புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:04 IST)

ஒமிக்ரான்: தமிழ்நாட்டில் மரபணு மூலக்கூறு ஆய்வு அலட்சியப்படுத்தப்படுகிறதா?

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மரபணு மூலக்கூறு ஆய்வில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
 
"கோவிட் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 5 சதவிகிதம் பேருக்கு மரபணு மூலக்கூறு ஆய்வை நடத்த வேண்டும்" என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ஒரு சதவீதம் பேருக்குத்தான் பரிசோதனை நடக்கிறது என மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். என்ன நடக்கிறது?
 
தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கண்டறியப்பட்ட ஒமிக்ரான் திரிபு, உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதன் பாதிப்பு என்பது 21 ஆக உயர்ந்துள்ளது. `கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை ஆகியவற்றைவிடவும் ஒமிக்ரான் திரிபு எந்தளவுக்கு இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும்?' எனவும் மருத்துவ வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அனுமதிக்காக காத்திருக்கும் மாநிலங்கள்
இந்தியாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள இன்சாகாக் (INSACOG - The Indian SARS-CoV-2 Consortium on Genomics) என்ற அமைப்பு மரபணு மூலக்கூறு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் மரபணு மூலக்கூறு ஆய்வகங்களைத் தொடங்க வேண்டும் என்றாலும் இந்த அமைப்பின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் உள்ளது.
 
கோவா உள்பட சில மாநிலங்கள் மரபணு மூலக்கூறு ஆய்வை நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில், தமிழ்நாட்டில் தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மரபணு மூலக்கூறு ஆய்வகம் அமைக்கப்பட்டாலும், அதற்கு மத்திய அரசின் அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
 
இதனால், `மாநில சுகாதாரத்துறையினர் மூலக்கூறை ஆய்வு செய்தாலும், அதனை இன்சாகாக் (INSACOG) ஆய்வகத்துக்கு அனுப்பி சான்று பெற வேண்டியுள்ளது' என பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
`தமிழ்நாட்டில் வைரஸின் திரிபுகளை அறிய மரபணு மூலக்கூறு ஆய்வகங்களைத் திறக்க வேண்டும்' எனத் தொடக்கம் முதலே விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பேசி வருகிறார்.
ஜனவரியில் தொற்று அதிகரிக்குமா?
இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய ரவிக்குமார் எம்.பி, ``தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த சனிக்கிழமையன்று விழுப்புரம் வந்திருந்தார். அவரிடம் மரபணு மூலக்கூறு ஆய்வகம் அமைக்கப்படுவது குறித்து கேட்டேன். அதற்கு அவர், `மரபணு மூலக்கூறு ஆய்வை மாநில அரசு நடத்துகிறது. ஆனால், அதே மாதிரியை மற்றொரு ஆய்வகத்துக்கும் அனுப்பி உறுதி செய்து கொள்கிறோம்' என்றார்.
 
அவர் தொடர்ந்து பேசும்போது, `வெளிநாட்டில் இருந்து இங்கு வந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மரபணு மூலக்கூறு ஆய்வை நடத்தியபோது, ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை' என்றார். இதையே ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்'' என்கிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், ``இந்தியாவில் நேற்று வரையில் 21 ஒமிக்ரான் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது அது பரவும் வேகத்தைப் பார்த்தால் ஜனவரியில் இந்தியாவில் பத்தாயிரமாக அதன் எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 2 மாதங்களில் இந்த எண்ணிக்கை உயரலாம். ஒமிக்ரான் தொற்று காரணமாக கர்நாடகாவில் சில தெருக்களை மூடியுள்ளனர். இந்தப் புதிய வகை திரிபால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது'' என்கிறார்.
 
கர்நாடகா சொல்வது என்ன?
``மரபணு மூலக்கூறு ஆய்வு போதுமான அளவுக்கு நடக்கிறதா?'' என்றோம். `` மிக மெதுவாக நடப்பதாகவே பார்க்க முடிகிறது. தென்னாப்பிரிக்காவில் பரவியபோது, அந்நாட்டு அரசு கூறிய விளக்கம் என்னவென்றால், `எங்களிடம் இருந்து பரவுவதாகக் கூறுவது தவறு. எங்களிடம் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் அதைக் கண்டுபிடித்தோம். அனைத்து நாடுகளிலும் ஒமிக்ரான் உள்ளது. அதனைக் கண்டறியவில்லை' என்றனர். கர்நாடகாவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு பயண வரலாறு என எதுவும் இல்லை. அவர்கள் அங்கேயே இருந்தவர்கள்தான். எனவே, வெளியில் இருந்துதான் வருகிறது என்பது தவறான ஒன்று.
 
மேலும், கோவிட் தொற்று பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் மரபணு மூலக்கூறு ஆய்வகத்தையே தொடங்காமல் இருந்தனர். அதைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால் தற்போது உருவாக்கியுள்ளனர். ஆனால், இதை மட்டுமே நம்பாமல் வெளியில் இருந்தும் பரிசோதனை முடிவுகளை பெறுவதாக அமைச்சர் கூறுகிறார்'' என்கிறார்.
 
`` இந்தியாவில் அதிகப்படியான மரபணு மூலக்கூறு ஆய்வகங்களை உருவாக்க வேண்டும். கோவிட் தொற்று மட்டுமல்லாமல் தொடர்ந்து வெவ்வேறு தொற்றுகள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். நம்மிடம் உள்ள ஆய்வகங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதற்கேற்ப ஆய்வகங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்'' என்கிறார் ரவிக்குமார்.
 
மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு
`` தமிழ்நாட்டில் மாநில அரசின் சொந்த செலவில் டி.எம்.எஸ் வளாகத்தில் மரபணு மூலக்கூறு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் பெங்களூரு, டெல்லி ஆகியவற்றுக்கு அனுப்பி மரபணு மூலக்கூறு பரிசோதனை முடிவுகளைப் பெற்று வருகின்றனர். நாமும் அதேபோல் செய்து வருகிறோம்.
 
தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தால் உருமாறிய தொற்று வந்தாலும் அதனைக் கண்டுபிடிப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த ஆய்வகத்தைத் தொடங்கி 2 மாதங்கள் ஆகியும் இன்னமும் மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை'' என்கிறார், மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத். இவர் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலராக இருக்கிறார்.
 
தொடர்ந்து பேசிய மருத்துவர் சாந்தி, `` மத்திய அரசின் அனுமதியைப் பெறுவதற்கான பணிகள் நடந்தாலும் அதே மாதிரியை பெங்களூருவுக்கும் அனுப்பி சோதித்து வருகிறோம். காரணம், மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் நாம் செய்யும் பரிசோதனைகள் என்பது அதிகாரபூர்வமற்றதாக மாறிவிடும். விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என நினைக்கிறோம். இந்திய அரசும், பல மாநிலங்களில் இதுபோன்ற ஆய்வகங்களை அமைக்க வேண்டும்.
 
மூலக்கூறு ஆய்வில் அலட்சியமா?
தேசிய வைரலாஜி மையம் (National Institute of Virology) உள்பட 11 இடங்களில் மட்டுமே மரபணு மூலக்கூறு ஆய்வகங்கள் செயல்படுகின்றன. ஆனால், கொள்ளை நோய்கள் பெருகிக் கொண்டே போகின்றன. வைரஸ் நோய்கள் அனைத்தும் உருமாறிக் கொண்டே போகும். அது பன்றிக்காய்ச்சல், சிக்கன்குனியா, பறவைக் காய்ச்சல் ஆகியவைகளுக்கும் பொருந்தும். வைரஸ் தொற்றுக்கான ஆய்வுக்கு புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையம் மட்டுமே உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் நான்கைந்து இடங்களில் அமைக்கப்பட வேண்டும்'' என்கிறார்.
 
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, மரபணு மூலக்கூறு ஆய்வுகள் நடப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டும் சாந்தி, `` அரசின் பரிசோதனையில் எத்தனை கோவிட் பாசிட்டிவ் வருகிறதோ, அதில் 5 சதவிகிதம் பேருக்கு மரபணு மூலக்கூறு ஆய்வை நடத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அதாவது, ஒரு நாளைக்கு எட்டாயிரம் பேருக்கு பாசிட்டிவ் என வந்தால் அதில் 5 சதவிகிதம் பேருக்கு மூலக்கூறு ஆய்வு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், நாம் ஒரு சதவிகிதம் பேருக்குத்தான் பரிசோதனை செய்கிறோம். கோவிட் தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லையென்றாலும் இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால், நாம் அவ்வாறு செய்வதில்லை.
 
கடந்த அக்டோபர் மாதமே இந்தியாவில் டெல்டா திரிபு வந்தாலும் அதனை தாமதமாகத்தான் கண்டறிந்தோம். காரணம், இன்சாகாக் (insagog) என்ற அமைப்பையே டிசம்பர் மாதம்தான் மத்திய அரசு அமைத்தது. மரபணு மூலக்கூறு ஆய்வையும் தாமதமாகத்தான் நடத்தினோம். போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை எனக் கூறி அந்த அமைப்பின் தலைவர், தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவமும் நடந்தது'' என்கிறார்.
 
மேலும், `` இந்தியாவுக்கு விமானத்தில் வருகிறவர்களில் பட்டியலிடப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் இருந்து வருகிறவர்களிடம் கோவிட் தடுப்பூசி சான்று மற்றும் 72 மணிநேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சான்று ஆகிவற்றையே போதுமானதாக பார்க்கிறார்கள். ஆனால், அந்த விமானத்தில் 100 பேர் இருந்தால் அவர்களில் 5 சதவிகிதம் பேருக்கு மரபணு மூலக்கூறு ஆய்வை நடத்த வேண்டும். அதையும் முறையாகச் செய்ய வேண்டும்'' என்கிறார்.
 
பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?
மரபணு மூலக்கூறு ஆய்வு தொடர்பாக எழும் சர்ச்சைகள் குறித்து, தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``மரபணு மூலக்கூறு ஆய்வுக்காக இன்சாகாக் அமைப்புக்கு மாதிரிகளை அனுப்பி வருகிறோம். மாநில அரசின் ஆய்வகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது. இது தரப் பரிசோதனைதான். ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் கோவிட் உறுதிப்படுத்தப்பட்டால் அதில் 2 சதவிகிதம் பேருக்கு மரபணு மூலக்கூறு ஆய்வை நடத்துகிறோம். மேலும், தொடர்ந்து மரபணு மூலக்கூறு ஆய்வை நடத்தி வருகிறோம்'' என்கிறார்.
 
``ஆய்வகம் அமைத்து இரண்டு மாதங்களாகியும் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகச் சொல்கிறார்களே?'' என்றோம். `` அது ஒரு இயல்பான நடைமுறைதான். நமக்கு அனுமதி கிடைத்துவிடும். மாநில அரசின் மரபணு மூலக்கூறு ஆய்வுகள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களுக்கும் மாதிரிகளை அனுப்பி வருகிறோம். தவிர, தற்போது மேற்கொண்டு வரும் மூலக்கூறு பரிசோதனைகளே போதுமானதாக உள்ளது. மாநில அரசிடம் போதுமான அளவுக்கு வசதிகள் உள்ளன. இதனை அதிகப்படுத்த வேண்டிய தேவை எழுந்தால் நிச்சயம் உயர்த்துவோம்'' என்கிறார்.