சுன்னத் முதல் இறைச்சி வரை - ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது?

01
Last Modified ஞாயிறு, 13 ஜனவரி 2019 (10:42 IST)

ஐரோப்பாவின் இஸ்லாமியர்களும், யூதர்களும் இதற்கு முன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
 

பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளைக் கொல்வதைப் பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. கோஷெர் மற்றும் ஹலால் மாமிசத்துக்கு உரிய நம்பிக்கைகள இது பாதிக்கிறது.

விலங்குகள் உரிமை இயக்கத்தினர் நீண்டகாலமாகவே இந்தச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் சுதந்திரத்துக்கான செயல் திட்டம் என்ற பெயரில் இது யூதர்களுக்கு விரோதமானது, இஸ்லாமியர்களுக்கு விரோதமானது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனியில் நாஜி ஆட்சிக் காலத்தில் விலங்குகளை உணர்வற்ற நிலைக்கு கொண்டு செல்லாமல் வெட்டக் கூடாது என்று தடை விதித்து 1933ல் இதேபோன்ற விவாதத்தை உருவாக்கினார் அடால்ஃப் ஹிட்லர்.

விலங்குகள் உரிமையும் மத சுதந்திரமும்

விலங்குகளை மாமிசத்துக்காக கொல்வதற்கு முன்னதாக அவற்றை உணர்வற்ற நிலைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய சட்டம் கூறுகிறது. இவ்வாறு செய்வதால் இறக்கும்போது அவை துயரப்படாமல் அல்லது வலியை உணராமல் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

விலங்குகளை கொல்வதற்கு முன்னால், அவற்றை அசைவற்ற நிலைக்கு அல்லது சுயநினைவற்ற நிலைக்கு கொண்டு செல்லும் நடைமுறைதான் , உணர்வற்ற நிலை எனப்படுகிறது.
 

02

ஆனால் மத வழக்கப்படி கொல்வதற்கு, ஒரே ஒரே முறை தொண்டையில் துல்லியமாக வெட்டிக் கொலை செய்வதைக் கட்டாயமாக்கும் நடைமுறைக்கு அந்த நாடுகள் விலக்கு அளிக்கலாம்.

விலங்குகள் இறக்கும்போது தேவையில்லாமல் துன்பத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்களுடை மத வழக்கத்தின்படி செய்வது வலி ஏற்படுத்தாத நடைமுறை என்று மதத் தலைவர்கள் கூறுகின்றனர்.

உடனடியாக மரணம் ஏற்படுகிறது என்றும் விலங்குகள் துயரப்படுவதைத் தடுக்கும் வகையில் பல நூற்றாண்டுகளாக இந்த உத்தி கையாளப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

03

இந்த இரு தரப்பு வாதங்களுக்கு இடையில் சமன்பாட்டை ஏற்படுத்தும் வகையில், நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், சைப்ரஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள், மத சம்பிரதாய அடிப்படையிலான இறைச்சிக்கூடங்களுக்கு கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளன.

ஆஸ்திரியா, கிரீஸ் போன்ற நாடுகள், விலங்குகள் வெட்டப்பட்டதும் உணர்வற்ற நிலைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளன. பெல்ஜியத்தின் மூன்று பகுதிகளில் - பிளாண்டர்ஸ் மற்றும் வலோனியா - என்ற இரண்டு பகுதிகள், டென்மார்க், ஸ்வீடன், ஸ்லோவேனியா, நார்வே, ஐஸ்லாந்து நாடுகளுடன் இணைந்து, வெட்டுவதற்கு முன்னதாக உணர்வற்ற நிலைக்கு உட்படுத்த விலக்கு அளிக்காமல் உள்ளன.

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது மட்டும் மத சம்பிரதாய அடிப்படையில் ஐரோப்பாவின் யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களை ஒன்று சேர்க்கவில்லை. வேறு சில வட்டங்களிலும் இது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
 

04

சுன்னத் செய்வதும் குழந்தைகள் உரிமையும்

கடந்த ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் மருத்துவக் காரணங்களுக்காக அல்லாமல் சுன்னத் செய்வதற்குத் தடை செய்யும் மசோதா முன்மொழியப்பட்டு, கடும் எதிர்ப்பு காரணமாக ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் கைவிடப்பட்டது. யூதர்களும், இஸ்லாமியர்களும் சுன்னத் செய்து கொள்கிறார்கள்.

