புதன், 9 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (13:14 IST)

ஒலிம்பிக் 2024- இந்தியாவுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? தமிழக வீரர்கள் யார் யார்? முழு தகவல்

Paris 2024
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 26)அதிகாரப்பூர்வமாக தொடக்க விழாவுடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டிகள் வரை நடைபெறுகின்றன.



கடந்த 100 ஆண்டுகளில் பிரான்ஸ் தலைநகர் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

1900 மற்றும் 1924 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரத்தில் நடைபெற்றன. இப்போது மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெறுகின்றன.

இதன் மூலம் லண்டன் நகரத்​திற்குப் பிறகு மூன்​றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் என்ற பெரு​மையைப் பெற்றிருக்கிறது பாரிஸ். இதற்காக பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். 18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பாரிஸ் நகரம் மட்டுமல்லாது பிரான்சின் பிற 16 நகரங்களிலும் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த 33வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய முக்கிய தகவல்கள் என்ன? தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொள்பவர்கள் யார், இந்தியாவிற்கான பதக்க வாய்ப்புகள் என்ன?

ஒலிம்பிக் 2024- உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டு உலகின் திருவிழாவாகக் கருதப்படுகிறது. கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு, அதே நாட்டிலேயே பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறும்.

Olympics 2024


பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை பாரிஸில் நடத்தப்படவுள்ளது.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 26) மாலை நடைபெறுகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக தொடக்க விழாவை ஒரு மைதானத்தில் நடத்தாமல், பாரிஸின் புகழ்பெற்ற சீன் நதிக் கரையில் நடத்துகிறார்கள்.

இந்த தொடக்க விழாவிற்கு முன்பாகவே ரக்பி (Rugby sevens), கால்பந்து (குரூப் ஸ்டேஜ்) போன்ற சில விளையாட்டுகள் தொடங்கிவிட்டன.

இந்த ஒலிம்பிக்கின் முதல் பதக்கம் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், ஏர் ரைபிள் கலப்பு அணி (Mixed team air rifle) விளையாட்டிற்காக வழங்கப்படும். இந்தப் போட்டியின் முடிவு ஜூலை 27 சனிக்கிழமை அன்று 10:30 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் பதக்கம் ஆகஸ்ட் 11, ஞாயிற்றுக்கிழமை அன்று, அதாவது ஒலிம்பிக்கின் கடைசி நாளில் பெண்கள் கூடைப்பந்தாட்டத்திற்காக வழங்கப்படும்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பதக்கத்துடன் சேர்த்து 50,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 42 லட்சம்) பரிசுத் தொகை வழங்கப்படும் என உலக தடகள அமைப்பு அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு அனுமதி மறுப்பா?

யுக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துக் கொண்டிருப்பதால், ரஷ்யாவும் அதை ஆதரிக்கும் பெலாரஸ் நாட்டின் வீரர்களும் அந்தந்த நாட்டுக் கொடிகளுடன் ஒலிம்பிக் தொடக்க விழாவிலும், போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.

அதே சமயத்தில் நடுநிலைக் கொடியின் கீழ், தங்களது நாட்டைப் பிரிதிநிதித்துவப்படுத்தாமல் தனிப்பட்ட முறையில் போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் யுக்ரேன் கலந்துகொள்கிறது. இதற்காக 140 வீரர்கள், வீராங்கனைகள் கொண்ட குழுவை பாரிஸுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், வழக்கத்தை விட குறைவான வீரர்களைதான் யுக்ரேன் அனுப்பியுள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உயிரிழந்தது இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. போர் சூழல் காரணமாக வீரர்கள், வீராங்கனைகள் முறையான பயிற்சி எடுத்துக்கொள்ள முடியாததும் ஒரு காரணம்.

பதக்கங்களை வெல்ல காத்திருக்கும் இந்திய வீரர்கள்

ஏறக்குறைய 100 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கிறது இந்தியா. இதுவரை 10 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள், 16 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 35 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பதக்கம் வெல்லும் முனைப்பில் பங்கேற்கிறார்கள். இதில் தமிழ்​நாட்டைச் சேர்ந்த 13 பேர் தடகளம், பாய்​மரப் படகு, துப்​பாக்​கிச் சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளை​யாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.

இம்முறை ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீரஜ் சோப்ரா மீதான எதிர்பார்ப்பு

நீரஜ் சோப்ரா, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் (கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021இல் தான் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன). அவர் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

neeraj chopra


தடகளப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும். மேலும், இதுதான் தனிநபர் போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது தங்கப் பதக்கம். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இம்முறையும் இந்தியாவின் பார்வை நீரஜ் சோப்ரா மீதுதான் இருக்கும். அவரைத் தவிர, இளம் வீராங்கனைகளான ஜெனா மற்றும் அன்னு ராணியும் ஈட்டி எறிதலில் பங்கேற்கவுள்ளனர்.

ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அன்னு ராணி பங்கேற்கும் பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதியும், பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

தொடர் ஓட்டப் போட்டிகள்

4X400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தகுதிச் சுற்று ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் சார்பாக முகமது அனாஸ் யாஹியா, முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பெண்கள் பிரிவில் ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், மற்றும் எம்.ஆர்.பூவம்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதன் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறும்.

