திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (22:01 IST)

ஓலா, ஊபர்: பயணம் புக் ஆன பிறகு ஓட்டுநர்கள் ரத்து செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பேருந்தில் சென்றால் 15 ரூபாய் டிக்கெட்டாக இருக்கும் ஆனால் வசதி, காத்திருக்க நேரமில்லை, குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் என பல்வேறு காரணங்களுக்காக நாம் ஓலா மற்றும் ஊபர் சேவைகளை நாடுகிறோம்.
 
ஆனால் ஓலா ஊபர் சேவைகளிலும் பல சிக்கல்கள் இல்லாமல் இல்லை. பல சமயங்களில் ஓட்டுநர்கள் பல்வேறு காரணங்களுக்காக பயணத்தை ரத்து செய்வது கடைசி நேர பதற்றத்திற்கு வித்திடுகிறது.
 
கார் ஓட்டுநர்கள் சவாரியை ரத்து செய்வது ஏன்? இதுபோன்ற அனுபவம் நேர்ந்தால், பாதிக்கப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை தருகிறது இக்கட்டுரை.
 
முன்பதிவு செய்த பயணத்தை ரத்து செய்யும்படி நுகர்வோரை கட்டாயப்படுத்துவது “நியாயமற்ற வர்த்தக நடைமுறை” மட்டுமல்ல, நுகர்வோர் உரிமைகளை மீறும் செயல் ஆகும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) கடந்த மே மாதம் கூறியிருந்தது.
 
கேப் (Cab) பயண சேவையை வழங்கும் ஓலா, ஊபர் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸும் அனுப்பி இருந்தது சிசிபிஏ.
 
பதிவு செய்யப்பட்ட பயணங்கள் ரத்து செய்யப்படுவது தொடர்பாக ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் மீது நிறைய புகார்கள் வந்தன. அதையடுத்து, இப்புகார்களுக்கு உரிய விளக்கம் அளிக்க கோரி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார் சிசிபிஐ-ன் தலைமை ஆணையரான நிதி காரே.
 
தேசிய நுகர்வோர் உதவி எண்ணின் புள்ளிவிவரப்படி, 2021 ஏப்ரல் 1 முதல் 2022 மே மாதம் 1 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஓலா நிறுவனத்திற்கு எதிராக 2,482 புகார்களும், ஊபர் நிறுவனத்தின் மீது 770 புகார்களும் பதிவாகி உள்ளன.
 
இந்த புகார்களை அடுத்து கேப் போக்குவரத்து சேவையை அளித்து வரும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்தி கொள்ள வேண்டும் அல்லது இந்த தொடர் புகார்களின் அடிப்படையில் அவற்றின் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என்று நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் அண்மையில் முக்கிய கூட்டம் நடைபெற்றது. இதில் ஓலா, ஊபர்,ரேபிடோ மற்றும் மிரு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
முன்பதிவு செய்த பயணத்தை ரத்து செய்ய சொல்லி, பயணிகளை கார் ஓட்டுநர்கள் வற்புறுத்துவது தொடர்பாக புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நுகர்வோர் சேவை பிரிவில் முறையான பதில் அளிக்கப்படுவதில்லை என்ற ஆதங்கமும் நுகர்வோர் மத்தியில் இருந்து வருகிறது. இத்துடன் பயணக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வற்புறுத்துவது, பயணக் கட்டணத்துடன் சேர்த்து கூடுதல் பணம் கேட்பது போன்ற புகார்களும் ஓட்டுநர்கள் மீது எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
 
ஓட்டுநர்கள் பயணத்தை ரத்து செய்ய சொல்ல என்ன காரணம்?
 
கார் ஓட்டுநர்கள் மீது இப்படி பல்வேறு புகார்கள் இருக்கும் போது, இவற்றில் பிரதானமானது புக் ஆன பயணத்தை ரத்து செய்ய கோரி அவர்கள் பயணிகளை வற்புறுத்துவது தான். நுகர்வோரை கார் ஓட்டுநர்கள் இந்த வற்புறுத்தலுக்கு ஆளாக்க முக்கிய காரணம், வாடிக்கையாளர் தரப்பில் இருந்து பயணம் ரத்து செய்யப்பட்டால் அதற்கும் அவர்கள் கட்டணம் (Cancellation Levy) செலுத்த வேண்டும் என்பதுதான்.
 
