புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (19:19 IST)

சமையல் அடுப்பு வெடித்து பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து; குறைந்தது 74 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

 
ரயிலில் பயணித்தவர்கள் எரிவாயு சிலிண்டரை எடுத்துவந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ மூன்று ரயில் பெட்டியில் பரவியதாக கூறப்படுகிறது.
 
பலர் எரியும் ரயிலில் இருந்து தப்பிக்க வெளியே குதித்ததால் உயிரிழந்ததாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.


 
இந்த விபத்தில் இதுவரை 40 பேர் காயமடைந்துள்ளனர் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
"இரண்டு சமையல் அடுப்புகள் வெடித்துவிட்டன. அவர்கள் சமைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த சமையல் எண்ணெய் மேலும் தீயை கூட்டியுள்ளது," என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார்.
 
நீண்ட தூர பயணங்களில் சமையல் செய்வதற்கு பயணிகள் ரயிலில் அடுப்புகளை எடுத்து வருவது பெரும் பிரச்சனையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
 
பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதியில், ரஹிம் யார் கான் நகருக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட மிகவும் மோசமான ரயில் விபத்து இதுவாகும்.
 
பாகிஸ்தானில் இம்மாதிரியான ரயில் விபத்துகள் அதிக பலி எண்ணிக்கையுடன் இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளது. பொதுவாக அங்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகளவிலான பயணிகள் பயணிப்பதால் இம்மாதிரியான விபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
 
ஜூலை மாதம் நடைபெற்ற ஒரு விபத்தில் 11 பேரும், செப்டம்பர் மாதம் நடைபெற்ற விபத்தில் 4 நான்கு பேரும் உயிரிழந்தனர்.
 
2007ஆம் ஆண்டு, மெராப்பூருக்கு அருகில் நடைபெற்ற விபத்து ஒன்றில், குறைந்தது 56 பேர் உயிரிழந்தனர். மேலும் 120 பேர் காயமடைந்தனர்.
 
2005ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் மூன்று ரயில்கள் மோதியதில் 130 பேர் உயிரிழந்தனர். அது அந்நாட்டில் நடைபெற்ற மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்று.