோள்களின் சுற்றுவட்டப் பாதைக்கு நடுவில் இருக்கிறது தற்போது சோலோ கலன் அடைந்திருக்கிற புள்ளி. இன்னும் சில ஆண்டுகளில் ''சோலோ'' விண்கலம் சூரியனை இன்னும் நெருங்கிச் சென்று ஆராயும். சில நேரங்களில் சூரியனிடம் இருந்து 43 மில்லியன் கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்துக்குள் சோலோ செல்லும்.
 
தற்போது சோலோ சென்று சேர்ந்திருக்கிற தூரத்தை வைத்துப் பார்க்கும்போது, இதைவிட சூரியனை நெருங்கிச் சென்று ஆராய்ந்தவை மரினர் 10, ஹீலியோஸ் 1 & 2, மெசெஞ்சர், பார்க்கர் சோலார் புரோப் ஆகிய விண்கலன்களே.
 
சூரியனில் இருந்து சுமார் 149 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் சுற்றுப்பாதை உள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கிய இந்த சோலோ விண்கலத்தின் பாகங்கள் பிரிட்டனில் உள்ள ஏரோஸ்பேஸ் கம்பெனியான ஏர்பஸ் நிறுவனத்தில் ஒன்றாகப் பொருத்தப்பட்டன.
 
சோலோ விண்கலத்தை விண்ணில் ஏவியதில் இருந்து 4 மாதங்களுக்கு இதன் பல்வேறு கருவிகளை சரிபார்ப்பதற்கே செலவிடப்பட்டது. விண்கலத்தின் பொறியமைவுகள் சரியாக இயங்குகின்றனவா என்று சோதிக்கும் பொறியாளர்கள் இந்த விண்கலனில் பொருத்தப்பட்ட 10 அறிவியல் கருவிகளை செயல்படுத்திப்பார்க்கிறார்கள்.
 
விண்கலன் முழுவீச்சில் சோதனை மேற்கொள்வதற்கு மேலும் ஓர் ஆண்டு ஆகிவிடும். ஆனால் சோலோ விண்கலனின் மேக்னெட்டோமீட்டர் எனப்படும் காந்தவிசைமானி செயல்படத் தொடங்கிவிட்டது.
 
விண்கலத்தின் பின் பகுதியில் இருக்கும் இந்த மானி, சூரியக் காற்றில் பொதிந்திருக்கும் காந்தப் புலனை உணர்ந்து அறியும். ஆங்கிலத்தில் சோலார் வின்ட் என்று அழைக்கப்படும் சூரியக் காற்று, சூரியனில் இருந்து வெளியேறி விலகிச் செல்லும் மின்னேற்றம் பெற்ற துகள்களின் ஓட்டம் ஆகும்.
 
வாய்ப்பிருந்தால், இந்த விண்கலன் திரும்பி புதனை நோக்கிச் செல்லும்போது புவியின் வழியாகச் செல்லும். பிறகு சோலோ விண்கலனுக்கான முக்கிய நிகழ்வு வெள்ளிக்கு அருகே பறந்து செல்வதாக இருக்கும். அப்போது வெள்ளியின் மேற்பரப்பில் 5 லட்சம் கி.மீ. தூரத்தை இந்த விண்கலன் நோக்கும்.