1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (15:07 IST)

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல பாதையும் இறுதிச்சடங்கு திட்டமும்!

பிரிட்டனில் மிக நீண்ட காலமாக முடியாட்சி செலுத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். 
 
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில், அவரது குடும்பத்தினர் சூழ ராணி அமைதியாக மறைந்தார். இனிவரும் நாட்களில், அவரது உடல் பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக எப்படி வைக்கப்படும், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் முறைகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
 
பொதுமக்கள் மரியாதைக்காக வைக்கப்படும் ராணியின் உடல்
 
ராணியின் சவப்பெட்டி லண்டன் வந்தடைந்தவுடன், இறுதிச் சடங்குக்கு முன்பு, நான்கு நாட்களுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்த வைக்கப்படும்.  இந்த பிரமாண்ட மண்டபம், பிரிட்டன் அரசின் மையப்புள்ளியாக விளங்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் மிகவும் பழமையான பகுதி.
 
இதற்கு முன்பு, கடைசியாக அரச குடும்பத்தைச் சேர்ந்த நபர், பொதுமக்கள் மரியாதை செலுத்த வைக்கப்பட்டது 2002ஆம் ஆண்டில் ராணியின் தாயார் மறைந்தபோது தான். அவருக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர்.
 
ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி, 11ஆம் நூற்றாண்டு மண்டபத்தின் மரக்கூரைக்குக் கீழே, கேடஃப்ல்க் எனப்படும் உயர்வான மேடையில் வைக்கப்படும். இந்த மேடையின் ஒவ்வொரு முனையையும், அரசு குடும்பத்திற்குச் சேவை செய்யும் வீரர்கள் பாதுகாப்பார்கள்.
 
ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு, ராணுவத்தினர் அணிவகுக்க அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் வர ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.
 
லண்டனில் ஊர்வலம் செல்லும்போது, வீதிகளில் நின்று பொதுமக்கள் அதைப் பார்க்க முடியும். லண்டனில் அரச குடும்ப பூங்காக்களில், இந்த ஊர்வல நிகழ்ச்சி பெரிய திரையில் ஒளிபரப்பப்பட உள்ளது.
 
அவரது சவப்பெட்டி, அரச குடும்பத்தின் கொடியால் சுற்றப்பட்டிருக்கும். வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தை வந்தடைந்ததும் அரச குடும்பத்தின் கிரீடம், சிலுவை ஏந்திய கோளச்சின்னம் மற்றும் செங்கோல், ராணியின் சவப்பெட்டி மீது வைக்கப்படும்.
 
இந்த மண்டபத்தில் முறையாக அவரது சவப்பெட்டி வைக்கப்பட்டவுடன், பிரார்த்தனை நடைபெறும். அதன்பிறகு, அவருக்கு மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
 
ராணியின் இறுதிச் சடங்கு எப்போது?
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு, வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான தேதி அரசு குடும்பத்தினரால் உறுதி செய்யப்படும்.
 
வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஏனென்றால், 1953ஆம் ஆண்டு ராணியாக முடிசூட்டப்பட்டது உட்பட அங்குதான் பிரிட்டன் அரசர்களும் அரசிகளும் முடிசூட்டிக் கொண்டனர். 1947ஆம் ஆண்டு, இளவரசர் ஃபிலிப்பை ராணி இரண்டாம் எலிசபெத் திருமணம் செய்துகொண்டதும் இந்த தேவாலயத்தில்தான்.
 
18ஆம் நூற்றாண்டு முதல், இந்த தேவாலயத்தில் அரசர்களில் இறுதி சடங்கு சேவை நடைபெறவில்லை என்றாலும், 2002ஆம் ஆண்டு, ராணியின் தாயாருக்கான இறுதிச் சடங்கு மட்டும் அங்கு நடைபெற்றது.
 
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள், ராணியின் வாழ்க்கை குறித்தும் அவரது சேவை குறித்தும் நினைவுகூர, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் பங்கேற்பார்கள். இதில் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களும் முன்னாள் பிரதமர்களும் பங்கேற்பர்.
 
அன்றைய நாள், ராணியின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்திற்கு, ராயல் கடற்படையின் வாகனத்தில் (Gun carriage) கொண்டு செல்லப்படும்.
 
இந்த வாகனம், கடந்த 1979ஆம் ஆண்டு, இளவரசர் ஃபிலிப்பின் உறவினர் லார்ட் மவுன்ட்பேட்டனின் இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்பட்டது. இதை அரச குடும்பத்தைச் சேர்ந்த கடற்படையின் 142 மாலுமிகள் இயக்கினார்கள். புதிய அரசர் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள், இந்த ஊர்வலத்தில் பங்கேற்பார்கள்.
 
வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தின் சமயகுரு டெவிட் ஹோய்லே இந்த சேவையை நடத்துவார். கேன்டர்பெரி தேவாலயத்தின் பேராயர் ஜஸ்டீன் வெல்பே சமய சொற்பொழிவை ஆற்றுவார்.  பிரதமர் லிஸ் டிரஸ் பேச அழைக்கப்படலாம்.
 
இறுதி சடங்கு நடைமுறையைத் தொடர்ந்து, லண்டனில் ஹெடே பூங்கா முனையில் தேவாலயத்தில் இருந்து வெலிங்டன் ஆர்ச்சுக்கு ராணியின் சவப்பெட்டி இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். அதன்பிறகு, வின்ட்சருக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படும்.
 
அன்றைய பிற்பகல், வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு ராணியின் சவப்பெட்டி கொண்டு செல்லப்படும். வின்ட்சர் கோட்டையில் உள்ள சதுக்கத்தில் நடக்கும் ஊர்வலத்தில், அரச குடும்பத்தைச் சேர்ந்த புதிய அரசரும் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு இறுதி சேவைக்கு (committal service) ராணியின் சவப்பெட்டி கொண்டு செல்லப்படும்.
 
அரச குடும்பத்தினர் வழக்கமாக திருமணம், ஞானஸ்நானம், இறுதிச் சடங்குக்கு செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தைத் தேர்வு செய்வார்கள். இங்குதான் சஸ்ஸெக்ஸின் கோமகன் இளவரசர் ஹேரி மற்றும் கோமகள் மேகன் திருமணம் செய்து கொண்டனர். ராணியின் கணவர் இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இங்குதான் நடைபெற்றது.
 
செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்குள் அமைந்துள்ள அரசர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன், ராயல் வால்ட்டில் இறக்கி வைக்கப்படும்.