மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,691ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 88 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்த 121 கோவிட்-19 நோயாளிகள் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 3,663 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றும், இது பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 64.36 விழுக்காடு என்றும் மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தற்போது 1,932 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 41 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மலேசியாவில் வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 96ஆக உயர்ந்துள்ளது.
Image captionகோப்புப்படம்
"கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஒரே நாளில் 217 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. அன்று தான் ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது.
"அதன் பிறகு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் மலேசியாவில் 6,300 பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்ற நிபுணர்களின் கணிப்பு நிகழவில்லை. இனி மலேசியா உச்ச நிலையை அடையப் போவதில்லை. அது தற்போது நமக்குப் பின்னால் போய்விட்டது. நாம் இப்போது மீண்டு வரும் கட்டத்தில் இருக்கிறோம்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.
சீனாவில் இருந்து மலேசியாவுக்கு வருகை தந்துள்ள எட்டு மருத்துவர்களைக் கொண்ட குழுவிடம் இருந்து மலேசிய நிபுணர்கள் நிறைய கற்றுக் கொண்டதாக குறிப்பிட்ட அவர், கொரோனா வைரஸ் விவகாரத்தில் மலேசியாவை விட சீனா குறைந்த பட்சம் இரண்டு மாதங்கள் முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார்.
"கோவிட்-19 என்பது புதிய வகை கொரோனா வைரஸ் ஆகும். எனவே அதை எப்படி அணுக வேண்டும் எனும் அனுபவம் நமக்கு இல்லை. இதில் கூடுதல் அனுபவம் கொண்ட சீனாவிடம் இருந்து கற்பதற்கு நிறைய உள்ளன.
"கொரோனா விவகாரத்தில் மலேசியாவின் செயல்திட்டமும் கொள்கையும் சீனாவுடன் ஒத்துப் போகிறது. சீன மருத்துவர் குழு மலேசியா வந்ததால் நாம் பலன் அடைந்துள்ளோம்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் தெரிவித்தார்.
மோதியிடம் உறுதியளித்த சிங்கப்பூர் பிரதமர்
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று புதிதாக 897 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இவர்களில் பெரும்பாலானோர் தங்குவிடுதியில் வசிப்பவர்கள் என்றும், 13 பேர் சிங்கப்பூரர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
இதற்கிடையே சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கேட்டுக் கொண்டதை அடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அந்நியத் தொழிலாளர்களுக்கு என சிறப்பு காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிங்கப்பூரில் உள்ள அந்நியத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ரஹ்மான் அறிவுறுத்தி உள்ளார்.
அக்காணொளியை அமைச்சர் ஈஸ்வரன் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தமது கோரிக்கையை ஏற்று காணொளியை அனுப்பியதற்காக அவர் ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சிங்கப்பூர் குடிமக்களை எப்படி கவனித்துக் கொள்வோமோ அது போன்றே அந்நியத் தொழிலாளர்கள் நலனிலும் சிங்கப்பூர் அரசு அக்கறை கொண்டுள்ளதாக பிரதமர் லீ இந்திய பிரதமரிடம் உறுதி அளித்துள்ளார்.
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பேசினார் சிங்கப்பூர் பிரதமர் லீ. இது குறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களைப் பார்த்துக்கொள்வதில் சிங்கப்பூரின் முயற்சிகளை பிரதமர் மோடி ஆமோதித்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் லீ, வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் அரசின் நல்ல செயல்பாட்டை மறக்க மாட்டார்கள் என்று இந்திய பிரதமர் கூறியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.