பளு தூக்குதலில் மீண்டும் பதக்கம் கிடைக்குமா?

மீராபாய் சானு, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக மகளிர் பளு தூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மீண்டும் இம்முறை பாரிஸில், இந்தியக் கொடியுடன் பதக்க மேடையை அவர் அலங்கரிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தங்கம் வெல்வாரா பி.வி சிந்து

PV Sindhu

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து களமிறங்குகிறார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றார் சிந்து. உலகத் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள சிந்து, இம்முறை தங்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரனாய் மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் களமிறங்குகிறார்கள்.

தடைகளைக் கடந்து களமிறங்கும் இந்திய மல்யுத்த அணி

டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) இரண்டு பதக்கங்கள், 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் உலக அளவிலான ஜூனியர் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பான செயல்திறன் என இந்திய மல்யுத்த அணி வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது.

ஆனால் கடந்தாண்டு அப்போதைய மல்யுத்த சங்கத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்திய போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இந்த சர்ச்சையை தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு நெருக்கமான சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மத்திய அரசு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது.

இந்த காலகட்டத்தில், தேசிய மல்யுத்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை, சோதனைகள் நடத்தப்படவில்லை. மல்யுத்த வீரர்களால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு பதக்கங்கள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஜ்ரங் புனியா, தீபக் புனியா மற்றும் ரவி தாஹியா போன்ற மூத்த மல்யுத்த வீரர்களால் பாரீஸ் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.

மல்யுத்தத்தில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அரிஹந்த் பங்கல் (53 கிலோ), வினேஷ் போகத் (50 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ), ரித்திகா ஹூடா (76 கிலோ), நிஷா தாஹியா (68 கிலோ) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஆடவர் பிரிவில், 57 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் இந்தியா சார்பில் அமன் செஹ்ராவத் மட்டுமே பங்கேற்கிறார்.

இந்த போட்டிகள் ஆகஸ்ட் 5 முதல் 11 வரை நடைபெறும்.

சாதிக்குமா இந்திய ஹாக்கி அணி?

indian hockey

இந்திய மகளிர் ஹாக்கி அணியால் இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. ஆடவர் ஹாக்கி அணி ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்று இருந்தது.

இந்திய அணி, ஜூலை 27ஆம் தேதி அன்று நடக்கும் தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜூலை 29ஆம் தேதி அர்ஜென்டினாவையும், ஜூலை 30ஆம் தேதி அயர்லாந்தையும், ஆகஸ்ட் 1ஆம் தேதி பெல்ஜியத்தையும், ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும் இந்தியா எதிர்கொள்கிறது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி காலிறுதிப் போட்டியும், ஆகஸ்ட் 6ஆம் தேதி அரையிறுதிப் போட்டியும், ஆகஸ்ட் 8ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.

தமிழ்நாட்டின் 13 வீரர்கள், வீராங்கனைகள்

சரத் கமல்: டேபிள் டென்னிஸ் வீரரான இவர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லவிருக்கிறார். ஐந்தாவது முறையாக ஒலிம்பிக்கில் விளையாட உள்ள சரத், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் மற்றும் அணிகள் பிரிவில் களமிறங்குகிறார்.

இளவேனில் வாலறிவன்: 2019, பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற போது இவர் கவனம் பெற்றார். கடலூரைச் சேர்ந்த இவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மற்றும் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் போட்டியிடுகிறார். சர்வதேசத் தொடர்களில் பல வெற்றிகளைக் குவித்தவர், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் இருக்கிறார்.



நேத்ரா குமணன்: சென்னையைச் சேர்ந்த இவர், பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதி பெற்றிருந்தார்.

விஷ்ணு சரவணன்: இவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.

சுபா வெங்கடேசன்: 2023இல் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் கலப்பு தொடர் ஓட்டத்திலும், மகளிர் (4X400) தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றவர். இதற்கு முன்பாக டோக்கியோ ஒலிம்பிக் வரை சென்றவர் தகுதிச் சுற்றில் வெளியேறினார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 4000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

வித்யா ராம்ராஜ்: 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றவர். பாரிஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் பங்கேற்கிறார்.

இவர்கள் தவிர்த்து நீளம் தாண்டுதலில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின், ஆடவர் 4x400 மீட்டர் ரிலே போட்டியில் திருச்சியைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ், 4X400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் போட்டியில் சந்தோஷ் குமார் தமிழரசன்,

துப்பாக்கி சுடுதலில் ஷாட்கன் பிரிவில் களமிறங்கும் திருச்சியைச் சேர்ந்த பிருத்திவிராஜ் தொண்டைமான், தடகளம் மும்முறை தாண்டுதல் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ள பிரவீன் சித்திரவேல், டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் அனுபவம் வாய்ந்த ரோகன் போபண்ணாவுடன் களமிறங்கும் என். ஸ்ரீராம் பாலாஜி என தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்குகின்றனர்.

டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன், மாற்று வீரராக பாரிஸ் செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.