1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (14:42 IST)

பேச்சுவார்த்தைக்கான தயாரிப்பில் அமெரிக்கா - வட கொரியா!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பை சாத்தியமாக்க அமெரிக்கக்குழு, வட கொரிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.
 
ராணுவமயமற்ற பகுதியில் உள்ள பன்முன்ஜம் என்ற இடத்தில் வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் சந்தித்தையடுத்து வட கொரியா - அமெரிக்கா உச்சிமாநாடு நடைபெறும் என்று தெரிகிறது.
 
ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த மாநாட்டை வட கொரியா விரோத போக்கை கடைபிடிப்பதாகக் கூறி அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். உச்சிமாநாடு நடைபெற வேண்டும் என இரு தரப்பினரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
 
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பது வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் "நிலையான விருப்பம்" என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
கொரிய தீபகற்பத்தில் இருந்து அணு ஆயுதங்களை ஒழிக்க விரும்புகிறார் வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன். ஆனால், தமது அரசின் உறுதித் தன்மைக்கு வாஷிங்டன் உத்தரவாதமளிக்குமா என்பதை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன்.
 
தம்மிடமுள்ள எல்லா அணு ஆயுதங்களையும் துறக்க கிம் தயாராக இருக்கிறாரா என்று கேட்டபோது, வட கொரியாவின் நோக்கங்களை உறுதிப்படுத்திக்கொள்ள அமெரிக்காவும் அந்த நாடும் நேரடியாகப் பேச வேண்டும் என்றார் அவர்.
 
கிம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அவரை எல்லையில் சந்தித்துப் பேசிய பிறகு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் மூன் ஜே-இன். வட கொரியாவின் செய்தி முகமையான கே சி என் ஏ வெளியிட்ட அறிக்கையில், வட கொரியா - அமெரிக்கா உச்சிமாநாடு நடைபெற வேண்டும் என்பது கிம்மின் "நிலையான விருப்பம்" என்று கூறப்பட்டுள்ளது. 
 
நிரந்தரமான மற்றும் நிலையான அமைதியை நிலைநாட்ட, சமரசம் மற்றும் ஒற்றுமை கொண்ட புதிய சகாப்தத்தை தொடங்குவதற்கான ஒத்துழைப்புக்கு" கிம் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனிடையே, முன்பே திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடைபெற ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருவதாக வாஷிங்கடனில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த மாநாட்டில் டிரம்பும் கிம்மும் நேரடியாக சந்தித்துப் பேசுவார்கள்.
 
முன்னதாக வெளிப்படையான விரோதத்தையும், பெருங்கோபத்தையும் வடகொரியா வெளிப்படுத்தியதாகக் கூறி இந்த சந்திப்பை ரத்து செய்வதாகக் கூறியிருந்தார் டிரம்ப். ஆனால், தாம் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது வடகொரியா.
 
இந்நிலையில் மீண்டும் திடீர் திருப்பம் ஏற்பட்டு வட கொரியா-அமெரிக்கா உச்சி மாநாடு நடைபெற ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறிய டிரம்ப், திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதியே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், அந்தத் தேதியைத் தாண்டியும் பேச்சு நடக்கலாம் என்றும் கூறியிருந்தார்.