1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2020 (21:59 IST)

ரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் காவலர் - யார் இவர்?

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சமூகத்தின் அனைத்து தரப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

யார் இந்த ரேவதி? அவர் அளித்த சாட்சியம் என்ன?

சாத்தான் குளம் தந்தை - மகன் ஆகியோர் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த விசாரணை அறிக்கையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்றும் மரியாதைக் குறைவாகவும் மிரட்டு வகையிலும் நடந்துகொண்டார்கள் என்றும் நீதித் துறை நடுவர் கூறியுள்ளார்.

 
நீதித்துறை நடுவரிடம் தலைமைக் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம், சம்பவ தினத்தன்று நடந்த விவகாரங்களை விரிவாக விவரிக்கிறது.

"கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிளில் கரை படிந்துள்ளதாகவும் அதனை அவர்கள் அழிக்க நேரிடும் என்றும் உடனடியாக அதனைக் கைப்பற்ற வேண்டுமென்றும் கூறினார். சாட்சி கூறிய லத்திகளைக் கைப்பற்றும் பொருட்டு அங்கிருந்த காவலர்களை லத்தியைக் கொடுக்கும்படி கூறியும் அவர்கள் காதில் ஏதும் விழாததுபோல இருந்தார்கள்.’’

’’பிறகு கட்டாயப்படுத்தியதன் பேரில் அனைவரும் அவர்களது லத்தியைக் கொடுத்துவிட்டார்கள். அதில் மகராஜன் என்பவர் என்னைப் பார்த்து ’உன்னால் ஒன்றும் .....
முடியாதுடா’ என்று என் முதுகுக்குப் பின்னால் என் காதில் விழும்படி பேசி, அங்கு ஓர் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்" என சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை நீதித் துறை நடுவர் விவரித்துள்ளார்.

அங்கிருந்த சூழல் சரியில்லாததால் சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதி கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் அவரிடம் பாதுகாப்பு குறித்து உறுதியளித்த பின் கையெழுத்துப் பெறப்பட்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்துள்ளார்.

 
வழக்கின் பின்னணி என்ன?
 
சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.

ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.

இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.
 
குவியும் வாழ்த்துகள்
 
சக காவலர்களுக்கு எதிராக சாட்சி அளித்த தலைமை காவலர் ரேவதிக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

கமலஹாசன் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.” என குறிப்பிட்டுள்ளார்.