பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலிர் கான்ட் காவல் நிலைய போலீசாரால் தேடப்பட்டு வரும் சீமா மற்றும் அவரின் நான்கு குழந்தைகள், தற்போது உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் ரபுபுராவில் வசித்து வருகின்றனர்.
நொய்டாவைச் சேர்ந்த இந்தியரான சச்சின் மீனாவுடன், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமாவுக்கு 2019 இல் காதல் மலர்ந்தது. PUBG விளையாட்டின் மூலம் மலர்ந்த இவர்களின் காதலுக்கு மத்தியில் இரு குடும்பங்கள் மட்டுமல்ல, பல தசாப்தங்களாக எதிரிகள் போல் இருந்து வரும் இரு நாட்டின் எல்லைக் கோடுகளும் தடையாக இருந்தன.
சில மாதங்களுக்கு முன் அந்த எல்லையைத் தாண்டி இந்தியா வந்த சீமா போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் பரபரப்பு செய்தியானது. தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சச்சின் மீனாவை சந்திக்க சீமா, நேபாளம் வழியாக எப்படி ரபுபுராவை அடைந்தார்? சச்சின் -சீமா இருவரும் ஒன்றரை மாதங்கள் எப்படி ஒன்றாக வாழ்ந்தனர்? எப்படி அவர்கள் போலீசில் சிக்கினர்?
சச்சின் மீனா - சீமாவின் எல்லைத் தாண்டிய காதல் கதை அவர் பாகிஸ்தானில் இருந்து சுற்றுலா விசாவில் நேபாளத்திற்கு பயணித்ததில் இருந்து தொடங்குகிறது.
பாகிஸ்தானில் இருந்து நேரடியாக இந்தியா செல்ல விசா கிடைக்காததால், நேபாளம் வழியாக இந்தியா வருவதற்கு திட்டமிட்டார் சீமா. அதன்படி அவர் சுற்றுலா விசாவில் சார்ஜா வழியாக கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி நேபாளம் வந்தடைந்தார். அங்கு தான் அவர் இந்தியாவைச் சேர்ந்த தன் காதலன் சச்சின் மீனாவை சந்தித்தார்.
ஹோட்டல் அறையில் ஒரு வாரம்
தலைநகர் காத்மாண்டுவில் நியூ விநாயக் ஹோட்டலில் அறை எடுத்து இருவரும் அங்கு ஒரு வாரம் ஒன்றாக தங்கி இருந்துள்ளனர். அதன் பிறகு, சீமா குலாம் ஹைடர் பாகிஸ்தானுக்கு திரும்பினார்.
இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பிறகு சுற்றுலா விசாவில் மீண்டும் நேபாளம் வந்தார் சீமா. இந்த முறை அவர் தன் நான்கு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார். ஆனால் அப்போது சச்சின் மீனா, சீமாவை சந்திக்க நேபாளம் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்தார்.
“எனது நான்கு குழந்தைகளுடன் காத்மாண்டுவில் இருந்து பொக்காராவுக்கு வேனில் பயணம் மேற்கொண்டேன். நள்ளிரவு ஆகிவிட்டதால், அன்று பொக்காராவில் தங்கிவிட்டு மறுநாள் காலை டெல்லிக்கு பேருந்தில் பயணப்பட்டோம்” என்று போலீசாரிடம்
சீமா தெரிவித்திருந்தார்.
பொக்காரா நகரில் இருந்து டெல்லி வந்தடைய பேருந்தில் 28 மணி நேரத்திற்கு மேல் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
நேபாளத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொக்காரா நகரை அடைய பேருந்தில் ஏழு மணி நேரம் பயணிக்க வேண்டிவரும்.
இதேபோன்று பொக்காரா நகரில் இருந்து டெல்லி வந்தடைய பேருந்தில் 28 மணி நேரத்திற்கு மேல் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
தனது குழந்தைகளுடன் இந்த நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ள, ‘ஸ்ருஷ்டி டிராஃபிக்’ எனும் தனியார் பேருந்து நிறுவனத்தின் ஏசி டீலக்ஸ் பேருந்தில் மூன்று டிக்கெட்டுகளை (இருக்கை எண் 9,10,11) சீமா பதிவு செய்திருந்தார். பொக்காராவில் இருந்து டெல்லிக்கு பயணிக்க ஒருவருக்கு நேபாள நாட்டின் கரன்சி மதிப்பில் 5000 ரூபாய் வீதம் மூன்று டிக்கெட்டுகளுக்கு மொத்தம் 15 ஆயிரம் ரூபாய் பேருந்து பயணக் கட்டணமாக அவர் செலுத்தி உள்ளார்.
பயணக் கட்டணம் குறித்த இந்த தகவலை பிபிசியிடம் தெரிவித்த சிருஷ்டி டிராஃபிக் நிர்வாகம், ஆக்ரா, நொய்டா வழியாக உத்தரப் பிரதேச மாநிலம் சுனாலி எல்லை (மகாராஜ்கஞ்ச் மாவட்டம்) வழியாக பேருந்து டெல்லியை அடைகிறது என்றும் தெரிவித்தது.
காதலனை காணும் ஆவலுடன் கூடிய இந்தப் பயணத்தின் போது சீமா குலாம் ஹைதர், சச்சின் மீனாவுடன் செல்போனில் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். ஜூலை 13 ஆம் தேதி இரவு, தனது நான்கு குழந்தைகளுடன் சீமா ஹைதர், யமுனா விரைவு சாலையில் ஃபலிடா கட் அருகே பேருந்தில் இருந்து இறங்கினார். சீமாவுக்காக அங்கு ஆவலுடன் காத்திருந்த சச்சின் மீனா, அங்கிருந்து அவரையும், அவரின் குழந்தைகளையும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுராவின் அம்பேத்கர் மொஹல்லாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் கிர்ஜேஷ் என்ற நபரிடம் ஒரு வீட்டை 2500 ரூபாய் மாத வாடகைக்கு எடுத்திருந்தார்.
“எங்கள் ஊரைச் சேர்ந்தவரான சச்சின், மே 13 ஆம் தேதிக்கு நான்கைந்து நாட்களுக்கு முன் வீட்டை வாடகைக்கு எடுத்தார். தமக்கு நீதிமன்றத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்குவதற்காக வீடு வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். அவரின் ஆதார் அட்டை, பான் அட்டை ஆகிய ஆவணங்களை வாங்கிக் கொண்டு வாடகைக்கு வீடு கொடுத்தோம்” என்று பிபிசியிடம் பேசிய வீட்டின் உரிமையாளர் கிர்ஜேஷ் கூறினார்.
ஸ்மார்ட் வாட்ச் இருந்தால் போதும், பார்கின்சன் நோயை 7 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கலாம்
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலிர் கான்ட் காவல் நிலைய போலீசாரால் தேடப்பட்டு வரும் சீமா மற்றும் அவரது பிள்ளைகள் தற்போது நொய்டா பகுதியில் வசித்து வருகின்றனர்
சீமா மற்றும் அவரின் குழந்தைகள் சச்சின் மீனாவுடன் ரபுபுராவில் புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினர். சச்சின் தனது இருப்பிடத்திற்கு அருகில் இருந்த மளிகைக் கடையில் கடந்த மூன்றாண்டுகளாக பணியாற்றி வந்தார். தான் பணிபுரிந்து கொண்டிருந்த கடைக்கு அருகிலேயே தனது வீடும் இருந்ததால், மதிய வேளையில் உணவருந்த வீட்டிற்கு வந்து செல்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆனால், பெரும்பாலான நேரம் சீமா வீட்டுக்குள்ளேயே இருந்து வந்ததால் அவரது மதம் மற்றும் குடியுரிமை பற்றி அக்கம்பக்கத்தினரும் சந்தேகம் எழவில்லை.
“எப்போதும் அலங்காரத்துடன் காட்சியளித்த சீமா, சேலை உடுத்தவும் பழகிக் கொண்டார். பக்ரீத் பண்டிகை நாளிலும் யாருக்கும் சந்தேகம் வரும்படி எந்தக் கொண்டாட்டத்தையும் அவர் மேற்கொள்ளவில்லை” என்று வீட்டின் உரிமையாளர் கிர்ஜேஷின் மனைவி கூறினார்.
எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க, சீமாவை அழைத்து வந்த நான்கைந்து நாட்களுக்கு பிறகு, சச்சின் தனது தந்தை நேத்ராபாலிடம் அனைத்து விவரங்களையும் எடுத்துரைத்தார், தனது மகனின் காதல் கதையை கேட்ட அவரின் தந்தை, சீமாவை பார்க்க விரும்பினார். தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ஓர் காட்டுப் பகுதியில் சீமாவை தந்தைக்கு அறிமுகப்படுத்தினார் சச்சின்.
சச்சினை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை சீமா அப்போது நேத்ராபாலிடம் கூறினார். அதற்கு, “நீங்கள் பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்துள்ளீர்கள். பாகிஸ்தான் முறைப்படி உங்கள் குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டால் தான், எனது மகனை உங்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியும்” என்று சச்சின் தந்தை நேத்ராபால் சீமாவிடம் கண்டிப்பாக கூறினார்.
சச்சின் - சீமா இடையேயான உறவு குறித்து அவரது தந்தையைப் போல, சச்சினின் சகோதரிக்கும் தெரியும் என்று கூறுகிறார் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் கிர்ஜேஷ். சமீபத்தில் சீமாவை அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து சந்தித்த சச்சினின் தந்தையும், சகோதரியும் அப்போது அவருக்கு சேலையை பரிசாக அளித்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆறு மாதங்களுக்கு முன், சீமா குறித்து தன்னிடம் சச்சின் பேசியதாக கூறும் அவரது மாமா பீர்பால், அவரது விருப்பத்திற்கு இசைவு தெரிவிக்கவில்லை என்றும் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்று போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீமா சச்சினை கூடிய விரைவில் மணம் முடித்து விட வேண்டும் என்று விரும்பினார். இதுதொடர்பாக இருவரும் வழக்கறிஞரிடம் பேசியும் இருந்தனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி, ‘ஜூன் 30 ஆம் தேதி, சச்சினின் தந்தை நேத்ராபால் தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து, சச்சின் திருமணத்திற்காக புலந்த்ஷாஹர் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டதாகவும், தம்மையும் உரிய ஆவணங்களுடன் அங்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்’ எனவும் சீமா தெரிவித்திருந்தார்.
அவரது அறிவுறுத்தலின்படி, கல்யாணக் கனவுகளோடு, தனது பிள்ளைகளுடன் புலந்த்ஷாஹர் சென்ற சீமாவுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நீதிமன்றத்தில் சீமா மற்றும் அவரது குழந்தைகளின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பரிசோதித்த வழக்கறிஞர், “நீங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளதால், சச்சினை திருமணம் செய்து கொள்ள முடியாது” என கூறிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து சச்சினும், அவரது தந்தையும் உடனே ரபு புராவிற்கு விரைந்தனர்.
அப்போது தான் சச்சின் - சீமா காதல் கதை போலீசாருக்கு தெரிய தொடங்கியது. போலீசாரின் பிடியில் தாங்கள் சிக்க நேரிடும் என்ற பயம் சச்சினுக்கும், சீமாவுக்கும் பற்றிக் கொண்டது.
இதையடுத்து, ஜூன் 30 ஆம் தேதி இரவே, சீமா குலாம் ஹைடர் தனது குழந்தைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் ரபுபுராவை விட்டு வெளியேறினார்.
மறுநாள் காலை ஜூலை 1 ஆம் தேதி, சச்சின் மீனா வழக்கம்போல் மளிகைக் கடைக்கு பணிக்கு சென்றார். ஆனால் சென்ற வேகத்தில் வீட்டில் முக்கியமான வேலை இருப்பதாக கடை உரிமையாளரிடம் கூறிவிட்டு அவர் விடுப்பு எடுத்தார்.
வீட்டின் உரிமையாளரான கிர்ஜேஷின கூற்றுப்படி, அன்றைய தினமே சச்சினையும், சீமாவையும் தேடி அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு போலீசார் வந்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததை அறிந்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆனால் சச்சின் -சீமாவை தேடும் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ரபுபுரா போலீசாருக்கு ஜூலை 3 ஆம் தேதி இரவு 8 மணியளவில் இருவர் குறித்தும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரபுபுரா காவல் நிலையத்தின் காவல் உயரதிகாரியான சுதிர் குமார் தலைமையிலான தனிப்படை ஹரியானா மாநிலம், பல்லப்கார் பகுதிக்கு விரைந்தது. சச்சின், சீமா மற்றும் அவரின் நான்கு குழந்தைகளையும் அங்கு வைத்து, ஜூலை 4 ஆம் தேதி அதிகாலை 1 மணி அளவில் போலீசார் கைது செய்தனர்.