வாடிக்கையாளர்கள் பயணக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த உள்ளது தெரிய வந்தால், அந்த பயணங்களை ரத்து செய்யும்படி நுகர்வோரை டிரைவர்கள் அடிக்கடி அறிவுறுத்துகின்றனர். இதேபோன்று நுகர்வோர் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணிக்க விரும்பாதபோதோ அல்லது பயணப் பாதை கூட்ட நெரிசல் மிக்கதாக இருக்கும் என்று தெரிய வந்தாலோ அந்த பயணங்களை ரத்து செய்ய ஓட்டுநர்கள் முடிவெடுக்கின்றனர்.
 
இந்த முடிவை தங்கள் தரப்பில் இருந்து செயல்படுத்தினால், நிறுவன நிர்வாகம் தங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சமும் ஓட்டுநர்கள் மத்தியில் இருக்கிறது. இதன் காரணமாக தான், பயணிகள் தரப்பில் இருந்தே அவர்களின் பயணத்தை ரத்து செய்யும்படி ஓட்டுநர்கள் கூறுகின்றனர். அவர்கள் விருப்பப்படி நுகர்வோர் நடக்காமல், கார் வந்துதான் ஆக வேண்டும் என்று விடாப்படியாக இருந்தால், அவர்களை ‘பிக்-அப்’ செய்ய, வேண்டுமென்றே தாமதமாக வரும் உத்தியையும் சில ஓட்டுநர்கள் கடைபிடிக்கின்றனர்.
 
“நுகர்வோர் பயணத்தை ரத்து செய்தால் அதற்காக விதிக்கப்படும் அபராத தொகை குறித்த விவரம், சவாரிக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் செயலியில் தெளிவாக தெரிவதில்லை. இந்த நிலையில், பயணத்தை ரத்து செய்யும்படி டிரைவர்கள் வற்புறுத்தும் போது, அதற்கான அபராத தொகையை வாடிக்கையாளர்கள் தான் செலுத்த வேண்டி உள்ளது” என்கிறது சிசிபிஏ.
 
பயண பதிவை ரத்து செய்ய வற்புறுத்தப்படுவது போன்ற தங்களின் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஓலா நிறுவனம் இறங்கி உள்ளது.
 
வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், கேப் முன்பதிவில் ‘பிரைம் பிளஸ்’ எனும் வசதி மே 28 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார் ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பாவேஷ் அகர்வால்.
 
பெங்களூரு மாநகரில் பரிட்சார்த்த முறையில் இந்த வசதி தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில், “சிறந்த ஓட்டுநர்களின் ஒத்துழைப்புடன் முன்பதிவு பயணங்கள் எதுவும் ரத்து செய்யாதபடி, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது” என்கிறார் அவர்.
 
பிரைம் பிளசில் குறிப்பிடப்பட்டுள்ள பயணக் கட்டண விவரங்கள் தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டை அகர்லால் பகிர்ந்துள்ளார். அதில், பெங்களூரில் உள்ள கிரீன் சிட்டி சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் (HAL) அமைந்துள்ள பிரதான சாலைக்கு செல்ல பயணக் கட்டணம் 455 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே குறிப்பிட்ட இந்த இடங்களுக்கு ரெகுலர் காரை ஓலா மினி கேப் சேவையாக பயணிகள் பயன்படுத்தினால், அதற்கு கட்டணம் 535 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மினி கேப் சேவைக்கு, பிற வகை கார் சேவைகளை விட குறைந்த கட்டணத்தையே ஓலா நிறுவனம் வசூலித்து வருகிறது.
 
இருப்பினும், சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், நடைமுறைக்கு வரும்போது பயணக் கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்பதே வாடிக்கையாளர்களின் அனுமானமாக உள்ளது.
 
வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் ஓலா நிறுவனம் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்,ஊபர் நிறுவனம் வேறுவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
பயணக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தும் முறையை (ஆன்லைன் பேமண்ட் அல்லது ரொக்கமாக தருவது) ஓட்டுநர்கள் முன்கூட்டியே அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஊபர் நிறுவனத்தின் வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, கூடிய விரைவில் அனைத்து நகரங்களிலும் செயல்படுத்தப்படும் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பயண கட்டணத்தை ஓட்டுநர்கள் ரொக்கமாக பெற விரும்பினால், தங்களின் இந்த விருப்பப்படி வாடிக்கையாளர்களை முன்கூட்டியே தேர்வு செய்ய இயலும். இதனால் பயணங்கள் ரத்து செய்யப்படுவது குறையும் என்கிறது ஊபர் நிறுவனம்.
 
இதேபோன்று, ஆன்லைனில் பயணக் கட்டணத்தை செலுத்துவதில் சிரமங்களை சந்திக்கும் வாடிக்கையாளர்கள், கட்டணத்தை ரொக்கமாக விரைந்து செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அத்துடன், வாடிக்கையாளர்கள் செல்ல விரும்பும் இடங்கள் குறித்த விவரத்தையும் ஓட்டுநர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது என்று ஊபர் நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஓட்டுநர்கள் அந்த இடத்திற்கான பயணத்தை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய இயலும். இதன் பயனாகவும், ரத்து செய்யப்படும் பயணங்களின் எண்ணிக்கை குறையும் என்கிறது ஊபர் நிறுவனம்.
 
கார் ஓட்டுநர்கள் தாங்களாகவே பயணப் பதிவை ரத்து செய்தாலோ, சவாரிக்கு வராவிட்டாலோ பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கிறார் ஹைதராபாத் மாநகர போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் கே.பி.வி,ராஜு.
 
“வாடிக்கையாளர்கள் பயணப் பதிவை தாங்களாகவே ரத்து செய்யக்கூடாது. ஓட்டுநர்கள் இப்படி செய்தாலோ அல்லது சவாரிக்கு வராவிட்டாலோ குறிப்பிட்ட நிறுவனத்தின் செயலியில் தெரியும் காரின் பதிவெண் விவரத்தை மொபைல்ஃபோனில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க வேண்டும். அதன்பின், குறிப்பிட்ட பயணம் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களுடன் மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு ட்விட்டர் அல்லது வாட்ஸ்அப் வாயிலாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்.
 
அந்த புகாரில் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டு நிரூபணமானால், மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988 இன் பிரிவு 178 இன்படி, சம்பந்தப்பட்ட தனியார் கார் உரிமையாளரிடம் இருந்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இதுவே அரசு பேருந்துகளில் இதுபோன்று பயணம் ரத்து செய்யப்பட்டால், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.
 
ஆனால் நடைமுறையில் இந்த பிரச்னை சற்று சிக்கலானது. காரணம், ஒரு குறிப்பிட்ட தினத்தில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கான கேப் டிரைவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை, கேப் சேவையை வழங்கும் நிறுவனங்கள் தினமும் மாலைக்குள் ஓட்டுநர்களின் கணக்கில் செலுத்தி விட வேண்டும். கேப் நிறுவனங்கள் இதை செய்ய தவறும் பட்சத்தில் ஓட்டுநர்கள் பொருளாதார ரீதியாக சிக்கலை சந்திக்க நேரிடும். எனவே, டிரைவர்களுக்கு சேர வேண்டிய தொகை குறித்த நேரத்தில் அவர்களுக்கு கிடைக்கப்பெறுவதைப் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் பயனாக ஆன்லைனில் கட்டணம் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்களின் பயணப் பதிவை ஓட்டுநர்கள் ரத்து செய்யும் போக்கு தவிர்க்கப்படும்” என்கிறார் காவல் துறை அதிகாரியான ராஜு.