மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை

Last Updated: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (11:11 IST)
பாகிஸ்தான் அரசு ஜமா-உத்-தாவா மற்றும் ஃபலா-இ-இன்சானியாத் ஆகிய இரு அமைப்புகளையும் தடை செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு  தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தீவிரவாதத்துக்கு எதிரான தேசிய செயல் திட்டத்தை விரிவாக மறு ஆய்வு செய்ததாகவும், பாகிஸ்தான் உள்விவகாரங்கள் துறையின் செய்தித்தொடர்பாளர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தக் கூட்டத்தின்போதே மேற்கண்ட இரு அமைப்புகளையும் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரு அமைப்புகளும் பாகிஸ்தான் உள்விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் இருந்தன.
 
ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 
ஹஃபீஸ் சயீத் ஜமா-உத்-தாவா அமைப்பின் தலைவராக உள்ளார். ஜமா-உத்-தாவாவின் தொண்டு நிறுவனமாக ஃபலா-இ-இன்சானியாத்  செயல்பட்டு வந்தது.
 
அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர்கள் விலை வைத்து, தேடப்படும் தீவிரவாதி என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த 2008இல் நடைபெற்ற மும்பை தாக்குதல் தொடர்பாக அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானிடம் தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது.

இதில் மேலும் படிக்கவும் :