ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:43 IST)

தேர்தல் நடத்தை விதிகள்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளன்று அரசியல் கட்சியினர் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகளின் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இவற்றைத் தெரிந்து வைத்திருப்பதன்மூலம், தேர்தல் நடக்கும் நாளன்று அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் விதிமீறலில் ஈடுபடுகிறார்களா என்பதை நீங்கள் அறியலாம்.

வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு நாளன்றும் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் என்ன என்பதை பிபிசி தமிழ் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது.

1.வாக்குப்பதிவு நாளன்றும், வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரமும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சார்பில் யாருக்கும் மது விநியோகம் செய்யக்கூடாது.

2.வாக்காளர்களுக்கு எரிச்சலூட்டாமல், தடை ஏதும் ஏற்படுத்தாமல் சுதந்திரமான முறையில் அவர்கள் வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் நடைபெறவும் பணியில் உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

3.தேர்தல் நாளன்று களப்பணியாற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணியாளர்களுக்கு சின்னம் அல்லது அடையாள அட்டைகள் அரசியல் கட்சிகளால் வழங்கப்பட வேண்டும்.

4.அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாள சீட்டுகள் வெள்ளை காகிதத்தில் இருக்க வேண்டும். அவற்றில் கட்சிகளின் சின்னம் வேட்பாளர்களின் பெயர் அல்லது அரசியல் கட்சியின் பெயர் ஆகியவை இடம்பெறக்கூடாது.

5.அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே மோதலை தவிர்க்கும் நோக்கில் கட்சிகள் அமைத்துள்ள முகாம்களில் தேவையற்ற கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும்.

6.வேட்பாளர்களின் முகாம்கள் மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும். அங்கு பதாகைகள் கட்சியின் கொடிகள், சின்னங்கள், பரப்புரைக்கான பிற பொருட்கள் ஆகியவை அங்கே இருக்கக் கூடாது. உணவுப் பொருட்கள் விநியோகம் அங்கு நடைபெறக் கூடாது.

7.வாக்குப்பதிவு நாளன்று வாகனப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

8.வாக்குப்பதிவு நாளன்று அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களால் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு அனுமதி பெறப்பட்டு அவை வாகனங்களின் முன்பகுதியில் வெளிப்படையாக தெரியும் அளவுக்கு ஒட்டப்பட வேண்டும்.

9.முறையான நுழைவு அனுமதி இல்லாமல் வாக்காளர்களைத் தவிர வேறு யாரும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியின் வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

10.வாக்குப்பதிவு நடக்கும் நாளில் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்களுக்கு ஏதாவது புகார்கள் அல்லது பிரச்சனைகள் இருந்தால் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பாளர்களிடமே அவர்கள் அதைக் கொண்டு செல்ல வேண்டும்.