செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (15:02 IST)

இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) இன்று காலமானார்.
 
கோவிட் தொற்று காரணமாக கடந்த 13ம் தேதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, தீவிர சிகிச்சை பிரிவில் பின்னர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தின.
 
இலங்கையின் தென் பகுதியான மாத்தறை மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி மங்கள சமரவீர பிறந்தார். 1983ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக, தனது அரசியல் வாழ்க்கையை மங்கள சமரவீர ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, 1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.
 
1994ம் ஆண்டு சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஆட்சி அமைத்த அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டிருந்தார். 2004ம் ஆண்டு துறைமுகம், விமான சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.
 
2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.
 
2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இலங்கையின் நிதி அமைச்சராக, மங்கள சமரவீர செயற்பட்டிருந்தார். சுமார் 35 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவத்தை கொண்ட மங்கள சமரவீர, 2019ம் ஆண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும், சில அரசியல் செயற்பாடுகளை இறுதித் தருணங்களில் முன்னெடுத்து வந்திருந்தார்.
 
இவ்வாறான நிலையிலேயே, கோவிட் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.