சுவை மிகுந்த காளான் மஞ்சூரியன் செய்ய...!!
தேவையான பொருள்கள்:
பட்டர் காளான் - 200 கிராம்
மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி
அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
கார்ன் ப்ளோர் - 1 மேஜைக்கரண்டி
புட் கலர் - சிறிது
பூண்டு - 8 பல்
சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
பொரிப்பதற்கு எண்ணெய் - 100 மில்லி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
செய்முறை:
முதலில் காளானை தண்ணீரில் அலசவும். சில காளானில் மேல் பகுதியில் கறுப்பாக காணப்படும், அவற்றை போக்க மெல்லிய காட்டன் துணியை வைத்து துடைத்தால் காளான் நல்ல வெண்மையாக மாறிவிடும். சுத்தப்படுத்திய காளான், வெங்காயம், பூண்டு மூன்றையும் நறுக்கி வைக்கவும்.
மைதாமாவு, அரிசிமாவு, கார்ன் ப்ளோர் மாவு மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கரைத்து வைத்துள்ள மாவில் காளான் துண்டுகளை மாவு கொள்ளும் அளவுக்கு டிப் பண்ணி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு காளான் துண்டுகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
மீதமுள்ள எல்லா காளான் துண்டுகளையும் இதே முறையில் டிப் பண்ணி பொரித்து எடுக்கவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து தனியே வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நறுக்கி வைத்துள்ள பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு 1 நிமிடம் கிளறவும். பின்னர் அதனுடன் புட் கலர், சோயாசாஸ், சில்லிசாஸ், உப்பு சேர்த்து எல்லாம் சேரும் வரை நன்றாக கிளறவும். பொரித்து வைத்துள்ள காளானில் உப்பு சேர்த்திருப்பதால் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் மஞ்சூரியன் தயார்.