வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (22:57 IST)

பாகிஸ்தான்: ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, முஸ்லிம் செய்தியாளர் கைது

இந்துக் கடவுளான ஹனுமனை அவமதித்த செய்தியாளர் ஒருவரை, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தெய்வ நிந்தனைச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
இது தொடர்பாக மிர்புர்காஸ் நகரின் சாட்டிலைட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
தான் லுஹானா பஞ்சாயத்து மிர்புர்காஸின் துணைத் தலைவர் என்று புகார்தாரர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.
 
மார்ச் 19 அன்று தன் நண்பர்களுடன் தான் இருந்தபோது, அஸ்லாம் பலோச் என்ற உள்ளூர் செய்தியாளர் தனது முகநூல் பக்கத்திலும் வாட்சப் குழுவிலும் ஹனுமனின் படத்தைப் பகிர்ந்ததை பார்த்ததாக ரமேஷ் கூறுகிறார்.
 
இந்த ஹனுமன் படத்தைப் பகிர்ந்ததன் மூலம், அஸ்லம் பலூச் தனது மற்றும் தன்னைப் போன்ற பிற இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ரமேஷ் குமார் தனது புகாரில் கூறியுள்ளார். இந்தப் படத்தைப் பகிர்ந்ததன் மூலம், மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உடைத்து சட்டம் ஒழுங்கைக் கெடுக்க முயன்றதாக அவர் கூறினார்.
 
ரமேஷ் குமாரின் புகாரின் பேரில் அஸ்லம் பலூச் மீது பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் 295A மற்றும் 153A ஆகிய பிரிவுகளின் கீழ் சாட்டிலைட் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது.
 
பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 295A பிரிவின் கீழ், இரு மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வேண்டுமென்றே கெடுக்க முயற்சிப்பவர்களை தண்டிக்க ஒரு ஏற்பாடு உள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தினாலும், இந்த பிரிவின் கீழ் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
 
பாகிஸ்தானில், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் பெரும்பான்மை முஸ்லிம் சமுதாய மக்கள் மீதும் சில சமயங்களில் கடவுள் நிந்தனை வழக்குகள் பதிவு செய்யப்படும் உதாரணங்களும் உள்ளன.
 
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட தனது பதிவில், அஸ்லம் பலோச், "கேப்டன் ஸ்ரீராம் பார்க்வாலே" என்று எழுதியிருந்தார்.
 
இந்த சமூக வலைதள பதிவுக்கு பாகிஸ்தானின் இந்து சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரம் சிந்தி முஸ்லிம்களும் இது தொடர்பாக கவலை வெளியிட்டிருந்தனர்.
 
சிறுபான்மை விவகாரங்களுக்கான மாகாண அமைச்சர் கியான்சந்த் இஸ்ரானி, சிந்து இன்ஸ்பெக்டர் ஜெனரலைத் தொடர்பு கொண்டார். மிர்புர்காஸ் எஸ்எஸ்பியிடமும் அவர் பேசினார். அந்த செய்தியாளரை உடனடியாக கைது செய்யுமாறும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
 
யாருடைய மதத்தையும் இழிவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் இவ்வாறான செயல்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாது எனவும் மாகாண அமைச்சர் கூறினார்.
 
இந்துக்களின் கடவுள் அவமதிக்கப்பட்டதால், இந்துக்களின் மத உணர்வுகள் புண்பட்டுள்ளன என்றார் அவர். பாகிஸ்தானில் மத சகிப்புத்தன்மையின் மையமாகவும் சிந்து மாகாணம் கருதப்படுகிறது.
 
மாகாணத்தில் அமைதியை சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் கீழ் இந்த வேலை நடந்திருக்கலாம் என்று அமைச்சர் கூறுகிறார்.
 
அதே நேரத்தில், போலீஸ் காவலில் இருக்கும் அஸ்லம் பலூச்சின் வீடியோ அறிக்கையும் வெளிவந்துள்ளது, அதில் அவர் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
அந்த இடுகையை தாம் பதிவிடவில்லை என்றும், தன்னுடன் பகிரப்பட்டதை மறு பகிர்வு செய்தாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்து மதத்தின் நிகழ்ச்சிகளில் தான் எப்போதும் பங்கேற்பதாக அஸ்லாம் பலோச் கூறுகிறார். அதேசமயம் இது ஒரு சதியாக இருக்கலாம் என்று புகார்தாரர் கூறுகிறார்.
 
பாகிஸ்தானில் பெருமளவிலான இந்துக்கள் சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர். சிந்துவின் 70% இந்து மக்கள் மிர்புர்காஸில் வசிக்கின்றனர். தர்பார்கர், உமர்கோட் மற்றும் சங்கர் ஆகிய எல்லை மாவட்டங்கள் மிர்புர்காஸ் மண்டலின் கீழ் வருகின்றன. இந்த மாவட்டங்களின் எல்லை இந்தியாவை ஒட்டி உள்ளன.