வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (16:29 IST)

ஆதிமனிதன் வரலாறு: 31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த குகை மனிதன்

Primitive Man
அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டதற்கான வரலாற்றிலேயே மிகவும் பழமையான ஆதாரங்களை இந்தோனேசிய குகையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையின் தோற்றம் ஏற்கெனவே கருதியிருந்ததைவிட 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நமக்கு தெரிவிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த இளைஞர், பல ஆண்டுகள் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் உடலை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர் மெலண்ட்ரி வோல்க், மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் போர்னியோவின் கிழக்கு கலிமந்தனில் உள்ள லியாங் டெபோ உள்ள குகையில் இந்த கல்லறை தோண்டப்பட்டுள்ளது. இந்த குகையில் உலகின் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூன்று ஆராய்ச்சியாளர்களின் ஒருவரான, ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்க்கழகத்தை சேர்ந்த டாக்டர் டிம் மலோனி பழங்கால எலும்புகளை ஆராய்ச்சி செய்வது உற்சாகத்தையும் அச்சத்தையும் ஒரே நேரத்தில் தருவதாகக் கூறினார்.

பழங்கால இளைஞரின் உடல் பற்றி நேச்சர் இதழ் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வுக் கட்டுரையில், ஈந்த அறுவை சிகிச்சை இளைஞர் குழந்தையாக இருந்த பொது நடந்ததாக தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் ஆறு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை அந்த இளைஞர் உயிருடன் இருந்திருக்கலாம் என்றும், பின்னர் பதின்ம அல்லது இருபது வயதில் அவர் இறந்து இருக்கலாம் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் மிகவும் கவனமாக இந்த படிமங்களை ஆராய்ச்சி செய்தோம். அப்போது இளைஞரின் இடது கால் எலும்புகள் காணாமல் பொய் இருப்பதை காண முடிந்தது. மீதமுள்ள எலும்புகளின் எச்சங்களை பத்தி செய்து ஆராய்ச்சி செய்தோம். அவை அனைத்தும் மிகவும் அசாதாரணமானவை" என்று பிபிசி செய்தியாளரிடம் டாக்டர் டிம் மலோனி தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முறைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ஆராய்ச்சி ஏற்படுத்திய உற்சாகத்தில் நாங்கள் உள்ளோம்.

சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் வோல்க்-கிடம், இந்த பகுதியிலுள்ள எலும்புகளின் எச்சங்களை ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டது.

இதுகுறித்துப் பேசிய அவர் "இது மகிழ்ச்சியும், சோகமும் நிறைந்தது. ஏனென்றால், இது ஒரு மனிதருக்கு நேர்ந்திருக்கிறது." என்றார்.

"31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் இவை. இளைஞர் குழந்தையாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த இளைஞர் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருப்பார் என்பதை உணர முடிகிறது"

இது மதச் சடங்கு அல்லது பலி கொடுப்பது ஆகியவையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறிய டாக்டர் மலோனி, இது ஒரு அறுவைச் சிகிச்சை என்று தொல்லியல் ஆய்வாளர் நம்புவதாகத் தெரிவித்தார். "காயத்தில் இருந்து மீட்கப்பட்ட மனிதன் வாழ்நாள் முழுவதும் அக்கறையுடன் பராமரிக்கப்பட்டதை பார்க்க முடிகிறது" என்றார் அவர்.

டர்காம் பல்கலைக்கழக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் சார்லோட் ராபர்ட்சன் எலும்புகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், மருத்துவமும், அறுவை சிகிச்சையும் மிக தாமதமாக வந்தது என்ற கருத்துக்கு இந்தக் கண்டுபிடிப்பு சவால் விடுவதாகத் தெரிவித்தார்.

நமது முன்னோர்களை நாம் குறைவாக மதிப்பிட முடியாது என்று கூறிய சார்லோட் ராபர்ட்சன், உடல் உறுப்புகளை வெட்டி அறுவை சிகிச்சை செய்ய மனித உடற்கூறியல், அறுவை சிகிச்சை, போதிய தொழில்நுட்பம் மற்றும் விரிவான அறிவு, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை மிகவும் அவசியம் என்று தெரிவித்தார்.

"தற்போது உறுப்பு நீக்கும் அறுவைச் சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது. அறுவை சிகிச்சை செய்யும்போது மயக்க மருந்து தரப்படுகிறது, கிருமிநீக்கப்பட்ட சூழல் இருக்கிறது. ரத்தப்போக்கையும், வலியையும் கட்டுப்படுத்தும் வசதி இருக்கிறது. ஆனால் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எந்த வசதியும் இல்லாமல் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று பேராசிரியர் சார்லோட் ராபர்ட்சன் குறிப்பிட்டார்.

இந்த அறுவைச் சிகிச்சைக்கு எந்த வகையான கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன என்பது பற்றி மலோனியும் அவரது சகாக்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.