1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (17:49 IST)

சிந்துபாத் - சினிமா விமர்சனம்

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
 
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.யு. அருண்குமாரும் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.
ஒரு சாதாரண சிறு நகரத்தைச் சேர்ந்த இளைஞன், ஆபத்தில் உள்ள தன் மனைவியை கடல்களைத் தாண்டி, பல நாடுகளுக்கும் பயணம் செய்து காப்பாற்றும் கதை. படத்திற்கான பெயர்க் காரணம் இதுதான்.
 
திரைப்படம் சிந்துபாத்
 
நடிகர்கள் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா, விவேக் பிரசன்னா, லிங்கா, ஜார்ஜ் மரியன்
 
இசை யுவன் சங்கர் ராஜா
 
ஒளிப்பதிவு விஜய் கார்த்திக் கண்ணன்
 
இயக்குநர் எஸ்.யு. அருண்குமார்
 
தென்காசியைச் சேர்ந்த திரு (விஜய் சேதுபதி), சூப்பர் (சூர்யா) என்ற சிறுவனுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டு வேலைகளில் ஈடுபடுபவன். மலேசியாவில் வேலைபார்க்கும் வெண்பா (அஞ்சலி), ஊருக்கு வரும்போது அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறான்.
 
வெண்பா வீட்டாரின் எதிர்ப்பை மீறி, கல்யாணம் செய்துகொண்டு மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கிறான். ஆனால், வெண்பா அங்குள்ள ஒரு ஆட்கடத்தல் கும்பல் மூலம் தாய்லாந்திற்கு விற்கப்படுகிறாள்.
 
அவளை மீட்கச் செல்லும் திரு, அங்கிருக்கும் ஒரு அபாயகரமான போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு மோத நேர்கிறது. இந்தக் கும்பலை சமாளித்து திரு எப்படி வெண்பாவை மீட்கிறான் என்பது மீதிக் கதை.
 
படம் ஆரம்பித்து, சுமார் 45 நிமிடங்களுக்கு படம் எதை நோக்கி நகர்கிறது என்பதே தெரியவில்லை. மெல்ல மெல்ல இடைவேளையை நெருங்கும்போதுதான் பிரதான கதை துவங்குகிறது. ஆனாலும்கூட தென்காசியில் நடக்கும் முதல் பாதி, இயல்பும் அழகும் கொண்டதாக இருக்கிறது.
 
திருவுக்கும் சூப்பருக்கும் இடையிலான உறவை மிகச் சாதாரணமாக எடுத்துச் சென்றிருப்பது, வெண்பாவைக் காதலிக்க திரு செய்யும் முயற்சிகள், திருவின் வீட்டை விற்க முயற்சி செய்யும் அவரது மாமாவுக்கு ஏற்படும் அவஸ்தைகள், இந்தப் பாதியை ஜாலியாக நகர்த்துகின்றன.
 
ஆனால், பிற்பாதியில்தான் பிரச்சனை. தன் மனைவியை மீட்பதற்காக வெளிநாட்டிற்கு வந்த ஒரு சிறு நகர இளைஞன், ஒரு சின்னச் சிக்கலில் இருந்து தப்பிக்க மொழி தெரியாத ஒரு ஊரில், மிக அபாயகரமான சைக்கோ கொலைகாரனின் வீட்டில் திருட ஒப்புக்கொள்வானா என்று நாம் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அந்த கொலைக் கும்பல் தலைவனின் மாளிகைக்குள் ஏறிக் குதித்துவிடுகிறார் திரு.
 
 
சிறிது நேரத்திலேயே வில்லன் வந்துவிட, அங்கிருந்து நாயகன் தப்பிப்பது, பிறகு மாட்டுவது, பிறகு தப்பிப்பது, பிறகு மாட்டிக்கொள்வது எனத் திரும்பத் திரும்ப நடப்பது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 
மலேசியா, தாய்லாந்து, கம்போடியா என மாற்றி மாற்றி சம்பவங்கள் நடக்க, எந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று குழம்ப வேண்டியிருக்கிறது.
 
வில்லன் லிங்கிற்கு ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால், ரொம்பவும் சொதப்பலான வில்லனாக இருக்கிறார். வசமாக வந்து சிக்கும் கதாநாயகனை எத்தனை முறைதான் வில்லன் தப்பிக்க விடுவார்?
 
விஜய் சேதுபதியைவிட அஞ்சலிக்குத்தான் இது குறிப்பிடத்தக்க படம். அவர் தோன்றும் காட்சிகளில் திரையை பிரகாசிக்கவைக்கிறார். சூப்பர் பாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் சூர்யாவுக்கும் (விஜய் சேதுபதியின் மகன்) இது ஒரு நல்ல அறிமுகம். திருவின் மாமாவாக வரும் ஜார்ஜ் மரியான், எல்லாப் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் இயல்பான நகைச்சுவையைத் தந்து செல்கிறார்.
 
பண்ணையாரும் பத்மினியும் படம் அளவுக்கு இல்லை. ரொம்பவும் ஏமாற்றமளிக்கும் படமும் இல்லை.