புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (10:24 IST)

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் - பெரிய முதலீடின்றி சுயதொழில் தொடங்குவது எப்படி?

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் இரண்டாவது கட்டுரை இது.)
 
செய்யும் வேலை பிடிக்கவில்லை; கையிலோ போதிய பணமில்லை; ஆனால், சுயதொழிலில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. வழிதான் தெரியவில்லை என்று நினைக்கிறீர்களா? இந்த கட்டுரை உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடும்.
கணினியின் கண்டுபிடிப்பும், இணையத்தின் வளர்ச்சியும் உலகுக்கு புதியதொரு பாதையை வகுத்து கொடுத்துள்ளது. கணினியும், இணையமும் சேர்ந்துதான் ஒவ்வொரு நாட்டிற்குமான எண்ணிமப் பொருளாதாரம் (Digital Economy) என்கிற தவிர்க்க முடியாத துறையை தோற்றுவித்துள்ளது.
 
எண்ணிமப் பொருளாதாரத்தில் உள்ள வேலை, தொழில் வாய்ப்புகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்த முடியும்.
 
1. தொழில்நுட்ப சேவைகள் (Information Technology Services)
 
2. பயனரின் சுயமுனைவு தகவல்கள் (User Generated Content)
 
எண்ணிமப் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் அயல்பணி ஒப்படைப்பு (Outsourcing) துறையில் அதிகமானோரைக் கொண்டு நிறைய வேலைவாய்ப்புகள் இந்தியாவில் இன்னும் உருவாகிக் கொண்டே வருகின்றன.
 
UGC எனப்படும் பயனர் தன்முனைவு தகவல்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவு வணிக ரீதியிலான வெற்றியை பெற்று வருகின்றன. ஃபேஸ்புக், அமேசான் கிண்டல், யூடியூப், ட்ரெல், ஷார்சேட் என பல நிறுவனங்களின் சேவைகள் இதில் முன்னணியில் உள்ளன.
அதாவது, இதுபோன்ற செயலிகள்/ தளங்களின் மூலம் பயனாளர்களே தங்கள் செய்திகளை உரையாகவோ, புத்தகமாகவோ, காணொலியாகவோ கொடுத்து பார்வையாளர்களை ஈர்த்து விளம்பரம் மூலமோ விற்பனை மூலமோ வருவாய் திரட்டுதலே UGC எனப்படுகிறது.
 
இந்த துறையில் இந்தியா உலகிலேயே முன்னணியில் இருப்பதற்கு நாட்டின் மக்கள் தொகையும் ஒரு காரணம். இதனாலேயே வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மிக அதிகளவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன.
 
சரி, இதுவரை இத்துறைக்கு உள்ள முக்கியத்துவத்தையும், வாய்ப்புகளையும் பார்த்தோம். இனி அதை பயன்படுத்தி நீங்கள் எப்படி குறைந்த முதலீட்டில் சுயதொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புண்டு என்பதை பார்க்கலாம்.
 
மென்பொருள் உருவாக்கம் மற்றும் மேலாண்மை, சினிமா வரைகலை, பல்லூடக வடிவமைப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல், புதிய தகவல்களை உருவாக்குதல், மொழிபெயர்ப்பு, தரவுத்தள மேலாண்மை, இணையதளம் உருவாக்கம், செயலிகள் உருவாக்கம், நிறுவன கணக்கு வழக்குகள், நிறுவன சந்தைப்படுத்துதல், நிறுவனத்திற்காக சேவைகளை வழங்குதல், தரவுப் பதிவு (Data Entry), அலுவலகரீதியான வேலை, தேடுபொறி இசைவாக்கம், தானியங்கு உரை செயலி (Chat Bot), செயற்கை நுண்ணறிவு, நல்வாழ்வுக்கான வழிகாட்டுதல் எனப் பல பணிவாய்ப்புகள் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கொட்டிக் கிடக்கின்றன.
முதல் கட்டுரை - இணைய வெளியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா தமிழ்நாடு அரசு?
 