நான்கு வயது இஸ்லாமிய சிறுவனின் உடலில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்துவது, அவனுடைய மத நம்பிக்கைகளை முடிவு செய்யும் குழந்தைகள் உரிமையைப் பாதிக்கும் செயல் என்று நீதிமன்றம் கூறியதையடுத்து 2012ல் ஜெர்மனியில் சிறிது காலம் சுன்னத் தடை செய்யப்பட்டிருந்தது.

"மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத அளவுக்கு உடல் அமைப்பில் கடுமையான மாற்றம் செய்வதை பெற்றோருடைய உரிமைகளோ அல்லது மத சுதந்திரமோ நியாயப்படுத்த முடியாது," என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

அந்தத் தீர்ப்பு ஆறு மாதங்களில் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் தங்களுடைய நம்பிக்கைகளின்படியான செயல்பாட்டுக்குத் தடை விதிப்பதாக இருந்திருக்கும் என்று இஸ்லாமியர்களும், யூதர்களும் வாதங்களை முன்வைத்தனர்.

அரசியல் செயல் திட்டம்'

வலதுசாரி தேசியவாத கட்சிகள் இதுபோன்ற முயற்சிகளைப் பொதுவாக ஆதரிக்கின்றன என்ற உண்மை, இந்த சர்ச்சைகளுக்கு உள்ள அரசியல் கண்ணோட்டத்தைச் சேர்க்கிறது.

விலங்குகள் நல உரிமை மற்றும் குழந்தைகள் நல உரிமை ஆர்வலர்களின் ஆதரவைக் கருத்தில் கொண்டு, குடியேற்றத்துக்கு எதிரான நாட்டங்களுக்கு உதவும் வகையில் அரசியல்வாதிகள் வெற்றிகளைப் பெற முடியும்.
 

பெல்ஜியம் நாட்டில், பிளாண்டர்ஸ் பிராந்தியத்தில் தேசியவாத சார்புடைய விலங்குகள் நலத் துறை அமைச்சர் பென் வெயிட்ஸ்-ன் முயற்சியால் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

2017-ல் இந்த மசோதா பிராந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது,``பெருமைக்குரிய விலங்குகள் நல அமைச்சர், ஃபிளெமிஷ் (டச்சு மொழியின் ஃபிளெமிஷ் வட்டார வழக்கைப் பேசுபவர்) ஆக இருப்பதில் பெருமை'' என்று வெயிட்ஸ் ட்விட்டரில் பதிவு செய்தார்.

பெல்ஜியத்தில் 2014-ல் நடந்த நாஜிக்களுடன் இணைந்து செயல்பட்டவர் ஒருவரின் 90வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டபோது அவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

 

ஆண்ட்வெர்ப் பகுதியைச் சேர்ந்த ரப்பி யாக்கோவ் டேவிட் ஸ்ச்மஹல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ``ஜெர்மனியில் இந்தச் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட, இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய அதே சூழ்நிலைகளை இது கொண்டு வந்திருக்கிறது'' என்று கூறினார்:

களங்கம் ஏற்படுத்தும் முயற்சியா?

விலங்குகளைப் பாதுகாப்பதைவிட, சில மதக் குழுக்களுக்கு எதிராக களங்கம் ஏற்படுத்தும் மறைமுகமான முயற்சிதான் இந்தத் தடை உத்தரவு நடவடிக்கை என்று இஸ்லாமிய அமைப்புகளின் வழக்கறிஞர் ஜூஸ் ரோயட்ஸ், டைம்ஸ் இதழுக்குக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால், பெல்ஜிய விலங்குகள் உரிமைக் குழுவான Global Action in the Interest of Animals அமைப்பு, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ட்விட்டரில் மறுத்துள்ளது.

05

மத சம்பிரதாயப்படி விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்யும் வகையில் பெல்ஜியத்தின் சட்டம் உள்ளது என்பதையும் அந்தக் குழு நிராகரித்துள்ளது.

தொண்டையை அறுக்கும் போது - அந்த விலங்கு கொல்லப்படாமல் - மயக்கநிலைக்கு கொண்டு செல்லப்பட்டால் - அது ஏற்புடையது என்று கருதப்படும் மத சம்பிரதாயப்படி விலங்குகளைக் கொல்லும் நிகழ்வுகள் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விளக்கத்தை இஸ்லாமிய மற்றும் யூத மதத் தலைவர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஐரோப்பிய சட்டங்கள் மற்றும் மாண்புகளுடன் உரசலைக் கொண்ட மத சம்பிரதாயங்களில் விரிவான கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் வெற்றிபெற்று வரும் ஆர்வலர்களுக்கு இடையில், இந்த விவாதங்கள் சற்று குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :