1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (19:18 IST)

ரிஷி சூனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராகிறார் - எதிர்த்து போட்டியிட்டவர் விலகல் கிறிஸ் மேசன்

rishi sunak
கன்சர்வேடிவ் கட்சி எம்பிக்கள் குழு தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து பென்னி மோர்டான்ட் விலகிய பின்னர், ரிஷி சூனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க ஆயத்தம் ஆகியிருக்கிறார். வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படும் சூனக், 44 நாட்கள் மட்டுமே பிரதமர் பணியில் இருந்து விட்டு வெளிச்செல்லும் லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பதிலாக, கிங் சார்ல்ஸால் அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்.

 
முன்னதாக, செப்டம்பரில் பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் தோல்வியடைந்த ரிஷி சூனக் இப்போது பிரதமராகும் கட்டத்தை நெருங்கி காணப்பட்டார். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனைத் தொடர்ந்து திங்கட்கிழமை பென்னி மோர்டான்ட் போட்டியிலிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து ரிஷி சூனக் புதிய பிரதமராக தகுதி பெற்றிருக்கிறார்.

 
சமீபத்தில்தான் நாங்கள் வெஸ்ட்மின்ஸ்டரில் பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்த செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தோம். இப்போது மீண்டும் அதே செய்திகளை வழங்குகிறோம்.
 


 
இப்போதைய கேள்வி, "போரிஸ் ஜான்சன் அடுத்து என்ன செய்வார்?" இந்தக் கேள்வி வருவது முதல்முறை அல்ல.

 
கரீபியனில் இருந்து திரும்பி வந்த போரிஸ் ஜான்சன், விடுமுறையைக் கொண்டாடுவதற்காகச் சென்றிருந்த நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலேயே, அதுவும், அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட சில வாரங்களிலேயே தான் மீண்டும் பிரதமர் ஆவதற்கு தனக்கு எந்தளவுக்கு ஆதரவு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள சில தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டார்.
 
அதைத் தொடர்ந்து சனிக்கிழமை மதியம் முதல் தேவையான ஆதரவு தங்களிடம் இருப்பதாக அவரது குழுவினர் விளக்கமளித்தனர். இதை அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் பகிரங்கமாகக் கூறினார்.

 
மேலும் மற்றோர் அமைச்சரான கிறிஸ் ஹீடன்-ஹாரிஸ், சரிபார்க்கப்பட்ட ஆதரவாளர்கள் எண்ணிக்கை உட்பட கட்சிக்குத் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் போரிஸ் ஜான்சன் போட்டியில் சேரலாம் என்றும் கூறினார்.

 
ஆனால், இந்த கூற்றுகளுக்கான எதிர்வினை பிரதமர் தேர்தலில் மீண்டும் வரும் போரிஸ் ஜான்சன் எதிர்கொள்ளும் பல சிக்கல்களில் ஒன்றை நினைவூட்டுவதாக உள்ளது. எளிமையாகச் சொன்னால், அவர்டைய தரப்பில் இருப்பவர்களில் பலருக்கே அவருடைய வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை.
 
அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் இதை ஒப்புக்கொண்டார். இருப்பினும் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு காலத்தில் பார்ட்டிகளில் கலந்துகொண்டது குறித்து ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் தவறான தகவலைக் கொடுத்தாரா என்ற விசாரணையை எதிர்கொள்ளாமல் இருந்திருந்தால் விஷயம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
 

 
அவர் அந்த விசாரணையை எதிர்கொள்ளாமல் இருந்திருந்தால், அவர் மீண்டும் பிரதமர் ஆவதற்கான வழி கிடைத்திருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். ஆனால் அவருக்குக் கிடைக்கவில்லை.
 
அவருடைய ஆதரவு போதுமான அளவுக்கு இல்லாததால், அவர் இன்று போட்டியில் இல்லை. நாடாளுமன்ற கட்சியில் மூன்றில் ஒரு பகுதியினரையே தனக்கு ஆதரவளிக்குமாறு அவர் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. வெற்றி கூட அச்சுற்றுத்தும் மற்றும் பேரழிவு தரக்கூடியதாக இருந்திருக்கும் என்பதே அதன் பொருள். நாடாளுமன்ற கட்சியின் ஆதரவின்றி ஆட்சி செய்ய முயல்வது எப்படியிருக்கும் என்று அவருக்குத் தெரியும். அது நல்லபடியாக இருக்காது.