மேற்குறிப்பிட்டுள்ள பணிவாய்ப்புகளில் எல்லாவற்றிலுமே ஒவ்வொன்றின் உள்ளும் ஏறக்குறைய 30க்கு மேற்பட்ட உள்துறைகள் உண்டு. கிராபிக்ஸ் டிசைன் எனப்படும் வரைகலை வடிவமைப்பில் விளம்பர வடிவமைப்பு, இலச்சினை (Logo) வடிவமைப்பு, பத்திரிக்கை வடிவமைப்பு என்று உட்துறைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டேயிருக்கும்.
 
மென்பொருள் உருவாக்கம் என்றால் கணினி, இணையம் ,செயலி என்ற மூன்று உள்துறைகள் இருக்கின்றன. அந்த மூன்றினையும் ஒருங்கிணைத்து மேகக் கணிமை (Cloud Computing), சாட்பாட், வாடிக்கையாளர் சேவை, செயற்கை நுண்ணறிவு என இதிலும் நீட்டிக்கலாம்.
என் தனிப்பட்ட கணக்கின்படி, தகவல் தொழில்நுட்பத்துறையில் சராசரியாக 520 வகையான பணி வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் ஒருவர் தனக்கு உள்ள திறமை, பணிவாய்ப்பு, முதலீட்டு தொகை உள்ளிட்ட பல்வேறு படிநிலைகளை கருத்திற்கொண்டு தங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்யலாம். இப்போது, இதில் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
 
வரைகலை வடிவமைப்பு (Graphics Designing)
 
தொழில்வாய்ப்புகளை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட குறைந்தபட்ச முதலீடே இல்லாமல் சம்பாதிக்கும் இடம் இந்த கிராபிக்ஸ் டிசைன்.
 
ஏனெனில் இது கணினி அறிவும், ஃபோட்டோஷாப் அறிவும் இருந்தால் போதும் ஒரு நிறுவனத்திற்கு தேவையான லோகோ உருவாக்கம், விசிட்டிங்க கார்டு, லெட்டர்பேடு என ஆரம்பித்து அவர்கள் சமூக வலைத்தள சந்தைபடுத்துதல் (Social Media Marketing) என இன்று இதற்கான தேவை மிக அதிகம்.
 
ஒருவேளை, உங்களுக்கு ஃபோட்டோஷாப் மென்பொருட்கள் குறித்த அறிமுகம் இல்லையென்றாலும் கவலையில்லை. இன்றுள்ள நுட்ப காலக்கட்டத்தில், இணையத்தில் கிடைக்கும் Canva போன்ற எண்ணற்ற செயலிகளை கொண்டே, மிக எளிதாக எல்லா வகையான பேனர்களையும் உருவாக்கிட முடியும்.
 
எனினும், இணையதள உருவாக்கம், செயலிகள் உருவாக்கத்துக்கு முதலில் தேவைப்படும் பயனர் இடைமுகம் (User Interface), பயனர் அனுபவத்திற்கு (User Experience) போட்டோஷாப், கோரல் டிரா, இல்லஸ்டிரேட்டர் உள்ளிட்டவற்றின் அறிமுகம் தேவைப்படும்.
 
எனவே, இதற்கு உள்ளூரில் DTP (Desktop Publishing) சான்றிதழ் படிப்பை படியுங்கள். எப்போதும் வேலைவாய்ப்புள்ள துறையாக கருதப்படும் இதற்கு மிக முக்கியமான தேவை கற்பனைத் திறன் தான்.
 
அமேசான் கிண்டில் உள்ளிட்ட மின்புத்தக உருவாக்கத்திற்கு Microsoft Word, Open Office போன்றவற்றின் பயன்பாட்டு புரிதல் இருந்தாலே போதும், மற்றவர்களுக்குத் தேவையான மின்புத்தகங்களை தயார் செய்து அதன் வழியாகவும் வருவாய் ஈட்ட முடியும்.
 
