1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (00:19 IST)

ஆப்கனை விட்டு வெளியேற காலக்கெடு நீட்டிக்கப்படாது: தாலிபன் செய்தித்தொடர்பாளர்

ஆப்கனை விட்டு வெளியேற காலக்கெடு நீட்டிக்கப்படாது: தாலிபன் செய்தித்தொடர்பாளர்
 
ஜபியுல்லா முஜாஹிதி, தாலிபன் செய்தித்தொடர்பாளர்Image caption: ஜபியுல்லா முஜாஹிதி, தாலிபன் செய்தித்தொடர்பாளர்
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற விதிக்கப்பட்ட காலக்கெடு ஆகஸ்ட் 31க்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று தாலிபன் அறிவித்துள்ளது.
 
இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு காலக்கெடு நீட்டிக்கப்படும் என நான் கருதவில்லை," என்று கூறினார்.
 
"எங்களுடைய தாயகத்தை விட்டு வெளிநாட்டினர் வெளியே செல்ல போதுமான அளவுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது," என்று அவர் தெரிவித்தார்.
 
தாலிபன் ஆளுகையின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்த பிறகு அந்த நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்களை வெளியேற்ற ஒவ்வொரு நாடும் முயற்சி செய்து வருகின்றன.
 
ஆனாலும், ஆகஸ்ட் 31க்குள் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்களா என்பது கேள்விக்குரியதாகியிருக்கிறது.
 
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர், "ஆப்கானிஸ்தானை விட்டு எந்தவொரு ஆப்கானியரும் வெளியே செல்வதை நாங்கள் விரும்பவில்லை.
 
அதே சமயம், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகளுக்கு உதவியவர்கள் வெளியேற எந்த கட்டுப்பாடும் கிடையாது," என்று தெரிவித்தார்.
 
சிஐஏ இயக்குநரும் தாலிபன் தலைவரும் இன்று ரகசிய சந்திப்பு நடத்தினார்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று ஜபியுல்லா முஜாஹித் கூறினார்.