சச்சின் மீனா, அவரின் தந்தை நேத்ராபால் மற்றும் சீமா குலாம் ஹைடர் மீது வெளிநாட்டினர் சட்டம் 1946 ன் பிரிவு 14 இன் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120 பி யின் படியும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும், உத்தரப் பிரதேச மாநிலம், ஜெவரில் உள்ள சிவில் நீதிமன்றம் சீமா, சச்சின் மற்றும் அவரது தந்தைக்கு வசிப்பிடத்தை மாற்றவோ, வெளியூர்களுக்கு செல்லவோ கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கு உட்பட்ட கைர்பூர் மாவட்டத்தில் தான் சீமா வசித்து வந்தார். பேரிச்சம்பழம் சாகுபடிக்கு பெயர்போன இந்தப் பகுதி தான் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்ட கடைசி மாகாணமாகும்.
சீமாptன் கணவர் குலாம் ஹைடர் பாகிஸ்தானின் ஜகோபாபாத்தில் வசித்து வந்தார். செல்ஃபோன் மிஸ்டுகாலில் தான் இருவருக்கும் இடையேயான உரையாடல் தொடங்கியது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. ஆனால் குலாமை திருமணம் செய்து கொள்ள தனது குடும்பத்தில் தடைகள் பல இருந்ததால், வீட்டை விட்டு வெளியேறிய சீமா, நீதிமன்றத்தில் குலாமை கரம்பிடித்தார். இந்த விஷயம் ஊர் பஞ்சாயத்துக்கு தெரிய வரவே, குலாமின் குடும்ப உறுப்பினர்கள் அபராதம் செலுத்த வேண்டியதானது.
ஆனாலும் தனது மனைவியான சீமா அறிவுரையின்படி, கராச்சிக்கு வந்த குலாம் ஹைடர், அங்கு ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வந்தார். 2019 இல் பணம் சம்பாதிப்பதற்காக அவர் சௌதி அரேபியாவுக்கு பயணித்தார்.
அதன்பின், சீமா கராச்சியில் உள்ள குலிஸ்தான் -இ-ஜவுஹர் பகுதிக்கு அருகில் உள்ள தானி பக்ஷ் கோத் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவரது வீடு மூன்றாவது மாடியில் இருந்தது. வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் தரை தளத்தில் வசித்து வந்தார்.
ஆரம்பத்தில் சீமாவுடன் அவரின் தந்தை, சகோதரர் மற்றும் சகோதரி அந்த வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வீட்டு வாடகை மற்றும் செலவை சீமாவின் தந்தை பகிர்ந்து கொண்டிருந்தார். ஆனால் மாத வாடகை கொடுப்பது தொடர்பாக தந்தை, மகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சகோதரியின் திருமணம், ராணுவத்தில் சேர்ந்த சகோதரர் என குடும்ப உறுப்பினர்கள் குறையவே, சீமா தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். அவரும் கடந்த ஆண்டு இறந்தார்.
இந்த நிலையில் தான், ஒரு நாள் கிராமத்திற்குச் சென்று வருவதாக கூறிவிட்டு போன சீமா, அதன்பின் வீடு திரும்பவில்லை என்று கூறுகிறார் வீட்டின் உரிமையாளர் மன்சூர் ஹுசைன்.
காதலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் டஜன் கணக்கில் பெண்கள் கொல்லப்பட்டு வருவதாக செய்திகள் வரும் பாகிஸ்தானின் அபாயகரமான பகுதியைச் சேர்ந்தவர் சீமா. ஆனால் அவர் தனது காதலை தைரியமாக வெளிப்படுத்தியதுடன், தன் காதலனை கரம்பிடிக்க, கணவனை துறந்து இந்தியாவிற்கு பயணமும் மேற்கொண்டு, தற்போது இங்கேயே உள்ளார்.