சமூக வலைத்தள சந்தைப்படுத்துதல் (Social Media Marketing)
 
தற்காலத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இணைய வழி சந்தைப்படுத்துதல் என்பது தேவை மட்டுமல்லால், அத்தியாவசியமும் கூட. யாரும் எளிதாக செய்துவிடக்கூடியதாக தோன்றும் இந்த பணிக்கு மிக முக்கியமான தேவை படைப்புத்திறனும், சொல்வளமும்தான்.
 
இன்று நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சி விளம்பரங்கள், வானொலி விளம்பரங்கள், பத்திரிக்கை விளம்பரங்கள், இணைய விளம்பரங்களை உருவாக்கிக்கொடுக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் நீங்கள் செய்யும் வேலை மட்டுமின்றி, வேலைவாய்ப்பையும் இணையத்திலேயே பெற முடியும் என்பதுதான் இதிலுள்ள சிறப்பு. ஆனால், இதற்கு பொறுமையும், ஆழ்ந்த தேடலும் அவசியம்.
 
இணையதள உருவாக்கம்
இன்று எல்லா நிறுவனங்களுக்கும் இணையதளம் என்பது தேவை. இதற்கு மிக எளிதாக Content Management System எனப்படும் தகவல் மேலாண்மை மென்பொருள் மூலம் ஒருசில மணிநேரங்கள் முதல் நாட்களிலேயே உருவாக்கிட முடியும்.
 
இதற்கு WordPress, Joomla, Drupal, Dijango உள்ளிட்ட பல்வேறு மென்பொருள்கள் உதவுகின்றன. இவற்றில் சிலவற்றை நிரலாக்கமின்றி உருவாக்கிவிட முடியும் என்றாலும் அடிப்படை HTML அறிவு இருப்பது நல்லது. அதேபோன்று PHP, CSS அறிவும் கொஞ்சம் அவசியம். எனவே, உள்ளுரிலோ அல்லது இணையத்திலோ இணையதள வடிவமைப்பு குறித்த படிப்பில் சேர்ந்து CSS, PHP, JavaScript போன்றவற்றை கற்றறியலாம்.
 
மின் வணிக இணையதள உருவாக்கம்
 
மின் வணிக இணையதள உருவாக்கத்துக்கு இன்றும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதற்கும் உடனடியாக ஆரம்பிக்கும் வகையில் 'Shopping cart' மென்பொருள்கள் உள்ளன. WooCommerce, Shopify, Megento, Open cart என பல செயலிகள் உள்ளன. தமிழகத்தில் இருந்து செயல்படும் Zoho நிறுவனமும் Zoho commerce என்ற பெயரில் மின் வணிக இணையதள சேவையை கொடுக்கிறது. இதற்கும் PHP நிரலாக்க அறிவு அவசியம்.
 
இதில், சிறப்பம்சம் என்னவென்றால், பொதுவாக நீங்கள் நிறுவனத்திற்கு இணையதளத்தை உருவாக்கிக் கொடுத்தால், அதை தொடர்ந்து கட்டமைக்கும் பணியும் உங்களுக்கே கிடைக்கும்பட்சத்தில் நிலையான வருமானத்திற்கு வழிவகுக்கும்.
 
வியாபார நுண்ணறிவு (Business Analytics)
வியாபாரம் செய்பவர்களுக்கு தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிட உதவும் வகையில் பல செயலிகள் இருக்கின்றன. இதன்மூலம் தங்கள் வியாபாரங்களை மேலாண்மை செய்ய முடியும். இதற்கு Google Data Studio, Tableau, Zoho analytics போன்றவை உதவும்.
 
இதற்கு Data science என்ற சான்றிதழ் படிப்பு அருகில் உள்ள நகரங்களில் சொல்லித்தரப்படும் அல்லது யூடியூபிலோ மற்ற இணைய வழி படிப்பு வழங்கும் நிறுவனங்களிலோ சேரலாம்.
 
கணக்கு வழக்கு நிர்வகித்தல்
இன்று இந்தியாவில் பல சிறிய நிறுவனங்களும் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) தாக்கல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, ஜி.எஸ்.டி. தாக்கல் செய்துகொடுத்தல், நிறுவனத்தின் கணக்குகளை ஜி.எஸ்.டி. ஒத்திசைவுடன் கூடிய மென்பொருளில் பராமரித்தல், பொருள் விவரப் பட்டியல் (Invoice) மென்பொருள்கள், POS (Point of Sale) மென்பொருள்களை பராமரித்து கொடுத்தல் என பல்வேறு பணிகளை செய்து கொடுக்க முடியும்.
 
தகவல் உருவாக்குதல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் (Data collection, Data processing)
 
எல்லா நிறுவனங்களும் இன்று தரவுகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. எனவே எல்லா நிறுவனங்களுக்கும் தரவுகளை திரட்டித்தருதல், தொகுத்துக்கொடுத்தல், பகுப்பாய்வு செய்தல், மொழிபெயர்ப்பு, விளம்பர தகவல்களை உருவாக்கி கொடுத்தல், பிழைத் திருத்தல் என வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இதில் மொழிப்புலமை, கற்பனைத் திறன் மட்டுமின்றி ஒருவர் தனது தொடர்பு வட்டத்தை பெருக்கிக்கொள்வதே புதிய தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கான அடிப்படையாக விளங்குகிறது.
 
Google Sheet
கூகுள் விரித்தாள் (Google Sheet) பார்ப்பதற்கு சாதாரண எக்ஸல் ஷீட் போலத்தான் இருக்கும். ஆனால் அதை வைத்து லட்சக்கணக்கான செயல்பாடுகளையும், குறுஞ்செயலிகளையும் உருவாக்கிட முடியும். இதற்கும் அடிப்படை கணினி அறிவு அவசியம். இதுகுறித்து இணையத்தில் பணம் செலுத்தியும், இலவசமாகவும் கற்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
 
வாடிக்கையாளர் சேவை, தானியங்கு உரைப்பான் (Customer support and Chat bot)
இன்று சிறிய நிறுவனம் முதற்கொண்டு பெரிய நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர் சேவை மையத்தை வைத்திருக்கின்றன. ஆனால் இன்னமும் மிகச் சிறிய நிறுவனங்கள் தமக்கான பிரத்யோக வாடிக்கையாளர் சேவை மையத்தை உருவாக்கிடவில்லை. அவர்களுக்கு நீங்கள் ஏதாவது ஒருவகையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முனையலாம். அதற்கும் நிறைய செயலிகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.
 
கொஞ்சம் நிரலாக்கம் தெரிந்திருந்தால் நீங்கள் தானியங்கு உரை நிகழ்த்தும் மென்பொருளை வடிவமைக்கலாம். இன்று நிரலாக்கம் தெரியாமலேயே நாம் நமக்குத் தேவையான மென்பொருள்களையும் செயலிகளையும் உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
 
ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால் வாய்ப்புகள் எப்போதும் வளமாகவே இருக்கின்றன. நமக்கான வாய்ப்புகளை நாம்தான் ஏற்படுத்திகொள்ள வேண்டும். ஒருவர் கணினி சார்ந்த தனது அடிப்படை அறிவை தொடர்ந்து வளர்த்து கொள்வதன் மூலம் இந்த துறையில் குவிந்திருக்கும் வாய்ப்புகளை வசப்படுத்திக்கொள்ள முடியும்.
 
இதுவரை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் பற்றி பார்த்தோம். இனி பயனரால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் (User Generated Content) பற்றி பார்ப்போம்.
 
சுருக்கமாக சொல்வதென்றால், இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி நமக்கு நாமே வாடிக்கையாளர்கள் / பார்வையாளரை உருவாக்கி அதிலிருந்து பணம் ஈட்டுதலே UGC எனப்படுகிறது.
 
யூடியூப்
 
இதுவரை யூடியூபில் பார்வையாளராக மட்டுமே இருந்தவர்கள், தாங்களே புதிய சேனலை உருவாக்கி, காணொலிகளை பதிவேற்றலாம். இது வெளியிலிருந்து பார்ப்பதற்கு எளிதில் பணம் ஈட்டும் வழியாக தெரியலாம். ஆனால் உண்மையில் அதற்கு கடின உழைப்பையும், தொடர் முயற்சியையும் முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு யூடியூப் சேனல் பணம் ஈட்ட வேண்டுமெனில் நமது சேனலுக்கு 1,000 சந்தாதாரர்களும், கடந்த ஓராண்டில் அதிலுள்ள காணொளிகள் குறைந்தது 4,000 மணிநேரம் பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.
 
மேலும், அவ்வாறு தயாரிக்கப்படும் காணொளிகள் யாருடைய படைப்பிலிருந்தாவது நகல் எடுக்கப்பட்டால், யூடியூப் நிறுவனத்தின் நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றியிருக்க வேண்டும். இதை மீறும் பக்கங்கள் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் யூடியூப் மூலமாக வருவாய் ஈட்டுவது சாத்தியமாகும்.
 
இதேபோன்ற வழிமுறையைப் பயன்படுத்தி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புள்ளது.
 
மின்னூல்
எழுத்தாளர்கள், எழுத்தாளராக விருப்பம் உள்ளவர்கள் தங்கள் புத்தகங்களை அமேசான் கிண்டில் போன்ற சேவைகளின் வழியே பதிவேற்றி, வாசகர்களை பெருக்குவதன் மூலம் பணம் ஈட்டுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
 
இதனூடாக புத்தகம் விற்றால் அந்தந்த நிறுவனங்களின் சேவைக்கட்டணம் நீங்க, மீதப்பணம் மாதம் ஒரு முறை உங்கள் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.
 
சமூக வலைத்தள செல்வாக்கான நபர் (Social Media Influencer)
இது சிலருக்கு கொஞ்சம் புதிதாக இருக்கலாம், ஆனால் உண்மையில் இதுவும் ஒரு வகையான வருமானம் ஈட்டக்கூடிய வழிதான். அதிகமான நபர்களால் பின்பற்றக்கூடிய (Followers) பக்கங்களை உடையவர்கள் தான் செல்வாக்கான (Influencers) நபர்கள். அதனால்தான் அனைத்து யூடியூப் காணொளிகளிலும் 'லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க' என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
 
நீங்களும் சமூக வலைத்தளத்தில் செல்வாக்கான நபர் என்ற நிலையை அடைய வேண்டுமானால் படிப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்களை கொடுத்துக்கொண்டேயிருங்கள்.
 
இந்த உலகில் அதிகமான மக்கள் தொகை உள்ளவரை இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டவை மிகச் சிலவே, இதையும் தாண்டி இன்னமும் பல துறைகளில் பணி வாய்ப்புகள் இருக்கின்றன.
 
புகழ்பெற்ற மர்பி கோட்பாட்டின்படி, எப்போது ஒரு வேலை முடிக்கப்படுகிறதோ அப்போதே இன்னொரு தேவை ஆரம்பித்துவிடுகிறது. எனவே நமக்கான வேலைகள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும்.
 
சிறிய முயற்சி, கற்பனைத் திறன், சிறிய யுத்திகள் பயன்படுத்தி உங்கள் வாழ்வையும், உங்களைச் சார்ந்த சமூகத்தையும் வளப்படுத்துங்கள்.
 
(கணினித் தமிழ் ஆர்வலரான கட்டுரையாளர் செல்வமுரளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருதை' வென்ற இவர் இணையத் தமிழ் தொடர்பாக பேசியும் எழுதியும் வருகிறார்.)