மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியிடம் ரூ.2.50 லஞ்சம்: அதிகாரிகள் கைது
மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியிடம் ரூ.2.5 லட்சம் கேட்டு வாங்கிய குற்றச்சாட்டில் இரண்டு அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையை வழங்க கோரி பள்ளி நிர்வாகி விஜயகுமார் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப. ஜான்சி மற்றும் உதவி அலுவலர் சேகர் ஆகியோரை அணுகியுள்ளார் .
அந்த தொகையை வழங்க தங்களுக்கு ரூ 2.50 லட்சம் லஞ்சமாகத் தரவேண்டும் என்று ஜான்சியும் , சேகரும் கூறியாதக குற்றம்சாட்டுகிறார் விஜயகுமார்.
விஜயகுமார் எவ்வளவு வேண்டிக் கேட்டும் ஜான்சியும் ,சேகரும் தங்களின் ரூ 2.50 லட்சம் கோரிக்கையில் இருந்து மாறவே இல்லை .
இது தொடர்பாக விஜயக்குமார் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்கள் அளித்த அறிவுரையின்படி ரசாயணம் தடவிய ரூ. 2.50 லட்சம் ரொக்கப் பணத்தை கொடுக்க சேலம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி வீட்டிற்கு விஜயக்குமார் சென்றார் என்று லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அங்கிருந்த ஜான்சி மற்றும் உதவி அலுவலர் சேகரிடம் ரூ. 2.50 லட்சம் ரொக்க பணத்தை வழங்கும் போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கைதான இருவரிடமும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.