வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 மே 2021 (13:37 IST)

ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயா்வு: மே 31-வரை நீடிக்கும்

இன்று 01.05.2021 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ.50ஆக உயா்த்தப்பட்டதை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து தென்மேற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

"கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, ரயில் நிலையங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் நோக்கத்தில் பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆா்.பெங்களூரு, கண்டோன்மென்ட், யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நடைமேடை நுழைவுச்சீட்டு கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டது. அது ஏப். 30-ஆம் தேதி வரை அமல்படுத்துவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துவருவதால், நடைமேடை நுழைவுச் சீட்டு கட்டணத்தை ரூ.50ஆக உயா்த்தியதை மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது" என தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொரொனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநரான கன்னட நடிகர்

கர்நாடகத்தில் நடிகர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்ல ஓட்டுநராக உதவிக் கொண்டிருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த, 27 வயதான இளம் நடிகர் அர்ஜுன் கெளடாவின் வீட்டுக்கு பால் விநியோகித்து வந்த பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.

அவரது பேரன், தன் பாட்டியின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய, மருத்துவமனையிலிருந்து மயானத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறார். ஆம்புலன்ஸ்காரர்கள் 12,000 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தன்னை பாதித்ததாகக் கூறுகிறார் ஒடியா, ருஸ்டம், யுவரத்னா போன்ற கன்னட மொழி சினிமாவின் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் அர்ஜுன்.

எனவே 'ப்ராஜெக்ட் ஸ்மைல்' என்கிற ட்ரஸ்டில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தன்னை இணைந்துக் கொண்டு, கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக உதவி வருகிறார்.

தான் பல முறை காசி நகரத்துக்குச் சென்றிருப்பதாகவும், அங்கு மணிகர்னிகா கட் என்கிற இடத்தில் இறந்த உடல்களை எரியூட்ட உதவி இருப்பதாகவும், தற்போது பெங்களூரு மணிகர்னிகா கட் போல தோற்றமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

"உடலை தகனம் செய்யும் இயந்திரம், ஒரு உடலை எரித்து முடிக்க 1 - 1.5 மணி நேரமாகும். ஒரு மயானத்தில் ஒன்று அல்லது இரண்டு தகன இயந்திரங்கள் மட்டுமே இருக்கும். சில நேரங்களில் காலை 6 மணிக்கு மயானத்துக்கு கொண்டு வரப்படும் சடலங்கள், மாலை 7 மணிக்கு தான் தகனம் செய்ய முடியும். அதுவரை உடலை ஐஸ் பெட்டியில் பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். நாம் தொடர்ந்து பிபிஇ கிட்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பிபிஇ கிட்கள் அணிவதால் உடல் முழுக்க வியர்க்கும்" என தன் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார் நடிகர் அர்ஜுன்.

ராணுவத்துக்கு அவசர நிதி அதிகாரம் வழங்கிய இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்றை சமாளிக்க ராணுவத்துக்கு அவசரகால நிதி அதிகாரங்களை வழங்கியுள்ளார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்த செய்தி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.


இந்த நடவடிக்கை கொரோனா பிரச்சனையை சமாளிக்க ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், அதிவிரைவாக செயலாற்றவும் உதவும்.

"ராணுவத்தின் கார்ப்ஸ் கமாண்டர்கள் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகள நிறுவவும், செயல்படுத்தவும் இந்த நிதி அதிகாரங்கள் உதவும். அதோடு தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், பொருட்களை பழுது பார்த்து சரி செய்து கொள்ளவும், இந்த அதிகாரங்கள் உதவும்" என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தரைப்படை, கடற்படை, விமானப் படை போன்ற படைப்பிரிவுகளின் தளபதிகளுக்கு முழு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த 'முழு அதிகாரம்' என்றால் என்ன என்பதற்கு போதுமான விளக்கம் கொடுக்கப்படவில்லை.

கார்ப் கமாண்டர் மற்றும் ஏரியா கமாண்டர் 50 லட்சம் வரை செலவழிக்க அனுமதி வழங்கபட்டிருக்கிறது. டிவிஷன் கமாண்டர் / சப் ஏரியா கமாண்டர் போன்ற பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் (அதற்கு சமமான பதவியில் இருக்கும் கடல் மற்றும் விமானப் படை அதிகாரிகளுக்கும் பொருந்தும்) 20 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

"இந்த அதிகாரங்கள் 2021 மே 1 முதல் 2021 ஜூலை 31 வரையான மூன்று மாத கலத்துக்கு வழங்கப்பட்டுள்ளன" என பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் ராணுவத்தின் மருத்துவ அதிகாரிகளுக்கு அவசர கால அதிகாரங்கள் வழங்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது