1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (15:00 IST)

தங்க மீன்கள் - அழகான ஆபத்து: ஏன் தெரியுமா?

தங்க மீன்களை பொது ஏரிகளில் விட வேண்டாம் என அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த பர்ன்ஸ்வில் நகர அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 
வீட்டில் வளர்க்கப்படும் இந்த தங்க மீன்கள், எரிகளில் மிகப் பெரிதாக வளர்வதோடு, ஒட்டுமொத்த சூழலியலையும் பாதிக்கிறது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த பர்ன்ஸ்வில் நகர நிர்வாகம், கணக்கெடுப்பின் போது கெல்லர் ஏரிப் பகுதியில் பிடிபட்ட ராட்சத தங்க மீன்களை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
 
அந்த ட்விட்டர் பதிவில் "தயவு செய்து நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான தங்க மீன்களை ஏரிகள் மற்றும் குளங்களில் விட வேண்டாம். அவை நீங்கள் நினைப்பதை விட பெரிதாக வளர்கின்றன. ஏரி மற்றும் அடிப்பகுதிகளை கிளறுவது மற்றும் செடி கொடிகளை நாசம் செய்வதால் குளங்களின் நீரின் தரத்தை பாதிக்கிறது" என கூறப்பட்டுள்ளது.
 
மினிசோட்டா மாகாணத்தில் தங்க மீன்கள் ஆக்கிரமிப்பு உயிரினங்களாக (Invasive Species) பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. தங்க மீன்களை பொது ஏரி மற்றும் குளங்களில் விடுவது சட்டத்துக்கு புறம்பானது. பொதுவாக ஒரு தங்க மீனை வீட்டில் வைத்து வளர்த்தால் அது இரண்டு இன்ச் அளவுக்கு வளரும். ஆனால் அதே மீனை ஏரி போன்ற நீர் நிலைகளில் விட்டால், அது பல மடங்கு பெரிதாக வளரும். அதை பிடிப்பதும் சிரமம் என்கிறார்கள் அதிகாரிகள்.
 
மேலும் தங்க மீன்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடியவை எனவும், மற்ற உயிரினங்களை அழித்து ஆதிக்கம் செலுத்தக் கூடியது எனவும் கூறியுள்ளனர். எனவே தங்க மீன்களுக்கு புதிய வீட்டைக் கண்டுபிடிக்க மற்ற வாய்ப்புகளை ஆராயுமாறு பர்ன்ஸ்வில் நகர அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தி உள்ளனர்.
 
பர்ன்ஸ்வில் போலவே கர்வர் கவுன்டி பகுதியிலும் இதே போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதாக வனவிலங்கு அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் ஒரு சிற்றோடையில் இருந்து சுமார் 50,000 தங்க மீன்களை எடுத்திருக்கிறார்கள். மூன்று ஆண்டு கால ஆராய்ச்சி மற்றும் இந்த மீன் இணத்தை நிர்வகிப்பதன் ஒரு பகுதியாகத் தான் இந்த மீன்கள் நீக்கப்பட்டன. இந்த தங்க மீன் இனம் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் பிரச்னையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
 
தங்க மீன்களால் அமெரிக்கா மட்டும் இப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ளவில்லை. மற்ற சில நாடுகளும் இப்பட்டியலில் இருக்கின்றன. கடந்த 2017ஆம் ஆண்டு ஜெர்மானிய நகரான மியூனிக்கில் உள்ள பொது ஏரி மற்றும் குளங்களில் இருக்கும் தங்க மீன்கள், மற்ற உயிரினங்களை சாப்பிட்டு விடுவதாகவும், எனவே பொது நீர் நிலைகளில் யாராவது தங்கள் செல்லந பிராணிகளை விட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தது நகர நிர்வாகம்.
 
மிகப் பெரிய தங்க மீன்கள் பிரிட்டனின் நீர் நிலைகளிலும் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு பிரிட்டன் இளைஞர் சுமார் 2.2 கிலோ எடை கொண்ட ராட்சத தங்க மீனை டார்செட்டில் ஒரு ஏரியில் கண்டு பிடித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.