செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (19:00 IST)

ப.சிதம்பரம் குடும்பம் அறிக்கை: "பல நாடுகளில் சொத்து இருப்பதாக கூறுவது பேய்க் கதை"

பல வங்கிக் கணக்குகள், பல நாடுகளில் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுவது அனைத்தும் பேய் கதை என ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


 
இன்று ப.சிதம்பரத்தின் குடும்பம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், "அவதூறுகளுக்கு எதிராக உண்மையை தூக்கி பிடிக்க ஊடகங்கள் தவறிவிட்டன. சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரும் நிராபராதியே என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று. உண்மை நிச்சயம் வெல்லும் என நாங்கள் நம்புகிறேம்." என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"போதுமான சொத்துக்கள் கொண்ட சிறிய குடும்பம் எங்களுடையது. நாங்கள் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்கிறவர்கள். நாங்கள் பணத்திற்காக ஏங்குவது இல்லை. அதேபோல் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் வழியும் எங்களுக்கு தேவையில்லை. எனவே எங்களுக்கு பல நாடுகளில் சொத்துக்களும், பல வங்கி கணக்குகளும், பல போலி நிறுவனங்களும் இருப்பதாக கூறப்படும் தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். இது அனைத்துமே ஒரு பேய் கதை. இது ஒரு நாள் மறைந்து போகும்."
 
"இந்த வெளியில் கூறப்படாத வங்கி கணக்குகள் குறித்தோ, சொத்து குறித்தோ போலி நிறுவனங்கள் குறித்தோ அரசு ஏதேனும் ஆதாரம் வழங்கமுடியுமா என நான் சவால் விடுகிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நிதானத்துடன் செயல்பட்டு, கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் தூக்கிப்பிடித்து, ஊடகங்கள் உள்பட நம் அனைவரையும் சட்டத்தின் ஆட்சிதான் காக்கும் என்பதை நினைவுகூர்ந்து செயல்படவேண்டும் என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்டு 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 30 வரை மீண்டும் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நேற்று அனுமதி அளித்துள்ளது சிபிஐ நீதிமன்றம்.