1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (16:58 IST)

ரணிலின் அமைச்சரவையில் ராஜபக்ஷ உறவினர் - போராட்டக்குழு கோபம்

இலங்கையில் ராஜாங்க அமைச்சர்களாக இன்று 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி காலையில் ராஜாங்க அமைச்சர்களாக 37 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இவர்களில் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சசீந்திர ராஜபக்ஷவும் (வயது 46) ஒருவர்.

இதற்கு முன்னரும் சசீந்திர ராஜபக்ஷ ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சசீந்திர ராஜபக்ஷ - ஊவா மாகாண சபை உறுப்பினாராகவும், பின்னர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இவர் விவசாயத்துறை சார்ந்த ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று ஷசீந்ர ராஜபக்ஷ நீர்ப்பாசன ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கதிர்காமம் பௌத்த ஆலயத்தின் 'பஸ்நாயக நிலமே' எனும் பிரதம நிருவாகி பதவியையும் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது சக்தி வாய்ந்ததும் பௌத்தர்கள் மத்தியில் மரியாதைக்குரியதுமான பதவியாகும்.

ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களாக சமல், நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் ராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ஷவும் பதவி வகித்தனர். பின்னர் ராஜபக்ஷவினருக்கு எதிராக நாட்டில் 'அரகலய' எனும் மக்கள் போராட்டம் எழுச்சி பெற்றமையினை அடுத்து, இவர்களில் சிலர் தத்தமது பதவிகளிலிருந்து விலகினர். ஆட்சி மாற்றம் காரணமாக சிலரின் பதவிகள் இல்லாமல் போயின. இவ்வாறான பின்னணியிலேயே ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த சசீந்திர ராஜபக்ஷ இன்று ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ரணில் தனது கொந்தராத்தைச் செய்கின்றார்

இந்த நிலையில், ராஜாங்க அமைச்சராக சசீந்திர நியமிக்கப்பட்டமை தொடர்பில் பிபிசிக்கு கருத்து வெளியிட்ட 'அரகலய' எனும் மக்கள் போராட்ட செயற்பாட்டாளரான அஸீஸ் நிஸாருத்தீன், ராஜபக்ஷக்களின் ஊழல், மோசடிகளுக்காக அவர்களை மக்கள் விரட்டியதாகவும் அந்தப் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க, அந்த ஊழல், மோசடிக்காரர்களை பாதுகாக்கும் வேலையைச் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

அஸீஸ் நிஸாருத்தீன் - 'ஒரேநாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக இருந்து - பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் கூறுகையில், "ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் ஒருவராகவே ரணில் விக்ரமசிங்க உள்ளார். ராஜபக்ஷவினரின் குறைகளை, குற்றங்களை, தவறுகளை மறைப்பதற்கான 'கொந்தராத்தை' பெற்றுக்கொண்டவர்தான் தற்போது ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ளார்" என குறிப்பிட்டார்.

ரணில் ஆட்சியில் மக்களுக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை என தெரிவிக்கும் நிஸாருத்தீன், போராட்ட காலத்தில் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கென நஷ்டஈடு வழங்கும் வேலைகளையே ரணில் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும், ராஜாங்க அமைச்சுக்களை தமது தரப்பினருக்கு வழங்க வேண்டுமெனும் ஒப்பந்தத்தின் பேரில்தான், ரணிலை ராஜபக்ஷவினர் ஜனாதிபதியாக்கியதாகவும் நிஸாருத்தின் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்."ராஜபக்ஷக்களும் ரணிலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள். வேறு வித்தியாசங்கள் எவையும் இல்லை" எனவும் அவர் கூறினார்.

"ராஜபக்ஷக்களின் ஊழல், மோசடிக்களுக்காக அவர்களை மக்கள் விரட்டினார்கள். அந்தப் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க, அந்த ஊழல், மோசடிக்காரர்களை பாதுகாக்கும் வேலையைச் செய்கின்றார்.ரணில் விக்ரமசிங்கவின் அனைத்து நடவடிக்கைகளும், ராஜபக்ஷ குடும்பத்தினரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாகவே உள்ளன.

ஊழல்களுக்கு ஆதரவானவர்கள்தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் வாக்களித்துள்ளனர். மக்களின் கருத்துகளுக்கும் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளுக்குமிடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. அதை உருவாக்கியவர் ரணில் விக்ரமசிங்கதான்.தனது பதவியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக - குற்றவாளிகளை, ஊழல்வாதிகளை, திருடர்களை ரணில் விக்ரமசிங்க பாதுகாக்கிறார்" எனவும் அஸீஸ் நிஸாருத்தீன் தெரிவித்தார்.