திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (17:43 IST)

"அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் இந்தியாவால் கொல்லப்படவில்லை"

இந்தியாவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளில் உண்மை இல்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளதாக பிபிசியின் இஸ்லாமாபாத் செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தெரிவிக்கிறார்.

ஆகஸ்டு 17ஆம் தேதியன்று பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள கெல் செக்டரில் நடைபெற்ற எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் நாயிப் சுபேதார் அகமது கான் என்ற பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பிடித்த சிப்பாய்தான் இவர் என்பது உறுதி செய்யப்படவில்லை
அவர்தான் அபிநந்தனை பிடித்தார் என்ற இந்திய ஊடகங்களின் கூற்றை பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன.

இருவரும் வேறுவேறு நபர்கள் என்றும், எனினும் பாகிஸ்தானின் சிப்பாய்கள் அபிநந்தனை உள்ளூர் மக்கள் தாக்காமல் தங்களின் பிடியில் எடுத்து அவர் உயிரை காப்பாற்றியதற்கு இந்தியா நன்றி கூற வேண்டும் என்றும், படைகள் அவரை காப்பாற்றவில்லை என்றால், அவர் கோபம் நிறைந்த அந்த கூட்டத்தால் கொல்லப்பட்டிருப்பார் என செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எஃப்.16 விமானம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கினார்.
மார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இதனால் அபிநந்தன் இந்தியாவில் மிகவும் பிரபலமானார்.

சமீபத்தில், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது "வீர் சக்ரா விருது" வழங்கி இந்தியா கௌரவித்தது.

வீர தீர செயல்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதுதான் "வீர் சக்ரா".