வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (22:59 IST)

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகை ஆண் கடல் பசு

மன்னார்
 
ராமநாதபுரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்று இறந்த நிலையில் அரிய வகை ஆண் கடல் பசு கரை ஒதுங்கியது. அதனை வனத்துறையினர் உடல் கூராய்வு செய்த பிறகு மணலில் புதைத்தனர்.
 
கடல் பசு என்பது கடலின் ஆழமான மீன் பிடிப்பகுதிகளில் காணப்படும் தாவரங்களை உண்டு வாழும் ஓர் அரிய வகை கடல் வாழ் உயிரினம். மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் பசுக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. ஆனால் கடந்த 2018-19 ஆம் ஆண்டு வனத்துறையினர் எடுத்த கணக்கெடுப்பில் 70 முதல் 140 கடல் பசுக்கள் மட்டுமே தற்போது வாழ்ந்து வருவது தெரிய வந்தது. கடல் பசுவின் இறைச்சி சுவைமிக்கதாக இருப்பதால், சிலர் கடல் பசுகளை வேட்டையாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த காந்தி நகர் கடற்கரை பகுதியில் அரியவகை ஆண் கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
 
இதனையடுத்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கடலில் இறந்து கரை ஒதுங்கிய 3 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம், 500 கிலோ எடை கொண்ட 30 வயது மதிக்கதக்க ஆண் கடல் பசுவை கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர், கால்நடை மருத்துவர்களால் உடல் கூராய்வு செய்யப்பட்ட பின் கடற்கரை அருகில் உள்ள மணல் பகுதியில் புதைத்தனர்.