“கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோதி உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்”
சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அதன் காலனி நாடுகளுக்குப் பயணம் செல்ல பாஸ்போர்ட்கள், விசாக்கள் தேவையில்லை. முதலாவது உலகப் போர் வந்த பிறகு சூழ்நிலைகள் மாறின. நாடுகள் தங்கள் எல்லைகளில் உறுதியாக இருந்தன, எல்லைப் பகுதி கட்டுப்பாடுகள் அதிகரித்தன.
பொருளாதார தேக்கம், மந்தநிலை ஏற்பட்டது. தேசியவாதம் என்பது அளவுகடந்த தேசியவாதமாக மாறியது. அது இன்னொரு உலகப் போருக்கு வித்திட்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு நாம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள, நிறுவன அமைப்பு சார்ந்த உலக ஒழுங்குமுறை உருவானது. கடந்த 75 ஆண்டுகளாக, பல தடங்கல்கள் இருந்தாலும், இந்த உலக ஒழுங்கு பெரும்பாலும் உறுதியாகவே இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் இந்த உலக ஒழுங்கை சிதைத்துவிடும் ஆபத்தை உருவாக்கியுள்ளது. முதலாவது உலகப் போருக்கு பிந்தைய நிலையில் இருந்ததைப் போல, நாடுகள் தங்கள் நலனை மட்டும் பார்க்கின்றன, அதிகார எண்ணத்துடன் பார்க்கின்றன. தங்கள் நலன் மட்டும் சார்ந்த, குறுகிய மனப்போக்கு கொண்ட ஒரு உலகம் உருவாகும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
``அரசாங்கம் பழைய நிலைக்குத் திரும்புதல்'' என்பது புதிய மறைமொழியாக உள்ளது. உலகமயமாக்கல் மற்றும் தாராள வர்த்தகம் காணாமல் போகும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.