 
ஆகவே, பிரதமர் மீண்டும் மாறுகிறார்.

 
அது ரிஷி சூனக் என்றால், போட்டி எதுவும் இல்லையென்றால், திங்கள்கிழமை மாலை அரசர் லண்டனில் இருப்பார் என்று நான் கேள்விப்படுகிறேன்.

 
ஒருவேளை அரசர் தலைநகரில் அந்த நேரத்தில் இல்லாவிட்டால், சூனக் இன்று மதியம் வெற்றியாளராக உறுதி செய்யப்பட்டால், அவர் பிரதமர் ஆவதற்கு செவ்வாய்க்கிழமை வரை காத்திருப்பார். பார்க்கலாம், ஒருவேளை இன்னமும் ஒரு போட்டி இருக்கலாம்.

 
உண்மையில் முக்கியமானது என்னவெனில், வெற்றியாளர் யாராக இருந்தாலும் லிஸ் டிரஸால் தாங்க முடியாத அளவுக்கு இருந்த கடுமையான பிரச்னைகள் அவர்கள் கைகளுக்குச் செல்லும். ஆழமாகப் பிளவுபட்ட கட்சி, உயரும் விலைவாசி, மோசமான பொது நிதி, இது முறையான தேர்தல் இல்லை என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

 
ஆனால், பழைமைவாத கட்சியின் கிளர்ச்சிக்கான தீராத பசி இறுதியாகத் தணிந்துவிடும் என்று அவர்கள் நம்புவார்கள். அப்படி இல்லையென்றால், ஒரு கடினமான வேலை விரைவில் சாத்தியமற்றதாகிவிடும்.
 
யார் இந்த ரிஷி சூனக்?
 
ரிஷி சூனக் தனது இணையதளத்தில், "நான் ஒரு நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் நிறைய தியாகங்கள் செய்தார்கள். வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 
ரிஷி சூனக் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை பெங்களூரில் 2009இல் திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 730 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அவரது அறிவிக்கப்பட்ட சொத்துகளில் பெரும்பாலானவை அவரது மனைவிக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.

 
ரிஷி சூனக் சுயமாக முன்னேறியவர். அவர் தனது இணையதளத்தில், "வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து பெங்களூர் வரையிலான நிறுவனங்களுடன் இணைந்து ஒரு பெரிய முதலீட்டு நிறுவனத்தை நிறுவினேன். அது பலன் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

 
போரிஸ் ஜான்சனை முதுகில் குத்தியதற்காக ரிஷி சூனக் மீது கட்சியினர் பலர் கோபமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் ரிஷி சூனக் தனது நிதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த பிறகுதான் பல அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையை விட்டு வெளியேறினர், அதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சனும் ராஜிநாமா செய்ய வேண்டியிருந்தது.
 
இதற்குப் பிறகு, புதிய பிரதமருக்கான முதல் சுற்றில் எட்டு வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். கடைசி சுற்றுக்கு முன், கட்சி எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், கட்சி உறுப்பினர்களுக்கு அந்த உரிமை இல்லை. எம்.பி.க்கள் ரிஷி சூனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோரை கடைசி சுற்றுக்குத் தேர்வு செய்தனர்.

 
கடைசிச் சுற்றில் எம்.பி.க்கள் அல்லாமல், கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ரிஷியின் அரசியல் வாழ்க்கையை முன்னேற்ற போரிஸ் ஜான்சன் பெரிதும் உதவியதாக மக்கள் கூறுகின்றனர். ரிஷி சூனக் மீது அவர் மிகவும் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. ரிஷி செய்தியாளர்களிடம், போரிஸ் ஜான்சனை அணுகுவதற்குத் தாம் பல முறை முயன்றும் அவை செவிசாய்க்கப்படவில்லை என்று ஒப்புக்கொண்டார்.

 
கன்சர்வேடிவ் கட்சி இன்னும் வெள்ளையர் அல்லாத பிரதமரைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இல்லையென்றாலும், நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. நாடு முழுவதும் ரிஷி சூனக் சூனக்கின் புகழ் லிஸ் டிரஸ்ஸுடன் ஒப்பிடும்போது மிகவும் வலுவாக உணரப்படுகிறது.